புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

2822 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
9. ஆற்றுமணலும் வாழ்நாளும்!

பாடல் ஆசிரியர்: நெட்டிமையார். நெட்டிமையார் (9, 12, 15). இவர் நெடுந்தொலைவிலுள்ள பொருளைக் கூர்ந்து நோக்கி அறியும் திறமை வாய்ந்தவர் என்ற காரணத்தினால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் பாடல் விளக்கம் நூலில் கூறுகிறார். இவர் கண்ணிமை நீண்டு இருந்ததால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கூறுவாரும் உளர். இப்பாடலில் பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை, பஃறுளி ஆற்று மணலினும் பலநாள் வாழ்க என்று நெட்டிமையார் வாழ்த்துவதிலிருந்து இவர் பஃறுளி ஆறு கடலால் கொள்ளப் படுவதற்கு முந்திய காலத்தவர் என்பது தெரிய வருகிறது.
பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனைப் பற்றிய குறிப்புகளை பாடல் 6-இல் காண்க.
பாட்டின் காரணம்: இப்பாடலில், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போருக்குப் போகுமுன் பசு, பார்ப்பனர், பெண்டிர், பிணியுடையோர், ஆண் பிள்ளை இல்லாதோர் ஆகியோரைப் பாதுகாவலான இடத்திற்குச் செல்லுமாறு அறை கூவிப் பின்னர்ப் போர் செய்தான் என்று நெட்டிமையார் கூறுகிறார். பாண்டிய மன்னர்களில் முன்னோனாகக் கருதப்படும் நெடியோனைப் பற்றிய செய்திகளும் இப்பாடலில் உள்ளன.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: இயன் மொழி. இயல்பைக் கூறுதல் இயன் மொழி எனப்படும்.

ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
5 எம்அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மின்என
அறத்துஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி; தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
10 முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:
1. ஆன் = பசு; இயல் = தன்மை; ஆனியல் = ஆன்+இயல் = பசு போன்ற தன்மை. 2. பேணுதல் = பாதுகாத்தல். 3. இறுத்தல் = செலுத்தல். 5. கடி = விரைவு; அரண் = காவல். 6. நுவல் = சொல்; பூட்கை = கொள்கை, மேற்கோள். 7. மீ = மேலிடம், உயர்ச்சி, மீமிசை = மேலே. 9. செந்நீர் = சிவந்த தன்மையுடைய (சிவந்த); பசும்பொன் = உயர்ந்த பொன். வயிரியர் = கூத்தர். 10. முந்நீர் = கடல்; விழவு = விழா; நெடியோன் = உயர்ந்தவன் (பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் முன்னோர்களில் ஒருவன்)

கொண்டு கூட்டு: அறத்தாறு நுவலும் பூட்கை, எங்கோ, குடுமி வாழிய, பஃறுளி மணலினும் பலவே எனக் கூட்டுக.

பாடல் விளக்கம்: ”பசுக்களும், பசுபோன்ற இயல்புடைய பார்ப்பன மக்களும், பெண்டிரும், பிணியுடையோரும், இறந்தவர்களுக்கு இறுதிக் கடன் செய்வதற்கு நல்ல புதல்வர்கள் இல்லாத ஆண்களும் பாதுகாவலான இடத்தைச் சென்றடையுங்கள். விரைவில் எங்கள் அம்புகளை ஏவப் போகிறோம்” என்று அறநெறி கூறும் கொள்கை உடையவனே! கொல்கின்ற வலிய யானையின் மேல் உள்ள உன் கொடி வானில் நிழல் பரவச் செய்கிறது. எங்கள் அரசே! குடுமி! நீ வாழ்க! செம்மையான உயர்ந்த பொன்னைக் கூத்தர்க்கு அளித்துக் கடல் விழா எடுத்த உன் முன்னோன் நெடியோனால் உண்டாக்கப்பட்ட பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 79. பகலோ சிறிது!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 79. பகலோ சிறிது! பாடியவர்: இடைக்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளை 76 – ஆவது பாடலில் காணலாம்.பாடப்பட்டோன்: பாண்டியன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 86. கல்லளை போல வயிறு!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 86. கல்லளை போல வயிறு! பாடியவர்: காவற் பெண்டு (காதற்பெண்டு எனவும் பாடம்.) காவற் பெண்டு என்பவர் மறக்குடியில் பிறந்து…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 56. கடவுளரும் காவலனும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 56. கடவுளரும் காவலனும்! பாடல் ஆசிரியர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (56,189, 395). இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 83. இருபாற்பட்ட ஊர்!

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் 83. இருபாற்பட்ட ஊர்! பாடியவர்: பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார். நக்கண்ணன் என்னும் ஆண்பாற் பெயரைப் போல் நக்கண்ணை என்பது பெண்பாற்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 34. செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை! பாடல் ஆசிரியர்: ஆலத்தூர் கிழார் (34. 36, 69, 225, 324). ஆலத்தூர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன