புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 95. புதியதும் உடைந்ததும்!

446 0

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

புறம்
95. புதியதும் உடைந்ததும்!

பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 – இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.

பாடலின் பின்னணி: தொண்டை நாட்டை ஆண்ட தொண்டைமான் அதியமான் மீது பகை கொண்டான். தன்னிடத்துப் படைவலிமை அதிகமாக இருப்பதாக எண்ணி மிகவும் செருக்கடைந்திருந்தான். தொண்டைமானின் செருக்கை அறிந்த அதியமான், தன் படை வலிமையையும் தொண்டைமான் தோல்வி அடைவது உறுதி என்பதையும் அவனுக்கு அறிவுறுத்துமாறு அவ்வையாரைத் தன் தூதுவராகத் தொண்டைமானிடம் அனுப்பினான். அவ்வையார் தொண்டைமானைக் காணச் சென்றார். தன் படைவலிமையை எண்ணிச் செருக்கொடு இருந்த தொண்டைமான், அவ்வையாரைத் தன் படைக்கலக் கொட்டிலுக்கு அழைத்துச் சென்று, தன் படைக்கருவிகளைப் பெருமையோடு காண்பித்தான். அவன் கருத்தை அறிந்த அவ்வையார், தொண்டைமானின் படைக்கலங்களைப் புகழ்வது போல் இகழ்ந்தும், அதியமானின் படைக்கலங்களை இகழ்வது போல் புகழ்ந்தும் இப்பாடலில் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: வாண் மங்கலம். அரசனுடைய வாளைப் புகழ்தல்.

இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய்அணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே; அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
5 கொல்துறைக் குற்றில மாதோ; என்றும்
உண்டாயின் பதம்கொடுத்து
இல்லாயின் உடன்உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.

அருஞ்சொற்பொருள்:
1.இவ்வே = இவையே; பீலி = மயில் தோகை. 2. கண் = உடம்பு: திரள் = திரட்சி; நோன்மை = வலிமை; காழ் = காம்பு; திருத்துதல் = சீர்ப்படுத்துதல், அழகு செய்யப்படுதல். 3. கடி = காவல்; வியன் = அகன்ற; நகரம் = அரண்மனை; அவ்வே = அவையே. 4. கோடு = பக்கம்; நுதி = நுனி. 5. கொல் = கொல்லன்; துறை = இடம்; குற்றில் = கொட்டில் (சிறிய இடம்); மாது – அசைச் சொல். 6. பதம் = உணவு. 8. ஒக்கல் = சுற்றம். 9. வை = கூர்மை.

கொண்டுகூட்டு: எம் கோமான் வைந்நுதி வேல், கொல்துறைக் குற்றில; இவ்வே கடியுடை வியன்நகரவ்வே.

உரை: செல்வம் இருந்தால் மற்றவர்களுக்கு உணவளித்துப் பிறகு தான் உண்ணுவதும், செல்வம் இல்லையானால் (குறைந்தால்) தன் உணவைப் பிறரோடு பகிர்ந்து உண்ணும் பண்புடைய, வறிய சுற்றத்தார்களின் தலைவனாகிய பெருமைக்குரிய என் வேந்தன் அதியமானின் கூர்மையான வேல்கள், பகைவரைக் குத்தியதால் பக்கமும் நுனியும் முரிந்து கொல்லர்களின் சிறிய உலைக்களத்தில் எந்நாளும் உள்ளன. ஆனால், உன் படைக்கருவிகளான இவை, மயில் தோகை அணிவிக்கப்பட்டு, மாலை சூட்டப்பட்டு, வலிய திரண்ட பிடிகளை உடையதாய் நெய் பூசப்பட்டு, அழகு செய்யபட்டு காவல் மிக்க பெரிய இடத்தில் உள்ளன.

சிறப்புக் குறிப்பு: தூது என்ற அதிகாரத்தில், திருவள்ளுவர்,

கடனறிந்து காலம் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. (குறள் – 687)
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. (குறள் – 690)

என்கிறார். அதாவது, தன் கடமையை அறிந்து காலத்தையும் இடத்தையும் ஆராய்ந்து சிந்தித்து உரைப்பவன் சிறந்த தூதன். மற்றும், தான் கூறும் செய்தியால் தான் உயிரிழக்க நேரினும், தன்னாலான எல்லா முயற்சிகளையும் குறையாது செய்து தன் அரசனுக்கு நன்மை உண்டாக்குபவனே சிறந்த தூதன். இந்த குறட்பாக்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அவ்வையாரின் சொல்வன்மையும் செயலும் இருப்பதை இப்பாடலின் மூலம் நாம் அறிய முடிகிறது.

புறம்
95. புதியதும் உடைந்ததும்!

புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம்

Buy Book From amazon:

புறநானூறு: புதிய வரிசை வகை by பேராசிரியர் சாலமன் பாப்பையா

புறநானூறு மூலமும் உரையும் by உ.வே.சாமிநாதையர்

Related Post

புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 48. எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல !

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 48. எம்மும் உள்ளுமோ; முதுவாய் இரவல ! பாடல் ஆசிரியர்: பொய்கையார் (48, 49). இவர் இப்பாடலில், “கள்நாறும்மே கானலம்…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 23. நண்ணார் நாணுவர்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 23. நண்ணார் நாணுவர்! பாடல் ஆசிரியர்: கல்லாடனார் (23, 25, 371, 385, 391). இவர் கல்லாடம் என்ற ஊரினராக…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்-81. யார்கொல் அளியர்?

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் 81. யார்கொல் அளியர்? பாடியவர்: சாத்தந்தையார். இப்புலவரைப் பற்றிய குறிப்புகளை 80-ஆவது பாடலில் காணலாம். பாடப்பட்டோன்: சோழன் போரவைக்கோப் பெருநற்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளை…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம்- 107. பாரியும் மாரியும்

Posted by - ஏப்ரல் 13, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 107. பாரியும் மாரியும் பாடியவர்: கபிலர். கபிலரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 105 – இல் காணலாம்.பாடப்பட்டோன்: வேள் பாரி.…
புறநானூறு பாடல் மற்றும் விளக்கம்

புறம் – 53. செந்நாவும் சேரன் புகழும்!

Posted by - ஏப்ரல் 11, 2020 0
புறநானூறு பாடல்கள் மற்றும் விளக்கம் புறம் 53. செந்நாவும் சேரன் புகழும்! பாடல் ஆசிரியர்: பொருந்தில் இளங்கீரனார் ( 53). இளங்கீரனார் என்பது இவர் இயற்பெயர். இவர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன