புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!

1387 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
8. கதிர்நிகர் ஆகாக் காவலன்!

பாடல் ஆசிரியர்: கபிலர் (8, 14, 105 – 111, 113 – 124, 143, 200, 201, 202, 236, 337, 347)
இவர் பாண்டிய நாட்டைச் சார்ந்த திருவாதவூரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர். ”புலன் அழுக்கற்ற அந்தணாளன்” என்று மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவரால் புகழப்பட்டவர் (புறநானூறு – 126). கபிலர் பாடியதாக 278 செய்யுட்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, இவர் புறநானூற்றில் 28 பாடல்களையும் கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29 செய்யுட்களையும் இயற்றியுள்ளார். ஆரிய அரசன் பிரகத்தனுக்கு தமிழின் இனிமையை எடுத்துரைக்க, இவர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டில் உள்ளது. இவர் குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் இயற்றுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இவரால் பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரல் இரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி.

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப்பற்றி இவர் இயற்றிய பாடல்கள் பதிற்றுப் பத்தில் ஏழாம் பதிகமாக அமைந்துள்ளது. இவர் இயற்றிய பதிகத்தால் பெருமகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன், நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம் இவருக்குப் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் நூறாயிரம் பொற்காசுகளும் தந்தான். ஆனால், கபிலர் தான் பெற்ற பரிசையெல்லாம் பிறருக்கு அளித்து, பரிசிலராகவும் துறவியாகவும் வாழ்ந்தார்.

இவர் வேள் பாரியின் நெருங்கிய நண்பர். வேள் பாரி இறந்தபின், அவன் மகளிர்க்குத் திருமணம் செய்யும் பொறுப்பினை ஏற்றுப் பல முயற்சிகள் செய்தார். முடிவில், பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துத் தான் வடக்கிருந்து உயிர் நீத்தார்.

கபிலர் என்ற பெயருடைய வேறு சில புலவர்களும் இருந்ததாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பாடப்பட்டோன்: சேரமான் கடுங்கோ வாழியாதன்( 8, 14, 387). இவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்றும் அழைக்கப்பட்டான். பதிற்றுப்பத்தில், “ பொறையன் பெருந்தேவி ஈன்ற மகன்” என்று கூறப்படுவதிலிருந்து இவன் அந்துவஞ் சேரல் இரும்பொறைக்கும் பொறையன் பெருந்தேவிக்கும் மகனாகப் பிறந்தவன் என்பது தெரிய வருகிறது. இவன் 25 ஆண்டு காலம் சேர நாட்டை வெகு சிறப்பாக ஆட்சி புரிந்ததாக வரலாறு கூறுகிறது. இவன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனுக்குப் பிறகு சேர நாட்டை ஆண்டதாகக் கருதப் படுகிறது. இவன் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டாக இருக்கலாம்.

இவன் திருமாலிடத்துப் பெரும் ஈடுபாடு உடையவன். பதிற்றுப்பத்தின் ஏழாம் பதிகம் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனனை கபிலர் பாடியது. கபிலர் பாட்டால் பெரு மகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலருக்கு நூறாயிரம் பொற்காசுகளையும் நன்றா என்ற மலையில் இருந்து கண்ணுக்கெட்டியவரை உள்ள நிலப்பகுதியையும் பரிசாக அளித்ததாகக் கூறப்படுகிறது.

பாட்டின் காரணம்: கதிரவனோடு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனை ஒப்பிட்டு, கதிரவன் சேரமானுக்கு இணையானவன் இல்லை என்று இப்பாடலில் கபிலர் கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன்மொழி; பூவை நிலையும் ஆகும்.
இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.
பூவை நிலை. மனிதரைத் தெவரோடு உவமித்துக் கூறுதல்.

வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.

அருஞ்சொற்பொருள்:
1. காவலர் = அரசர்; வழிமொழிதல் = வழிபாடு கூறுதல். 2. போகம் = இன்பம். 3. துரப்புதல் = துரத்துதல், முடுக்குதல். 4. ஒடுங்கா = சுருங்காத; ஓம்புதல் = பாதுகாத்தல். 5. கடத்தல் = போர் செய்தல்; அடுதல் = கொல்லுதல். 6. வீங்கு = மிக்க; செலவு = பயணம் ; மண்டிலம் = வட்டம். 7. வரைதல் = நிர்ணயித்தல்; இறத்தல் = நீங்குதல், கடத்தல். 9. அகல் = அகன்ற.

கொண்டு கூட்டு: வீங்கு செலல் மண்டிலமே, வரைதி, இறத்தி, வருதி, ஒளித்தி, நீ விசும்பினானும் பகல் விளங்குதி; இக்குறைபாடுகளை உடைய நீ சேரலாதனை எங்ஙனம் ஒத்தியோ?

பாடல் விளக்கம்: பெரிய வட்டவடிவமான பாதையில் செல்லும் கதிரவனே! உலகைக் காக்கும் மன்னர்கள் பலரும் வழிபட்டு நடக்க, இன்பத்தை விரும்பி, இவ்வுலகு அனைவருக்கும் பொது என்ற சொல் பொறுக்காமல், தன் நாடு சிறியது என்ற எண்ணத்தால் துரத்தப்பட்டு, ஊக்கமுடைய உள்ளத்தையும், குறையாத ஈகையையும் பகைவரை வெல்லும் படையையும் உடையவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன். உனக்குப் பகல் இரவு என்ற எல்லை உண்டு; பகல் முடிந்ததும் புறமுதுகிட்டு ஓடுவாய்; மாறி மாறி வருவாய்; மலைகளில் மறைந்து விடுவாய்; அகன்ற, பெரிய ஆகாயத்தில் பகலில் மட்டும் பல கதிர்களை விரித்து விளங்கும் நீ, எவ்வாறு சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கு நிகராவாய்?

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 50. கவரி வீசிய காவலன்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 50. கவரி வீசிய காவலன்! பாடல் ஆசிரியர்: மோசிகீரனார் (50, 154, 155, 156, 186). இவர் மோசி என்பவரின்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 19. எழுவரை வென்ற ஒருவன்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 19. எழுவரை வென்ற ஒருவன் பாடல் ஆசிரியர்: குடபுலவியனார். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 18 -இல் காண்க.பாடப்பட்டோன்: பாண்டியன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 41. காலனுக்கு மேலோன்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 41. காலனுக்கு மேலோன்! பாடல் ஆசிரியர்: கோவூர் கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 31-இல் காண்க.பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 10. குற்றமும் தண்டனையும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 10. குற்றமும் தண்டனையும்! பாடியோர்: ஊன்பொதி பசுங்குடையார் (10, 203, 370, 378). இப்புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. பனையோலையால் குடை…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 55. அறநெறி முதற்றே அரசின் கொற்றம்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 55. அறநெறி முதற்றே அரசின் கொற்றம் பாடல் ஆசிரியர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 52-இல்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன