மூதுரை – ஔவையார் | Free Download PDF & Kindle

மூதுரை பாடல்கள்

மூதுரை பாடல் விளக்கம் PDF

மூதுரை இது ஔவையார் இயற்றிய தமிழ் நீதி நூல்களுள் ஒன்று. பழமை வாய்ந்த அறக்கருத்துகளைக் தன்னிடம் கொண்டிருப்பதால் இது (மூப்பு + உரை) மூதுரை என அழைக்கப்படுகிறது. இதற்கு வாக்குண்டாம் என்ற மற்றொறு பெயரும் உண்டு. மூதுரையின் கடவுள் வாழ்த்துப் பாடல் “வாக்குண்டாம்” என்று அழைக்கப்படுவதால் மூதுரைக்கு இப்பெயர் ஏற்பட்டது.

இந்நூலில் 30 வெண்பாப் பாடல்கள் உள்ளன. ஒவ்வொரு பாடலும் ஒரு தனிக்கருத்தை வலியுறுத்து கூறுகிறது.

கடவுள் வாழ்த்து

மூதுரை பாடல் விளக்கம் PDF
மூதுரை – ஔவையார்

வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள்
நோக்கு உண்டாம் மேனி நுடங்காது-பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

பொருள்:

பூக்களைக் கொண்டு சிவந்த மேனியுடைய விநாயகரது
பாதங்களைத் துதிப்பவர்க்கு வாக்குத் திறமையும், நல்ல மனமும், பெருமலரை உடைய இலக்குமியின் அன்பும், நோயற்ற வாழ்வும் கிடைக்கும்

பாடல் 1 :

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
‘என்று தருங்கொல்?’ என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

பொருள்:

ஒருவர்க்கு உதவி செய்யும்போது, அதற்கு ப்ரதியுபகாரமும்,
நன்றியும் எப்போது கிடைக்கும் என்று கருதி செய்யக்கூடாது. எப்படிப்பட்ட நீரை வேர் மூலம் உண்டாலும், நன்கு தளராது வளர்ந்துள்ள தென்னை மரம் அந்நீரை சுவையான இளநீராக தந்து விடும்.  அதுபோல ஒருவர்க்கு செய்த சிறு உதவியும் பெரிய விதத்தில் நமக்கு ஒரு காலம் நிச்சயம் நன்மை பயக்கும்.

பாடல் 2 :

நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர். 

பொருள்:

நல்லவர்களுக்கு செய்யும் உதவி, கல்லின் மேல்
எழுத்தைச் செதுக்குவது போன்றது.  அது எவரும் அறியும்
வண்ணம் என்றும் நிலைத்திருக்கும்.  அப்படியல்லாது
இரக்கமற்றவர்களுக்கு செய்யும் உதவி எவர்க்கும் பயன்தராது. அது நீரின் மேல் எழுதும் எழுத்துக்களைப் போன்று பயனின்றி நிலைக்காது போகும்.

பாடல் 3 :

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.

பொருள்:

இளமையில் வறுமையும், இயலாத முதுமையில் செல்வமும்
பெற்றால் அதனால் துன்பமே.  அனுபவிக்க முடியாது.  அது
பருவமில்லாத காலங்களில் பூக்கும் பூக்களைப் போன்றது.  அதைப்போல் துணைவனில்லாத பெண்களின் அழகும் வீணே.

பாடல் 4 :

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும். 

பொருள்:

நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்
நண்பர்களாக மாட்டார்கள்.  நம் நிலை தாழ்ந்தாலும்
நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது. தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்போன்றது அவர் நட்பு.

பாடல் 5 :

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 

பொருள்:

கிளைகளோடு கூடிய நீண்ட மரங்களும் பருவத்தில்
மட்டும் பழங்களைத் தரும்.  அது போல மேன்மேலும் முயன்றாலும் நாம் செய்யும் கார்யங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் தரும்.

பாடல் 6 :

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான். 

பொருள்:

கல் தூண் ஓரளவுக்கு மேல் பாரத்தை ஏற்றினால்
உடைந்து விழுந்து விடுமேயல்லாது, வளைந்து போகாது.  அது போலவே மானக்குறைவு ஏற்பட்டால் உயிரை விட்டு விடும் தன்மையுள்ளவர்கள் எதிரிகளைக் கண்டால் பணிவதில்லை.

பாடல் 7 :

நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற
நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு-மேலைத்
தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம்
குலத்து அளவே ஆகும் குணம். 

பொருள்:

அல்லிப்பூ நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ
அவ்வளவே வளரும்.  நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு. முற்பிறப்பில் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம்.  குணம் நாம் தோன்றிய குலத்தின்
அளவே.

பாடல் 8 :

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே-நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று. 

பொருள்:

நல்லவர்களைக் காண்பதும், நமக்கு நன்மை பயக்கும்
அவர் சொல்லைக் கேட்பதுவும், அவர்கள் குணங்களை
மற்றவரிடத்தில் சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும்
நல்லது.

பாடல் 9 :

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது. 

பொருள்:

தீயவர்களைப் பார்ப்பதும், பயனற்ற அவர் சொல்லைக்
கேட்பதுவும், அவர்களைப் பற்றி அடுத்தவர்களிடத்தில்
சொல்வதுவும், அவர்களோடு சேர்ந்து இருப்பதுவும் நமக்குக்
கெடுதியே.

பாடல் 10 :

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

” கொன்றை வேந்தன் ” படிக்க இங்கே …

பொருள்:

 உழவன் நெல்லுக்குப் பாய்ச்சும் நீர் அங்கிருக்கும்
புல்லுக்கும் பயனைத் தரும்.  அது போலவே இந்தப் பழமையான உலகில் நல்லவர் ஒருவர்க்காகப் பெய்யும் மழை (பலன்கள்) எல்லாருக்குமே பயனைத் தரும்.

பாடல் 11 :

பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்
விண்டு உமிபோனால் முளையாதாம்கொண்ட பேர்
ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி
ஏற்ற கருமம் செயல்

பொருள்:

நமக்குப் பயன் தருவது கடைசியில் அரிசியே
ஆனாலும், அது உமி இன்றி முளைப்பதில்லை.  அது போலவே பேராற்றல் உடையவர்கள் செய்யும் செயலும் அடுத்தவர் துணையின்றி முடிவதில்லை.

பாடல் 12 :

மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம்
உடல் சிறியர் என்று இருக்க வேண்டாகடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்

பொருள்:

தாழம்பூவின் மடல் பெரிதாக இருந்தாலும் வாசம்
தருவதில்லை.  ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல
வாசனையைத் தருகிறது.  பெருங்கடலின் நீர் துணி தோய்க்கக் கூட உதவுவதில்லை, ஆனால் அதனருகிலேயே தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது.  எனவே உருவத்தை வைத்து
ஒருவரை எடை போடக் கூடாது.

பாடல் 13 :

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
அவையல்ல நல்ல மரங்கள்சபை நடுவே
நீட்டு ஓலை வாசியா நின்றான் குறிப்பு அறிய
மாட்டாதவன் நன் மரம்

பொருள்:

கிளைகளோடும், கொம்புகளோடும் காட்டில் நிற்பவை
மரங்கள் அல்ல.  சபையின் நடுவே ஒருவர் தரும் ஓலையில்
எழுதியிருப்பதைப் படிக்கத் தெரியாதவனும், அடுத்தவர் மனதை அறியாதவனுமே மரம் போன்றவன்.

பாடல் 14 :

கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி
தானும் அதுவாகப் பாவித்துதானும் தன்
பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி

பொருள்:

காட்டில் மயில் ஆடுவதைப் பார்த்த வான்கோழி உடனே
தன்னையும் அதைப் போலவே நினைத்து தன்னுடைய அழகில்லாத சிறகை விரித்து ஆடுவதை போன்றதே, கல்வி கற்காதவன் சொல்லும் கவிதையும், அதனால் ஒரு பயனும் இல்லை.

பாடல் 15 :

வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல்பாங்குஅழியாப்
புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம்
கல்லின் மேல் இட்ட கலம்

பொருள்:

புலிக்கு நோயைக் குணமாக்கிய விஷத்தைப் போக்கும்
வைத்யன் உடனே அதற்கே உணவாவது நிச்சயம், அதைப்
போன்றதே நன்றி அறியாத அற்பர்களுக்கு நாம் செய்யும்
உதவியும். கல்லின் மேல் எறியப்பட்ட பானையைப் போல அந்த உதவியும் நம்மையே உடன் அழித்து விடும்.

பாடல் 16 :

அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டாமடைத் தலையில்
ஓடுமீன் ஓட உறுமீன் வரும் அளவும்
வாடி இருக்குமாம் கொக்கு

பொருள்:

நீர் பாயும் தலை மடையில் பல சிறு மீன்கள் ஓடிக்
கொண்டிருந்தாலும், கொக்கு வாடியிருப்பதைப் போலக் காத்துக்கொண்டிருக்கும்.  எது வரை? தனக்குரிய பெரிய மீன் வரும் வரை. அதைப் போலவே அறிஞர்களின் அடக்கமும்.  அதைக் கண்டு அவர்களை அலக்ஷ்யம் செய்து வென்று விட நினைக்கக்கூடாது.

பாடல் 17 :

அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; –அக்குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறவார் உறவு

பொருள்:

குளத்தில் நீர் வற்றிய உடன் விலகிச் செல்லும்
பறவைகள் போல, நமக்குத் துன்பம் வந்தபோது நம்மை விட்டு விலகிச் செல்பவர்கள் உறவினர் அல்லர்.  அந்தக் குளத்திலேயே அப்போதும் சேர்ந்து வாடும் கொட்டி, அல்லி, நெய்தல் கொடிகளைப் போல, நம்முடனேயே நம் துன்பங்களையும் பகிர்ந்து கொள்பவர்களே நம் உறவு.

பாடல் 18 :

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்?-சீரிய
பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும்; என் ஆகும்
மண்ணின் குடம் உடைந்தக் கால்

பொருள்:

தங்கத்தால் ஆன பானை உடைந்து சிதறினால், அதன்
சிதறலும் தங்கமே.  ஆனால் மண்பானை உடைந்து போனால்? அதைப் போன்றதே சிறந்த பண்புடையவர்களுக்கும்,
மற்றவர்களுக்கும் உண்டாகும் தாழ்வும்.

பாடல் 19 :

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர்
நாழி முகவாது நானாழிதோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம்
விதியின் பயனே பயன்

பொருள்:

தோழி! எவ்வளவு தான் அமுக்கி, பெரும் கடலிலே
முகந்தாலும், ஒரு நாழி (படி) அளவுள்ள பாத்ரம் நான்கு படி நீரை முகவாது.  நல்ல கணவனும், செல்வமும் நிறைந்திருந்தும் நமக்குக் கிடைக்கும் சுகத்தின் அளவும் அதைப் போன்றதே.  அது நம் முன்
ஜன்ம நல் வினைகளின் அளவைப் பொறுத்தது.

பாடல் 20 :

உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதிஉடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு

” இராவண காவியம் ” படிக்க இங்கே …

பொருள்:

வியாதி நம்முடனேயே பிறந்து நம்மைக் கொன்று
விடுகிறது.  எனவே உடன் பிறந்தோர் எல்லாரையும் நம் உறவு என்று நினைக்க முடியாது.  உடன் பிறக்காது எங்கோ பெரிய மலையில் இருக்கும் மருந்து நம் வ்யாதியைத் தீர்ப்பது போல, அன்னியரும் நமக்கு நன்மை தருபவராக இருக்கக் கூடும்.

பாடல் 21 :

இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின்இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும்

பொருள்:

நல்ல மனைவி மட்டும் அமைந்து விட்டால் அந்த
இல்லத்தில் இல்லாதது என்று எதுவுமே இல்லை.  ஆனால் அந்த இல்லாள் (மனைவி) குணமில்லாதவளாக (இல்லாள்) இருந்து விட்டாலோ, கடுமையான எதிர் வார்த்தைகள் பேசி விட்டாலோ அந்த இல்லம் புலியின் குகை போலாகி விடும்.

பாடல் 22 :

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்?-கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை

பொருள்:

மட நெஞ்சே! திட்டத்தோடு கற்பக மரத்திடம்
சென்றாலும், எட்டிக்காயே கிடைத்ததென்றால் அது நம் முன்
வினைப் பயனே.  விதியில் எழுதியுள்ளபடிதான் நமக்குக்
கிடைக்குமே அல்லாது நாம் நினைப்பதெல்லாமா நடந்து விடும்?

பாடல் 23 :

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரேவில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்

பொருள்:

சிறு வேறுபாடு வந்தாலே தாழ்ந்தோர் பிளந்து போட்ட
கல்லைப் போலப் பிரிந்து விடுவர்.  பெரும் சினத்தால் பிரிந்தாலும் பெரியோர், பிளந்த தங்கத்தைப் போல மீண்டும் சேர்ந்து விடுவர். அவர்கள் கோபம், ஒருவர் எய்த அம்பால் நீரில் உண்டான வடுவைப் போன்றதே.


பாடல் 24 :

நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தார் போல்
கற்றாரைக் கற்றாரே காமுறுவர்கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உகக்கும் பிணம்

பொருள்:

குளத்தில் பூத்திருக்கும் தாமரையை அன்னப்பறவை
சேர்ந்தது போல கற்றவர்களைக் கற்றவர்களே விரும்பிச் சேர்வர். சுடுகாட்டில் பிணத்தைக் காக்கைச் சேர்வது போல, கல்வி அறிவில்லாத மூடரை, மூடர்களே சேர்வர்

பாடல் 25 :

நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும்
அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்புநெஞ்சில்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்

பொருள்:

தன்னிடம் விஷமிருப்பதை அறிந்து நாகப்பாம்பு மறைந்து
வாழும்.  விஷமில்லாத தண்ணீர்ப் பாம்போ பயமில்லாது எங்கும் வெளியில் திரிந்து கொண்டிருக்கும்.  அதைப் போலவே நெஞ்சில் குற்றம் உடையவர்களும் அதை மறைத்தே வாழ்ந்து கொண்டிருப்பர்,
குற்றமில்லாதவர்களோ கபடமின்றி வெளியில் திரிந்து
கொண்டிருப்பர்.

பாடல் 26 :

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன்மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு

பொருள்:

ஒப்பிட்டு பார்க்கும் போது, அரசனை விட, கசடறக்
கற்றவனே மேலானவன்.  ஏனென்றால், அரசனுக்கு அவன்
தேசத்தைத் தவிர வேறெங்கும் சிறப்பு இல்லை.  ஆனால்
கற்றவனுக்கோ அவன் செல்லுமிடமில்லாம் சிறப்பு.

பாடல் 27 :

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்

பொருள்:

கற்றறிந்தவர் வார்த்தை கற்காதவர்களுக்கு துன்பத்தைத்
தரும்.  தர்மம் தீயவர்களைத் அழிக்கும், மெல்லிய வாழைக்கு
அதன் கன்று அழிவைத் தரும்.  வாழ்க்கைக்குப் பொருந்தி
நடக்காத மனைவி அந்த வீட்டிற்கு அழிவைத் தருவாள்.

பாடல் 28 :

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால்தம்தம்
தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால்
மனம் சிறியர் ஆவரோ மற்று

பொருள்:

தேய்ந்து மெலிந்திருந்தாலும் சந்தனம் மணம்
குறைவதில்லை.  அதைப் போலவே தாராள குணம் படைத்த
அரசர்களும் தன் பொக்கிஷம் குறைந்த காலத்தும் மனம்
மாறுவதில்லை

பாடல் 29 :

மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம்திரு மடந்தை
ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது அவளோடும் போம்

பொருள்:

ஒருவனைச் சூழ்ந்து வாழும் இனிய சுற்றமும்,
அவனுடைய பெரும் செல்வமும், அவன் அழகும், அவன் குலப் பெருமையும் இலக்கிமியின் அன்பும் ஒருவனுக்கு இருக்கும் வரையில் தான்.  அவள் அகலும் போது இவையனைத்தும் போய் விடும்.

பாடல் 30 :

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்

பொருள்:

தன்னை வெட்டுபவனுக்கும் நிழலைத் தந்து காக்கும்
மரத்தைப் போல, அறிவுடையார் அவர்தம் உயிருக்கே தீங்கு
செய்பவனையும் இயன்ற வரைக் காக்கவே செய்வர்.

 

மூதுரை மின் புத்தகம் | PDF | eBook | Mobi | Kindle 

 

தேடல் தொடர்பான தகவல்கள்:

மூதுரை பாடல், muthurai in tamil, moothurai, மூதுரை பாடல்கள், ஔவையார் மூதுரை பாடல்கள், moothurai tamil book pdf, moothurai in tamil, moothurai padalgal in tamil, avvaiyar moothurai tamil, மூதுரை வரலாறு, மூதுரை பாடல் விளக்கம் pdf

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   Logo
   Register New Account
   Reset Password