பேகன் மனைவி கண்ணகி

பேகன் மனைவி கண்ணகி

1766 0

 பேகன் மனைவி கண்ணகி

கடியேழு வள்ளல்களில் ஒருவன் பேகன், இவனது மனைவியின் பெயர் கண்ணகி ஆகும். சிலப்பதிகாரக் கோவலனைப் போலவே இவனும் தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து வாழ்ந்துவந்தான்.

இவர்களை ஒன்று சேர்க சங்க கால புலவர்கள் முயன்றதை இந்த பதிவில் பார்போம். 

கண்ணகியின் ஊடல்

இவ்வாறு புகழ்பெற்ற பேகன் ஆடல் கலையில் வல்ல ஒரு விறலியின் ஆட்டத்திலும் பாடலிலும் அவன் ஈர்ப்பு கொண்டான். அதனால் மற்றக் காரியங்களைக்கூட மறந்திருந்தான். அந்த விறலியும் சில காலம் ஆவிநன்குடியில் தங்கியிருந்தாள்.

இது சம்பந்தமாகக் கண்ணகிக்குத் தன் கணவன்மேல் ஐயம் உண்டாயிற்று. அதனால் கண்ணகிக்கு கோபமும் எழுந்து. எப்படியோ அந்தச் சிறிய ஊடல் பெரிதாக வளர்ந்துவிட்டது. இதை பற்றி விளக்கம் கேட்ட கண்ணகியை பேகன் ஒரு மாளிகைக்கு அனுப்பி அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டான். அவள் உணவு உடை முதலியவற்றைப் பெற ஏற்பாடுகள் செய்தான். ஆனால் அவளைப் போய்ப் பார்க்கவில்லை.

இந்தச் செய்தி முதலில் யாருக்கும் தெரியாது. பிறகு மெல்ல மெல்லப் பேகனுடைய உறவினருக்குத் தெரிந்தது.

கண்ணகி தன் கணவனுடைய சினத்துக்கு ஆளாகித் தவித்தாள். அவளுக்குப் பேகனுடைய அன்பு இனிக் கிடைக்குமோ என்ற ஏக்கம் வந்து விட்டது. வாழ்க்கையே குலைந்துவிட்டதாக எண்ணி உறுகினாள்.

பேகன் மனைவி கண்ணகி

பேகனிடம் கூறி அவன் சினத்தை மாற்ற வேண்டும் என்று அவனுடன் பழகுகிறவர்கள் யாவரும் நினைத்தார்கள். ஆனால் அவனுக்கு நல்லுரை கூறும் துணிவு யாருக்கும் உண்டாகவில்லை. பேகனுடன் நெருங்கிப் பழகும் புலவர்களைக் கொண்டு தான் இந்தக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று சில அன்பர்கள் எண்ணினார்கள்.

பேகன் மனைவி கண்ணகி பிரிவை பற்றி புலவர்கள் பாடல்கள்

ஒரு சமயம் பரணர் வந்தார்; அவருடன் கபிலரும் வேறு சில புலவர்களும் வந்தார்கள். பரனரை நன்கு அறிந்திருந்தவரும் பேகனுடைய நண்பருமாகிய ஒருவர் அப்புலவரைத் தனியே சந்தித்து நிகழ்ந்ததைச் சொன்னர்; எப்படியாவது கண்ணகியை மீட்டும் பேகனோடு வாழும்படி வகை செய்யவேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

பரணர் அதைப் பற்றி மேலும் விசாரித்துத் தெரிந்துகொண்டார். தாம் ஒருவராக நின்று பேகன் மனத்தை மாற்றுவதைவிடக் கபிலர் முதலிய மற்றப் புலவர்களையும் துணையாகக் கொண்டு அவனை இரங்க வைக்கலாம் என்று எண்ணினார். அந்தப் புலவர்களிடம் தம் கருத்தைச் சொன்னர். இன்னது செய்வதென்று அவர்கள் தங்களுக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்கள்.

பரணரின் பாடல்

ஒரு நாள் காலை பரணர் தனியே சென்று பேகனைக் கண்டார். இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“நேற்று ஒரு நிகழ்ச்சி நடந்தது. அது முதல் என் உள்ளம் அங்கேயே இருக்கிறது” என்றார் புலவர்.

“என்ன அது?” என்று கேட்டான் வள்ளல். “நானும் என்னைச் சேர்ந்தவர்களும் உன்னையும் உன் மலையையும் பாராட்டும் பாடல்களை ஓரிடத்திலே பாடிக்கொண்டிருந்தோம். அப்போது யாரோ விம்மி விம்மி அழும் குரல் கேட்டது.”

“அழுகையா? யார் அழுதார்கள்?”

பாடியவர்: பரணர்
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை. 
துறை: குறுங்கலி. 

அருளா யாகலோ கொடிதே; இருள்வரச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின்
கார்எதிர் கானம் பாடினே மாக,
நீல்நறு நெய்தலிற் பொலிந்த உண்கண்

கலுழ்ந்து, வார் அரிப் பனி பூண்அகம் நனைப்ப,
இனைதல் ஆனா ளாக, இளையோய்!
கிளையை மன், எம் கேள்வெய் யோற்கு?என,
யாம்தன் தொழுதனம் வினவக், காந்தள்

முகைபுரை விரலின் கண்ணீர் துடையா,
யாம், அவன் கிளைஞரேம் அல்லேம்; கேள்,இனி;
எம்போல் ஒருத்தி நலன்நயந்து, என்றும்,
வரூஉம் என்ப; வயங்கு புகழ்ப் பேகன்

ஒல்லென ஒலிக்கும் தேரொடு,
முல்லை வேலி, நல்லூ ரானே!

– புறம் 144

பொருள்

பேகன், தன் மனைவி கண்ணகியைப் பிரிந்து, பரத்தை ஒருத்தியோடு வாழ்வதைக் கேள்வியுற்ற பரணர், இப்பாடலில் பேகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

மாலைநேரத்தில் இருள் வந்ததால் சிறிய யாழை இசைத்து உன் மழைவளம் மிகுந்த காட்டை செவ்வழிப் பண்ணில் பாடினோம். அப்பாட்டைக் கேட்டவுடன்,

நீல நிறமும் மணமும் உடைய ஆம்பல் மலர் போன்ற மை தீட்டிய கண்களுடைய பெண் ஒருத்தி கலங்கி விட்டுவிட்டு உகுத்த கண்ணீர்த்துளிகள் அவள் அணிகலன்களை நனைத்தன. அவள் வருந்தி அழுதாள்.

ஆகவே, நாங்கள் “இளம்பெண்ணே! நீ எங்கள் நட்பை விரும்புபவனுக்கு (பேகனுக்கு) உறவினளோ?” என்று வணங்கிக் கேட்டோம்.

அவள் காந்தள் மொட்டுப் போன்ற தன் கை விரல்களால் கண்ணீரைத் துடைத்து, “ நான் அவனுடைய உறவினள் அல்ல; கேள்! இப்போழுது, என் போன்ற ஒருத்தியின் அழகை விரும்பி, புகழ் மிக்க பேகன் ஒலிக்கும் தேரில் முல்லையை வேலியாக உடைய நல்லூருக்கு எந்நாளும் வருவதாகக் கூறுகிறார்கள்”

என்று கூறி அவளுக்கு நீ அருள் செய்யாதிருப்பது கொடிது என்றான்.

பாடியவர்: பரணர்
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.

பெருந்திணை. பொருந்தாத காமநிலையை பற்றிக் கூறுவது பெருந்திணையாகும்.

துறை: குறுங்கலி. ‘பரணர் பாட்டு’ எனவும் கொள்வர்.

 

மடத்தகை மாமயில் பனிக்கும் என்று அருளிப்
படாஅம் ஈத்த கெடாஅ நல்லிசைக்,
கடாஅ யானைக் கலிமான் பேக!
பசித்தும் வாரோம்; பாரமும் இலமே ;

களங்கனி யன்ன கருங்கோட்டுச் சீறியாழ்
நயம்புரிந் துறையுநர் நடுங்கப் பண்ணி,
அறம்செய் தீமோ, அருள்வெய் யோய்! என,
இதியாம் இரந்த பரிசில்: அது இருளின்,

இனமணி நெடுந்தேர் ஏறி,
இன்னாது உறைவி அரும்படர் களைமே!

 – புறம் 145

பொருள்

பரணர் பாடியதைக் கேட்ட பேகன் அவருக்குப் பரிசில் அளிக்க முன்வந்தான். அதைக் கண்ட பரணர்,

மென்மையான இயல்பும் கருமை நிறமும் உடைய மயில் ஒன்று குளிரில் நடுங்குகிறது என்று எண்ணி அம்மயிலுக்குப் போர்வை அளித்தவனே! குறையாத புகழும் மதமுள்ள யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடைய பேகனே! நான் பசியினால் வரவில்லை; எனக்குச் சுற்றத்தாரால் வரும் சுமையும் இல்லை.

களாப்பழம் போன்ற கரிய தண்டையுடை ய சிறிய யாழுடன், இசை நயம் தெரிந்தோர் தலயைசைத்துக் கேட்குமாறு “ அறம் செய்க; அருளை விரும்புபவனே” என்று பாடி உன்னிடம் பரிசிலாகக் கேட்பது என்னவென்றால் ”நீ இன்று இரவே நிறைந்த மணிகளுடைய உயர்ந்த தேரில் ஏறிப்போய் துயரத்துடன் வாழ்பவளின் (உன் மனைவி கண்ணகியின்) துன்பத்தைக் களைவாயாக” என்பதுதான்.

பேகன் ஒன்றும் பேசவில்லை. புலவர் தம் கருத்தை ஒரு பாட்டாகவே பாடிவிட்டார். பேகன் சிந்தனையுள் ஆழ்ந்தான். “சரி, நான் போய் வருகிறேன்” என்று சொல்லி அவர் விடை பெற்றுக்கொண்டார். 

மறுபடியும் ஒரு பாட்டைப் பரணர் கூறினார். அதுவும் பாணன் பாடுவதாகவே இருந்தது. “மயில் நடுங்கு மென்று உள்ளம் இரங்கி மேலாடையை உதவிய பேகனே, நாங்கள் இப்போது உன்னை அணுகியதற்குக் காரணத்தைக் கேள். எங்களுக்குப் பசி இல்லை; தாங்க வேண்டிய குடும்பப் பாரமும் இல்லை.

இங்கே வந்து இசை பாடிப் பெற விரும்பிய பரிசில் ஒன்று உண்டு. அந்தப் பரிசிலை நீ அருளவேண்டும். நீ இப்போதே உன் தேரில் ஏறி, வருத்தத்தோடு உறையும் அப் பெருமாட்டியின் துன்பத்தைக் களையவேண்டும்” என்று பாடினார்.

பேகன் காதில் அதுவும் விழுந்தது. அவன் முகம் நிமிர்ந்து பார்க்கவில்லை. சிறிது நேரம் பேசாமல் அமர்ந்திருந்த பரணர், “நான் போய் வருகிறேன்” என்று விடைபெற்றுக் கொண்டார்.

அரிசில் கிழார் பாடல்

அன்று பிற்பகலிலும் பேகனை வேறு புலவர்கள் அணுகினார்கள். அரிசில் கிழார் சென்றார். அவரும்: பாணன் கூற்றாகவே பாடினார்;

பாடியவர்: அரிசில் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி.

அன்ன வாக; நின் அருங்கல வெறுக்கை
அவை பெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல
நன்னாடு பாட, என்னை நயந்து

பரிசில் நல்குவை யாயின், குரிசில் ! நீ   
நல்கா மையின் நைவரச் சாஅய்,
அருந்துயர் உழக்கும்நின் திருந்திழை அரிவை
கலிமயிற் கலாவம் கால்குவித் தன்ன,

ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்,
தண்கமழ் கோதை புனைய,      
வண்பரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே!  

 – புறம் 146

பொருள்

பேகா! உன் செல்வங்கள் உன்னிடமே இருக்கட்டும். அவற்றைப் பெற நான் விரும்பவில்லை. என் யாழில் செவ்வழிப் பண் கூட்டி உன் நாட்டைப் பாடினேன். அதற்காக எனக்குப் பரிசில் தருவாயானால் உன் மனைவி தன் கூந்தலில் பூ சூடிக்கொள்ளும்படி அவளிடம் செல்ல உன் தேரில் குதிரைகளைப் பூட்டுக.

உன் மனைவி நீ உன்னை அவளுக்குத் தராமையால் நைந்துபோய் உடல் அழகு குலைந்து துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாள். அவள் தன் தாலி இழையைத் திருத்திக்கொள்ள வேண்டும்.

தோகைமயில் போன்ற தன் கூந்தலுக்குப் மணப்புகை ஊட்டிப் பூவைச் ணூடிக்கொள்ள வேண்டும். அதற்காக உன் தேரைப் பூட்டுக. அதுவே நீ எனக்குத் தரும் செல்வமாக இருக்கட்டும் என்று கவி பாடினர்.

பெருங்குன்றுார் கிழார் பாடல்

அவர் போனபிறகு பெருங்குன்றுார் கிழார் வந்தார். அவரும் அதே போக்கில் பாடினார்.

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி.

கல்முழை அருவிப் பன்மலை நீந்திச்,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்,
கார்வான் இன்னுறை தமியள் கேளா,
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண்டு உறையும்

அரிமதர் மழைக்கண், அம்மா அரிவை    5
நெய்யொடு துறந்த மையிருங் கூந்தல்
மண்ணூறு மணியின் மாசுஅற மண்ணிப்,
புதுமலர் கஞல, இன்று பெயரின்

அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!  

 – புறம் 147

பொருள்

கல்லுக் குகைகளில் அருவி கொட்டும் பல மலைகளைத் தாண்டி உன்னிடம் வந்துள்ளேன். என் யாழில் செவ்வழிப் பண் பாடிக்கொண்டு வந்துள்ளேன்.

ஆவியர் குடி மக்களின் அரசனே! நீ எனக்குப் பரிசில் தர விரும்பினால் அது நீ உன் மனைவியிடம் செல்வதுதான். நேற்று உன் இல்லம் சென்றபோது உன் மனைவி மழைக்கால மேகம் இடிமுழக்கத்தைக் கேட்டுக்கொண்டு தனியே இருந்தாள். கண்ணீரை அடக்கிக்கொண்டு இருந்தாள்.

கூந்தலில் எண்ணெய் வைக்காமல் இருந்தாள். அவள் தலையில் எண்ணெய் வைத்துக் குளித்துவிட்டுப் புதுமலர் சூடிக்கொள்ளும்படி நீ அவளிடம் செல். அதுதான் நீ எனக்குத் தரவேண்டிய பரிசு.

கபிலரின் பாடல்

சிறிது நேரம் சென்றது. கபிலர் வந்தார். “இன்று ஒரு புதிய பாடல் பாடி வந்திருக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டே வந்தார். பேகன் சிறிதே தெளிவு பெற்று, “வாருங்கள், வாருங்கள்” என்றான். அவர் அமர்ந்தார். “அந்தப் பாடலை ஒரு பாணன் பாடியதாகப் பாடியிருக்கிறேன்” என்றார்.

“எங்கே சொல்லுங்கள், கேட்கலாம்.”

பாடியவர்: கபிலர்
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பெருந்திணை.
துறை: குறுங்கலி.

மலைவான் கொள்கஎன உயர்பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்கஎனக்
கடவுட் பேணிய குறவர் மாக்கள்
பெயல்கண் மாறிய உவகையர் சாரல்

புனத்தினை அயிலும் நாட! சினப்போர்க்
கைவள் ஈகைக் கலிமான் பேக,
யார்கொல் அளியள் தானே; நெருநல்
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்

குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளிஇருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னும்நின் மலையும் பாட இன்னாது

இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மிக்
குழல்இனை வதுபோல் அழுதனள் பெரிதே.

– புறம் 143

பொருள்

மலைகளை மேகங்கள் சூழ்ந்து மழை பெய்க எனவும், மழை அதிகமாகப் பெய்தால் மேகங்கள் மேலே செல்லட்டும் என்றும் கடவுளை வாழ்த்தி உயர்ந்த பூக்களைத் தூவி வழிபட்டு, மழை நின்றதால் மகிழ்ச்சி அடைந்து மலைச் சாரலில் விளையும் தினையை உண்ணும் குறவர்கள் வாழும் நாட்டை உடையவனே!

சினத்தோடு செய்யும் போரையும், கைவண்மையால் கொடுக்கும் கொடையையும், செருக்குடைய குதிரைகளையும் உடைய பேகனே! நேற்று காட்டில் நடந்து வருந்திய என் சுற்றத்தினர் பசியுற்றனர். தடியால் அடிக்கப்பட்ட முரசின் ஒலி போல் முழங்கும் அருவியையுடைய பெரிய உயர்ந்த மலைஇடத்து உள்ள சிறிய ஊரின் வாயிற்புறத்து வந்து உன்னையும் உன் மலையையும் வாழ்த்திப் பாடினோம்.

அப்பொழுது, தான் துன்பத்தோடு வடிக்கும் கண்ணீரை நிறுத்த முடியாமல், தன் மார்பகங்கள் விம்மிக் கண்ணீரால் நனையுமாறு புல்லாங்குழல் வருந்துவது போல் ஒரு பெண்மணி மிகவும் அழுதாள். அவள் இரங்கத் தக்கவள். அவள் யார்?

இவ்வாறு புலவர்களை புறிந்து கொண்ட பேகன்,

மனம் இரங்கி கண்ணகியுடன் இணைந்த பேகன்

 

பெரும் புலவர்கள் சொல்வதைக் கேட்டும். மனம் இரங்காமல் இருப்பானா பேகன் ? அவன் தான் செய்த செயலுக்காக மிகவும் வருந்தினான்.

அன்றே தன் மனைவியைத் தானே சென்று அழைத்து வந்தான். மறுநாள் புலவர்கள் நால்வரையும் அரண்மனைக்கு வரச் செய்தான். தன் மனைவியையும் உடன் வைத்துக்கொண்டு அந்த நால்வரையும். வரவேற்று உபசரித்தான். கண்ணகி அப் புலவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.

சங்க கால தமிழர்களின் காதல் மற்றும் களவு – அகத்திணை

 

Related Post

ஆதிச்சநல்லூரில் வரலாற்று ஆய்வு மையம்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி “தென்னிந்தியாவில் மிகப்பெரிய பழமையான நாகரிகமாகச் சிறந்து விளங்கியது பொருநைக் கரையே” என்று கால்டுவெல் கூறுவார்.பொருநை நாகரிகத்தைக் கொண்டுதான் திருநெல்வேலிக்குச் சீமை என்ற சிறப்புப் பெயர்…

இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம் தொடர்ச்சி

Posted by - ஏப்ரல் 19, 2020 0
இலெமூரியா தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்-தொடர்ச்சி கன்னியாகுமரிக்குத் தெற்கே கிடக்கின்ற இந்தியப் பேராழியின் கொந்தளிப்புக் கடல்நீர் கிறித்து ஊழிக்கு முன்னீடு பல ஆயிரஆண்டுகள் (millenniums) செழித்திருந்த…
- 4

புலிமான் கோம்பை – சங்ககால நடுகற்கள்

Posted by - அக்டோபர் 30, 2020 0
புலிமான் கோம்பை – சங்ககால நடுகற்கள் முனைவர் மா.பவானிஉதவிப்பேராசிரியர்கல்வெட்டியல் துறை அமைவிடம்: தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி வட்டத்தில் புலிமான்கோம்பை எனும் சிற்றூர் வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது.…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன