புலிமான் கோம்பை – சங்ககால நடுகற்கள்
சங்கக் காலத் தமிழி கல்வெட்டுகள் சமணர் இருக்கைகளில் மட்டுமே அதிகம் கிடைத்து வந்தன. இதனால் இவ்வெழுத்துக்கள் சமணரால் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருத்துகள் நிலவின.
இந்தியாவிலேயே மிகப் பழமையான தமிழிக் கல்வெட்டு இந்த புலிமான் கோம்பை நடுகல் கல்வெட்டே என கா.ராஜன் அவர்கள் பறை சாற்றினார்.
மேலும், புலிமான் கோம்பை நடுகற்கள் கொண்டு தமிழிக் கல்வெட்டுக்கள் சமணருக்கு மட்டுமே உரித்தானவையல்ல. பாமர தமிழனும் எழுத்தறிவு பண்பாட்டைப் பெற்றுள்ளான் என்பதை விளக்கினார். தொல்காப்பியத்தில் இடம்பெறும் “ஆகோள்” என்ற சொல்லாட்சி இக்கல்வெட்டிலும் இடம்பெறுவதைக் கொண்டு தமிழ் இலக்கியத்தின் காலத்தை மேல் நோக்கிக் கொண்டுச் சென்றுள்ளது இந்த புலிமான் கோம்பை.
அமைவிடம்:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் புலிமான்கோம்பை எனும் சிற்றூர் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இங்கு 2006ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட கள ஆய்வில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்ககாலத் தமிழ் (தமிழி) எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மூன்று நடுகற்கள் கிடைத்துள்ளன.
நடுகற்கள்:
நடுகற்கள் என்பது ஊரைக் காக்கவோ நாட்டைக் காக்கவோ உயிரிழந்த வீரர்களுக்கு எடுக்கப்பெறும் நினைவுக் கற்களாகும். இது சங்ககாலம் தொட்டே வழக்கிலிருந்துள்ளது. இவை ஆங்கிலத்தில் ஹீரோ ஸ்டோன் (hero stone – வீரக்கல்) என்று அழைக்கப் பெறுகின்றன.
சிறப்புகள்
- சங்க இலக்கியங்களில் நடுகற்கள் பற்றிய செய்திகள் விரவி வருகின்றன. அவற்றில் “எழுத்துடை” நடுகல் என்றக் குறிப்புகள் இடம் பெறுகின்றன. இந்நடுகற்கள் கண்டுபிடிக்கப் பெறும் வரை சங்க இலக்கியங்கள் கூறும் எழுத்து ஓவியத்தைக் குறிப்பதாகவே கருதப்பட்டது.
- சங்க இலக்கியச் செய்திகளின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய உதவியது.
இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட நடுகற்களில் மிகப் பழமையானவை ஆகும். - இதுவரை தமிழகத்தில் கிடைத்த சங்ககாலத் தமிழ் (தமிழி) கல்வெட்டுக்களில் எழுத்தமைதியின் அடிப்படையில் காலத்தால் முந்தியவையாகும்.
- சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் ஆகோள் அதாவது நிரை கவர்தல் அல்லது கால்நடைகளைக் கவர்ந்து செல்லுதலைப் பற்றி கூறும் முதல் நடுகல் இதுவேயாகும்.
- பிராகிருத மொழிக் கலப்பின்றி முழுவதும் தமிழ்ச் சொற்களே கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
- இதுவே சங்ககாலத்தைச் சேர்ந்த முதல் நடுகல்லாகும்.
இந்நடுகல் கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை பொ.ஆ. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இருளப்பட்டி நடுகல்லே காலத்தால் முற்பட்ட நடுக்கல்லாக கருதப்பட்டு வந்தது.
காலம்
எழுத்தமைதியின் அடிப்படையில் இரு கல்வெட்டுக்களின் காலம் பொ.ஆ.மு. 4ஆம் நூற்றாண்டு எனவும் மற்றொரு கல்வெட்டின் காலம் பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டெனவும் கணிக்கப்பெற்றுள்ளது.
பின்வரும் மூன்று படங்களின் விளக்கம்
எண் 1
செய்தி: கல்வெட்டு சிதைந்துள்ளதால் முழுமையான பொருளை அறிய முடியவில்லை
எண் 2
செய்தி: வேள் ஊரைச் சேர்ந்த பதவன் அவ்வன் என்பவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்
எண் 3
செய்தி: கூடல் ஊரில் நடந்த ஆகோள் பூசலில் உயிர் நீத்த பேடுதீயன் அந்தவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல்

உதவிப்பேராசிரியர்
கல்வெட்டியல் துறை