புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் -72. இனியோனின் வஞ்சினம்!

2775 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

 

72. இனியோனின் வஞ்சினம்!

பாடியவர்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
பாண்டிய நாட்டை மிகச் சிறப்பாக ஆட்சி புரிந்த மன்னர்களில் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் ஓருவன். நிலந்தரு திருவீர் பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் கடைச் சங்க காலத்துப் பாண்டிய மன்னர்களுள் முதன்மையானவன். அவனுக்குப் பிறகு முடத்திருமாறன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டதாக வரலாறு கூறுகிறது.

பாண்டியன் முடத்திருமாறனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்டவன் பாண்டியன் பல்யாகசாலை முடுகுடுமிப் பெருவழுதி. இவன் பல யாகங்களைச் செய்ததால் அவ்வாறு அழைக்கப் பட்டான். இவனுக்குப் பிறகு இவன் மகன் நெடுஞ்செழியன் என்பவன் பாண்டிய நாட்டின் பெரும் பகுதியை மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்தான். இவன் வட நாட்டுக்குச் சென்று போரிட்டு அங்குள்ள மன்னர்களை வென்றதால் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்று அழைக்கப்பட்டான்.

இவன் கண்ணகியின் கணவன் கோவலனைக் கள்வன் என்று பழி சுமத்திக் கொலை செய்தான். தன் தவற்றை உணர்ந்த பின், “யானோ அரசன்?, யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் காவல் என்முதல் பிழைத்தது” என்று கூறி உயிர் துறந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. நெடுஞ்செழியன் இறந்த பிறகு, அவன் தம்பி வெற்றிவேற் செழியன் என்பவன் பாண்டிய நாட்டை ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான். வெற்றிவேற் செழியன் இறந்தவுடன் அவன் மகன் நெடுஞ்செழியன் என்பவன் பாண்டிய நாட்டுக்கு மன்னனாக சிறுவதிலேயே முடிசூட்டப்பட்டான்.

இவன் ஆட்சிக்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு, சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள் மற்றும் பொருநன் ஆகிய எழுவரும் தலையாலங்கானம் என்னும் இடத்தில் இவனை எதிர்த்துப் போர் செய்தனர். தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வெற்றி பெற்றதால் இவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்று சிறப்பிக்கப்பட்டான். இவனைப்பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் சின்னமனூர், வேள்விக்குடி ஆகிய இடங்களில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகளில் காணப்படுவதாக வரலாறு கூறுகிறது. இவனைப் புகழ்ந்து பாடியவர்கள் பலர். புறநானூற்றில் 12 பாடல்களில் இவன் புகழ் கூறப்படுகிறது. பத்துப்பாட்டில் மாங்குடி மருதனார் இயற்றிய மதுரைக் காஞ்சி என்ற பாடலுக்கும் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை என்ற பாடலுக்கும் பாட்டுடைத் தலைவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்பது குறிப்பிடத் தக்கது.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஒர் சிறந்த அரசன் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த புலவனாகவும் திகழ்ந்தான் என்பது புறநானூற்றில் அவன் இயற்றிய இந்தப் பாடல் மூலம் தெரிய வருகிறது.

பாடலின் பின்னணி: தலையாலங்கானத்தில் பகைவர் எழுவரும் ஒன்று கூடிப் போரிட வந்தனர் என்பதை அறிந்த நெடுஞ்செழியன், “ நான் இளையவன் என்று நினைத்து என் வலிமையை அறியாமல் இவர்கள் என்னிடம் போரிட வந்திருக்கிறார்கள். நான் அவர்களைப் போரில் அழிப்பேன்; அங்ஙனம் நான் அவர்களை அழிக்காவிட்டால், என் குடிமக்கள் என்னைக் கொடுங்கோலன் என்று தூற்றட்டும்; புலவர்கள் என்னைப் பாடது என் நாட்டைவிட்டு நீங்கட்டும்; இரவலர்க்கு ஈயவொண்ணாத கொடிய வறுமையும் என்னை வந்து சேரட்டும்” என்று வஞ்சினம் கூறுகிறான்.

திணை: காஞ்சி; துறை: வஞ்சினக் காஞ்சி

பாடல் :

நகுதக் கனரே, நாடு மீக் கூறுநர்;
இளையன் இவன் என உளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தாள்
நெடுநல் யானையும், தேரும், மாவும்,

5 படைஅமை மறவரும், உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது, உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப் படேஎன் ஆயின்; பொருந்திய

10 என் நிழல் வாழ்நர் சென்னிழல் காணாது,
கொடியன்எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக்,
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,

15 உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

அருஞ்சொற்பொருள்:
1. மீக்கூறல் = புகழ்தல். 2. உளைதல் = மிக வருந்துதல். 3. படு = பெரிய; இரட்டுதல் = மாறி மாறி ஒலித்தல்; பா = பரவுதல். பணை = பருமை. 6. உறு = மிக்க; துப்பு = வலிமை; செருக்குதல் = அகங்கரித்தல். 7. சமம் = போர். 8. அகப்படுத்தல் = சிக்கிக்கொள்ளுதல், பிடிக்கப்படுதல். 10. செல்நழல் = சென்றடையும் நிழல். 16. வரைதல் = நீக்கல். 17 புன்கண் = துயரம்; கூர்தல் = மிகுதல்

உரை: “இந்த நாட்டைப் புகழ்ந்து கூறுபவர்கள் ஏளனத்துக்குரியவர்கள்; இவன் இளையவன்” என்று என் மனம் வருந்துமாறு கூறி, தங்களிடத்து மாறி மாறி ஒலிக்கும் மணிகளணிந்த பரந்த பெரிய பாதங்களையுடைய நெடிய நல்ல யானைகளும், தேர்களும், குதிரைகளும் படை வீரர்களும் இருப்பதை எண்ணி, எனது வலிமையைக் கண்டு அஞ்சாது, என்னைப்பற்றி இழிவாகப் பேசும் சினத்தொடு கூடிய வேந்தரைப் பொறுத்தற்கரிய போரில் அழியுமாறு தாக்கி அவர்களையும் அவர்களது முரசுகளையும் கைக்கொள்வேன்.

நான் அவ்வாறு செய்யேனாயின், என் குடை நிழலில் வாழும் மக்கள் சென்றடைய வேறு இடமில்லாமல், “ எம் வேந்தன் கொடியவன்” என்று கண்ணீர் வடித்து அவர்களால் கொடுங்கோலன் என்று தூற்றப்படுவேனாக. மற்றும், மிகுந்த சிறப்பும் உயர்ந்த கேள்வியுமுடைய மாங்குடி மருதன் முதல்வனாக உலகத்தோடு நிலைபெற்ற பலரும் புகழும் புலவர்கள் என்னைப் பாடாது என் நாட்டைவிட்டு நீங்குக. என்னால் காப்பாற்றப்படுபவர் துயரம் மிகுந்து என்னிடம் இரக்கும் பொழுது அவர்கட்கு ஈகை செய்ய இயலாத வறுமையை நான் அடைவேனாக.

சிறப்புக் குறிப்பு: முந்திய பாடலில் பூதப்பாண்டியன் கூறியதைப்போல், இப்பாடலில் பாண்டியன் தலயாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மக்களால் கொடுங்கோலன் என்று கருதப்படுவது ஒரு பெரும்பழி என்று எண்ணுவதைக் காண்கிறோம். மற்றும் புலவர்களால் புகழ்ந்து பாடப்படுவது ஒரு தனிச் சிறப்பு என்பதும் அதை மன்னர்கள் பெரிதும் விரும்பினார்கள் என்பதும் இப்பாடலில் காண்கிறோம். தன்னிடம் இரப்பவர்க்கு ஈகை செய்யவியலாத அளவுக்கு வறுமையை அடைவது இறப்பதைவிடக் கொடுமையானது என்ற கருத்தை “ சாதலின் இன்னாதது இல்லை; இனிது அதூஉம் ஈதல் இயையாக் கடை” என்ற குறளில் (குறள் – 230) திருவள்ளுவர் கூறுகிறார். இக்குறளுக்கும் இப்பாடலில் இம்மன்னன் கூறும் கருத்துக்கும் உள்ள ஒற்றுமை சிந்திக்கத் தக்கது.

 

72. இனியோனின் வஞ்சினம்!

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

Buy Book From amazon:

புறநானூறு: புதிய வரிசை வகை by பேராசிரியர் சாலமன் பாப்பையா
புறநானூறு மூலமும் உரையும் by உ.வே.சாமிநாதையர்

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 67. அன்னச் சேவலே!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 67. அன்னச் சேவலே! பாடல் ஆசிரியர்: பிசிராந்தையார் (67, 184, 191, 212). பிசிர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 22. ஈகையும் நாவும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 22. ஈகையும் நாவும்! பாடல் ஆசிரியர்: குறுங்கோழியூர் கிழார். இவரை பற்றிய குறிப்புகளைப் பாடல் 17 – இல் காண்க.பாடப்பட்டோன்:…
போரும் சோறும் - புறநானூறு 2

2. போரும் சோறும் | புறநானூறு

Posted by - ஜூலை 23, 2019 0
பொற்சிகரங்களையுடைய இமயமமும் பொதியமும் போல் , பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் மாறினாலும்...
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 4. தாயற்ற குழந்தை!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 4. தாயற்ற குழந்தை! பாடல் ஆசிரியர்: பரணர்(4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348,…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 70. குளிர்நீரும் குறையாத சோறும்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
  புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்   புறம் 70. குளிர்நீரும் குறையாத சோறும் 70. குளிர்நீரும் குறையாத சோறும் பாடியவர்: கோவூர் கிழார்:    …

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன