புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 90. பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

465 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
90. பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: ஒரு சமயம், பகைவர்கள் தன்னோடு போர் புரியக் கருதுகின்றனர் என்று அதியமானுக்குத் தெரிய வந்தது. போரின் விளைவுகளை அவன் சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவ்வையார், “ புலி சினந்தால் மான்கள் உயிர் தப்ப முடியுமா? ஞாயிறு சினந்தால் இருளும் உண்டோ? மிகுந்த பாரத்தைப் பெருமிதத்தோடு இழுத்துச் செல்லும் காளை போக முடியாத வழியும் உண்டோ? அது போல், நீ களம் புகுந்தால் உன்னை எதிர்த்துப் போரிடக் கூடிய பகைவரும் உளரோ?” என்று கூறி அதியமானை ஊக்குவிக்கிறார்.

திணை: தும்பை. பகைவரோடு போர் செய்வதற்கு ஆயத்தமாகும் பொழுது தும்பைப் பூவைச் சூடிக் கொள்ளல்.
துறை: தானை மறம். இருபடைகளும் வலிமையுடயவை என்பதால் அழிவு மிகுதியாகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்ற கருத்தைக் கூறுவது.

உடைவளை கடுப்ப மலர்ந்த காந்தள்
அடைமல்கு குளவியொடு கமழும் சாரல்
மறப்புலி உடலின், மான்கணம் உளவோ?
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய
5 இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்?
அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொலிய,
அரிமணல் ஞெமரக், கல்பக நடக்கும்
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?
10 எழுமரம் கடுக்கும் தாள்தோய் தடக்கை
வழுவில் வன்கை, மழவர் பெரும!
இருநில மண்கொண்டு சிலைக்கும்
பொருநரும் உளரோ, நீகளம் புகினே?

அருஞ்சொற்பொருள்:
1.உடைதல் = தகர்தல், பிளத்தல்; வளை = வளையல்; கடுப்பு = ஒப்பு; காந்தள் = வெண்காந்தள் ( ஒருவகைப் பூ). 2.அடை = இலை; மல்குதல் = நிறைதல், செழித்தல்; குளவி = காட்டு மல்லிகை; சாரல் = மலைப்பக்கம். 3.உடல்தல் = கோபங்கொள்ளுதல், பகைத்தல்; கணம் = கூட்டம். 4. மருளல் = மயங்குதல்; விசும்பு = ஆகாயம்; மாதிரம் = திசை; ஈண்டுதல் = நிறைதல் (சூழ்தல்). 6. பார் = நிலம்; இயங்கிய = புதைந்த. 7. சாகாடு = வண்டி; ஆழ்ச்சி = தாழ்ச்சி, பதிவு, அழுந்துகை; சொலிய = நீங்க, பெயர; 8. ஞெமிர்தல் = பரத்தல்; பக = பிரிய. 9. பகடு = காளைமாடு. 10. எழுமரம் = கணையமரம். 11. வழு = தவறு; மழவர் = வீரர். 12. இரு = பெரிய; சிலைத்தல் = ஒலித்தல், சினங்கொள்ளுதல்.

கொண்டு கூட்டு: “ பெரும, மறப்புலி உடலின் மான்கணம் உளவோ? ஞாயிறு சினவின் இருளும் உண்டோ? பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? நீ களம் புகின் பொருநரும் உளரோ?” எனக் கூட்டுக

உரை: உடைந்த வளையல்களைப் போல் மலர்ந்த வெண்காந்தளும், இலைகள் நிறைந்த காட்டு மல்லிகையும் மணக்கும் மலைச்சரிவில் வலிய புலி தாக்கின் மான் கூட்டம் அங்கே எதிர்த்து நிற்குமோ? கதிரவன் சினந்தெழுந்தால், மயங்கிய ஆகாயத்திலும் மற்ற திசைகளிலும் இருள் சூழ்ந்து இருக்குமோ? பாரம் மிகுதியால் பண்டங்களைச் சுமந்து செல்லும் வண்டியின் அச்சு தரையில் இடித்துச் செல்லவும், நீரலைகளால் கொழிக்கப்பட்ட மணல் பரக்கவும் கல் பிளக்கவும் பெருமிதத்தோடு வண்டியை இழுத்துச் செல்ல வல்ல காளைக்குப் போக முடியாத வழியும் உண்டோ? முழந்தாள் வரை நீண்ட, கணையமரம் போன்ற, குற்றமற்ற வலிய கைகளையுடைய மழவர் தலைவனே! நீ போர்க்களம் புகுந்தால் உன் பெரிய நிலத்தை கவர்ந்து கொண்டு ஆரவாரம் செய்யக்கூடிய வீரரும் உளரோ?

சிறப்புக் குறிப்பு: “வளையுடந் தன்ன வள்ளிதழ்க் காந்தள்” என்று வேறு நூல்களிலும் (மலைபடுகடாம், 519)குறிப்பிடப்படுவதால், சங்க காலத்தில் வளையல்கள் சங்கு அல்லது முத்து போன்ற வெண்ணிறமான பொருட்களால் செய்யப்பட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.

புறம்
90. பொருநரும் உளரோ, நீ களம் புகினே?

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

Buy Book From amazon:

புறநானூறு: புதிய வரிசை வகை by பேராசிரியர் சாலமன் பாப்பையா

புறநானூறு மூலமும் உரையும் by உ.வே.சாமிநாதையர்

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 40. ஒரு பிடியும் எழு களிரும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 40. ஒரு பிடியும் எழு களிரும்! பாடல் ஆசிரியர்: ஆவூர் மூலங்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 38-இல் காண்க.பாடப்பட்டோன்:…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்-81. யார்கொல் அளியர்?

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் 81. யார்கொல் அளியர்? பாடியவர்: சாத்தந்தையார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம். பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளை…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 20. மண்ணும் உண்பர்

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 20. மண்ணும் உண்பர் பாடியவர்: குறுங்கோழியூர்கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 17-இல் காண்க.பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 11. பெற்றனர்! பெற்றிலேன்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 11. பெற்றனர்! பெற்றிலேன்! பாடல் ஆசிரியர்: பேய்மகள் இளவெயினியார் (11). இவர் பேயுருவத்தோடு நின்று பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோவைப்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 29. நண்பின் பண்பினன் ஆகுக!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 29. நண்பின் பண்பினன் ஆகுக! பாடல் ஆசிரியர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.பாடப்பட்டோன்:…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன