பேகன் வள்ளல் வரலாறு
பேகன் வள்ளல் வரலாறு
பஞ்சாமிர்தம் சாப்பிட்டவர்களுக்குப் பழனி மலை நினைவுககு வராமல் போகாது. பழனி மலையின்மேல் முருகன் கோயில் கொண்டிருக்கிறான். இப்போது பழனி என்ற பெயர் மலைக்கும் அதன் அடிவாரத்திலுள்ள ஊருக்கும் சேர்ந்து வழங்குகிறது. பழைய காலத்தில் இந்த மலைக்குப் பொதினி என்று பெயர்; ஊருக்கு ஆவிநன்குடி என்று பெயர். பொதினி என்பதே பிற்காலத்தில் பழனி என்று மாறிவிட்டது.
ஆவியர் குலம் என்பது ஒரு குறுநில மன்னர் குடிக்குப் பெயர். அவர்கள் அரசாண்ட இடம் ஆதலால் ஆவிநன்குடி என்று ஊருக்குப் பெயர் வந்தது. ஆவி, வையாவி என்று இரு வகையிலும் ஆவியர் குல மன்னர்களை வழங்குவதுண்டு. ஆதலால் வையாவிபுரி என்றும் சொன்னார்கள்; அதுவே நாளடைவில் வையாபுரி என்று மாறியது.
அந்த ஆவியர் குலத்தில் வந்தவன் பேகன் என்னும் குறுநில மன்னன். அவனை வையாவிக் கோப்பெரும் பேகன் என்று சொல்லுவார்கள். வையாவி ஊரில் உள்ள அரசனாகிய பெரிய பேகன் என்பது பொருள்.
வள்ளல் பேகன்
பேகன் சிறந்த கொடையாளி. புலவர்களுக்கு வாரி வாரி வழங்கும் வள்ளல். யாழை வாசித்துப் பாடும் பாணர்கள் வருவார்கள். அவன் அரண்மனையில் பல நாள் தங்குவார்கள். அவர்களுடைய இசையின்பத்தை நுகர்ந்து களிப்பான் பேகன். பிறகு பலவகைப் பரிசில்களை அளிப்பான். பொன்னாலாகிய தாமரைப் பூவை அவர்கள் அணியும்படியாகத் தருவான்.
அந்தக் காலத்தில் பாணர்களுக்குப் பொற்றாமரை அளிப்பது வழக்கம்.
பாணர்களுடைய மனைவிமார்கள் ஆடுவார்கள்; பாடுவார்கள். அவர்களுடைய ஆடல் பாடல்களையும் கண்டு மகிழ்வான். அவர்களுக்குப் பலவகை அணிகலன்களைப் பரிசளிப்பான். சில சமயங்களில் பாணர்களுக்கும் புலவர்களுக்கும் தேரையும் அளிப்பதுண்டு.
கபிலர் பரணர்
சங்க காலப் புலவர்களில் தலைமையும் புகழும் பெற்றவர் கபிலர். அவர் பல முறை பேகனிடம் வந்து சில நாள் தங்கிச் சென்றார். கபிலர் பரணர் என்று சேர்த்துச் சேர்த்துச் சொல்வார்கள். கபிலரைப் போலவே பரணரும் பெருமதிப்பை உடையவர். அவரும் பேகனிடம் வந்தார். வேறு புலவர்களும் அவனை நாடி வந்தார்கள்; அளவளாவினார்கள்; பாடினார்கள்.
தமிழ்ப் புலவர்களிடம் மிகவும் மதிப்பு வைத்துப் பழகினான் பேகன்.
பொதினி மலை முருகன்
பொதினி மலையின்மேல் இருந்த திருக்கோயிலில் முருகன் எழுந்தருளியிருந்தான். மலையைச் சுற்றி வாழ்ந்த குறவர்கள் இடைவிடாமல் அப்பெருமானைத் தொழுது வழிபட்டார்கள். மழை பெய்யாவிட்டால் அவனுக்குப் பூசை போடுவார்கள். மழை மிகுதியாகப் பெய்தாலும் மழை நிற்கவேண்டு மென்று கும்பிட்டு வழிபடுவார்கள். குறிஞ்சி நிலக் கடவுளாகிய முருகனிடத்தில் அந்நில மக்களாகிய அவர்களுக்குச் சிறிதும் தளராத நம்பிக்கை இருந்தது.
பேகன் அவர்களுடைய நல்வாழ்வைக் கண்டு களித்தான். அவர்களுக்கு உதவிகளைச் செய்தான். அவனும் மலையின்மேல் உள்ள முருகப் பெருமானை அடிக்கடி வழிபட்டுவந்தான். ஆவியர் குலத்துக்குப் பொதினி மலை முருகனே வழிபடு கடவுளாக விளங்கினான்.
பேகனும் மயிலும்
ஒருநாள் பேகன் வெளியிலே காலாற உலாவி வரப் புறப்பட்டான். அவனுடன் இரண்டு மெய் காவலர் சென்றனர். அது கார் காலம். மேகம் வான் முழுதும் கப்பிக் கொண்டிருந்தது. குளிர் காற்று மெல்ல வீசியது. நெடுந்தூரம் சென்றவன் மீண்டு தன் இருப்பிடத்தை நாடி வந்து கொண்டிருந்தான். அப்போது அங்கே ஓர் அழகிய காட்சியைக் கண்டான். மரங்கள் அடர்ந்த ஓரிடத்தில் ஓர் அழகிய ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆடிக்கொண்டிருந்தது. அவன் அங்கே சற்று நின்றான். மயில் தன் இயல்புப்படி சர் சர் என்ற ஒலி உண்டாகும்படி தோகையை அசைத்தது. அப்போது குளிர்ந்த காற்று வீசியது.
அவன் ஆடல் மகளிருக்குப் பல பரிசு தரும் வழக்கமுடையவன். இப்போது ஆடுகின்ற இந்த மயில் ஆடல் மகளிரைப் போலத்தான் ஒய்யாரமாக ஆடியது. ஆனல் சர் சர் என்று ஒலி வருவானேன்? அது குளிரால் நடுங்குவதனால்தான் அந்த ஒலி எழுகிறதென்று அவனுக்குத் தோன்றியது. உடனே அவன் உள்ளத்தில் இரக்க உணர்ச்சி உண்டாயிற்று. ‘பாவம்! இதற்கு வாய் இருந்தால் தனக்குக் குளிர்கிறதென்பதை எடுத்துச் சொல்லும். இந்த ஒலியினால் புலப்படுத்துகிறது போலும்! என்ன அழகான மயில் இது நடுங்க நாம் பார்த்திருக்கலாமா?’ என்று சிந்தனை செய்தான். மயில் மெல்லிய பறவை அதற்கு இரங்காமல் இருக்கலாமா?
மயிலுக்கு போர்வை தந்த பேகன்
எப்படியாவது அதன் துயரத்தைப் போக்க வேண்டும் என்று எண்ணிய அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை. சட்டென்று தன் மேல் உள்ள விலை உயர்ந்த போர்வையை எடுத்தான். மயிலின் அருகே சென்று அதற்குப் போர்த்துவிட்டான்.
அருகில் இருந்தவர்கள், “என்ன இது!” என்றார்கள்.
“பாவம்! குளிரால் நடுங்கும் அதற்கு இதைப் போர்த்தினால் நல்லதென்று தோன்றிற்று!”
அவர்களுக்கு வியப்புத் தாங்கவில்லை. பேகன் செய்தது பேதைமைச் செயல் என்று அவர்கள் எண்ணவில்லை. பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டு தாங்காத அவனுடைய உள்ளத்தின் உயர்வையே அவர்கள் நினைத்துப் பார்த்தார்கள்.
அவனுடைய வள்ளன்மையை அவர்கள் நன்றாக அறிந்தவர்கள். புலவர்களுக்குப் பொன்னும் பொருளும் வாரி வழங்குவதைக் கண்டு வியந்திருக்கிறார்கள். பாணர்களுக்குப் பரிசில்கள் தருவதைக் கண்ணாரக் கண்டு களித்திருக்கிருர்கள். கூத்தர்களுக்கு விருந்தும் விரும்பும் பொருளும் வழங்குவதைப் பார்த்து இறும்பூது அடைந்திருக்கிருர்கள்.
ஆனால் இப்போது அந்த வள்ளல் செய்த செயலை வள்ளன்மைச் செயல் என்பதா? ஆடும் மயிலுக்குப் பரிசு வழங்கியதாகச் சொல்வதா? உயிர்க் கருணை என்று சொல்வதா? மயில் போர்வையைப் போர்க்குமா என்று அவன் யோசிக்கவில்லை.
அது விலை உயர்ந்த மேலாடை ஆயிற்றே என்று தயங்கி நிற்கவில்லை. ஒரு பறவைதன் நாட்டில் வாழும் பறவை—துன்புறுவதாக எண்னினான்; அந்தக் கணத்திலே அவன் மனம் உருகியது; ஒன்றையும் எண்ணாமல் மேலே உள்ள படாத்தை எடுத்துப் போர்த்திவிட்டான்.

மயில் பறந்து போய்விட்டது. காவலர் பேகன் அளித்த போர்வையை எடுத்துக் கொண்டனர். உலகுக்கு அறிவிக்கக் காவலர்களுக்கு ஓர் அதிசயச் செய்தி கிடைத்தது. பேகனுடைய உள்ளத்தின் மென்மையை எடுத்துக் காட்டும் ஒரு நிகழ்ச்சியை அவர்கள் காணும் வாய்ப்பல்லவா பெற்றார்கள்? பேகன் அரண்மனையை அடைந்தான்.
அவனுடன் சென்றிருந்த காவலர்கள் அவன் மயிலுக்குப் போர்வையை அளித்த அதிசயத்தை யாவரிடமும் சொல்லிச் சொல்லி வியந்தார்கள். புலவர்களிடம் புகன்றார்கள். புலவர்களுக்கு ஒரு செய்தி தெரிந்தால் வாளா இருப்பார்களா? தம்முடைய பாவினால் பேகன் புகழை முழக்கினார்கள்.
பரணர் அந்த அரிய செயலைப் பாராட்டினுர். “மயில் மேலாடையை உடையாக உடுக்குமா? அன்றி மேலே போர்வையாகத்தான் போர்த்துக் கொள்ளுமா? இது பேகனுக்குத் தெரியாதா? தெரியும். ஆனால் அந்தச் சமயத்தில் அவன் கருணை உள்ளம் உருகியது. தன் படாத்தை மயிலுக்கு அளித்துவிட்டான்” என்று பாடினார்.
கொடை மடம்
இன்னாருக்கு இன்னது கொடுக்க வேண்டும் என்பதை எண்ணிக் கொண்டிராமல், கிடைத்ததை நினைத்தபோதே கொடுப்பதைக் கொடை மடம் என்று சொல்வார்கள். மடம் என்பதற்கு அறியாமை என்று பொருள். இது சரியா, தவறா என்று ஆராயும் அறிவுக்கு இடம் கொடாமல், உள்ளத்தில் கொடுக்கத் தோன்றியபோதே கொடை மடம் உடையவர்கள் கொடுத்துவிடுவார்கள்.
பாடியவர் : பரணர்.
பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன்.
திணை: பாடாண். துறை: இயன்மொழி.
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
கொடைமடம் படுதல் அல்லது, 5
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.
– புறநானூறு 142
விளக்கம்
பேகன் மயிலின் இயல்பை அப்போது சிந்தித்துப் பார்க்கவில்லை; போர்வையை வழங்கிவிட்டான். இந்தக் கொடை மடத்தைப் பரணர் பாராட்டினர். “தண்ணீரே இல்லாமல் போன குளத்திலும் மழை பெய்கிறது; அகன்ற வயலிலும் பொழிகிறது; சிறிதும் பயன்படாத உப்பு நிலத்திலும் பெய்கிறது. இங்கேதான் பெய்ய வேண்டும், இங்கே பெய்யக் கூடாது என்று அது யோசிப்பதில்லை.
மதம் பொருந்திய யானையையும் வீர கண்டையை அணிந்த காலையும் உடைய பேகன் அந்த மாரியைப் போன்றவன். வரம்பு இல்லாமல், ஆராய்ச்சி இல்லாமல் கொடையைப் பொழிகிற மழை அவன். இப்படிக் கொடை மடம் உடையவனாக இருக்கிறான் என்பதனால், வீரச் செயல்களிலும் அறியாமை உடையவன் என்று எண்ணக்கூடாது.
படையைக் கொண்டு போரிடும் திறத்தில், நன்றாகச் சூழ்ந்து, இடத்துக்கும் காலத்துக்கும் தன் வலிமைக்கும் மாற்றான் வலிமைக்கும் ஏற்றபடி செயலை வகுப்பதில் வல்லவன். கொடை மடம் படுவானே அல்லாமல் படை மடம் படமாட்டான்” என்று அந்தப் பெரும் புலவர் பாடினர். அவன் கொடையைப் புகழ்ந்ததோடு நில்லாமல் வீரத்தையும் எடுத்துக் காட்டினர்.
அது முதல் தமிழ் மக்கள் பேகனை மயிலுக்குப் போர்வை வழங்கிய வள்ளல் என்று பாராட்டத் தொடங்கினார்கள்.
***
பாடியவர்: பாணர்
திணை: பாடாண்.
(ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.)
துறை: பாணாற்று படை.
(பரிசு பெற்ற பாணன், பரிசு பெற வரும் பாணனுக்குச் செல்லும் வழியும் புரவலன் புகழும் கூறி ஆற்றுப்படுத்துதல்.)
புலவராற்றுப் படை என்றும் கூறுவர். பரிசு பெற்ற புலவர் பரிசு பற வரும் புலவர்க்குப் புரவலன் ஊரையும் பேரையும் சிறப்பையும் எடுத்துரைத்து ஆற்றுப்படுத்துதல்.
பாணன் சூடிய பசும்பொன் தாமரை
மாணிழை விறலி மாலையொடு விளங்கக்
கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட்டு அசைஇ
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்
யாரீ ரோஎன வினவல் ஆனாக்
காரென் ஒக்கல் கடும் பசி இரவல!
வென்வேல் அண்ணல் காணா ஊங்கே
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும்
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம்கோ
கடாஅ யானைக் கலிமான் பேகன்
எத்துணை ஆயினும் ஈதல் நன்றுஎன
மறுமை நோக்கின்றோ அன்றே
பிறர், வறுமை நோக்கின்றுஅவன் கைவண்மையே.
பொருள்
வாடிய தோற்றத்தோடு காணப்படும் சுற்றத்தாரோடும் கடும் பசியோடும் உள்ள இரவலனே! (பாணனே!)
“எங்களைப் பார்த்தால் பாணன் போல் இருக்கிறதே! நீங்கள் உயர்ந்த பொன்னாலான தாமரை மலரை அணிந்திருக்கிறீர்கள்; உங்கள் விறலியர் சிறப்பாகச் செய்யப்பட்ட மாலையோடு விளங்குகிறார்கள். விரைவாகச் செல்லும் குதிரைகளை உங்கள் தேரிலிருந்து அவிழ்த்துவிட்விட்டு, நீங்கள் உங்கள் சொந்த ஊரில் இருப்பதைப் போல் இந்த வழியில் இளைப்பாறுகிறீர்களே! நீங்கள் யார்?” என்று கேட்கிறாயோ?
வெற்றியைத் தரும் வேல்களையுடைய தலைவன் பேகனைக் காண்பதற்கு முன் நாங்களும் உன்னைவிட வறியர்களாகத்தான் இருந்தோம். இப்பொழுது, அவ்வறுமை நீங்கி இந்த நிலையில் உள்ளோம்.
எப்பொழுதும் உடுத்தவோ அல்லது போர்த்தவோ பயன்படுத்தாது என்று தெரிந்தும் தன் போர்வையை மயிலுக்கு அளித்த எங்கள் அரசன் பேகன் மதமிக்க யானைகளும் செருக்குடைய குதிரைகளும் உடையவன். மறுமையில் வரக்கூடிய நன்மைகளை எதிர்பார்க்காமல் எவ்வளவு ஆயினும் பிறர்க்கு அளிப்பது நன்று என்று எண்ணுபவன்.
அவன் வண்மை மறுமையை நோக்கியது அல்ல; அது பிறர் வறுமையை நோக்கியது.
பேகன் மனைவி கண்ணகி
இவ்வாறு புகழ்பெற்ற பேகன் ஆடல் கலையில் வல்ல ஒரு விறலியின் ஆட்டத்திலும் பாடலிலும் அவன் ஈர்ப்பு கொண்டான். அதனால் மற்றக் காரியங்களைக்கூட மறந்திருந்தான். அந்த விறலியும் சில காலம் ஆவிநன்குடியில் தங்கியிருந்தாள்.
கண்ணகியின் ஊடல்
இது சம்பந்தமாகக் கண்ணகிக்குத் தன் கணவன்மேல் ஐயம் உண்டாயிற்று. அதனால் கண்ணகிக்கு கோபமும் எழுந்தது. அதை ஊடல் என்பார்கள். எப்படியோ அந்தச் சிறிய ஊடல் பெரிதாக வளர்ந்துவிட்டது. இதை பற்றி விளக்கம் கேட்ட கண்ணகியை பேகன் ஒரு மாளிகைக்கு அனுப்பி அங்கேயே இருக்கும்படி சொல்லி விட்டான். மேலும்…
***
கடையெழு வள்ளல்கள் pdf
கடையேழு வள்ளல்கள் PDF மற்றும் eBook வடிவில் படிக்க… PDF | eBook