ரமணிச்சந்திரன்
என்னைக் கதை எழுதத் தூண்டியவர் என் சகோதரியின் கணவரே. பெரிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியராக இருந்த அவர், நான் என் தங்கைக்கு எழுதிய கடிதங்களைப் படித்து விட்டு, கதை எழுதுமாறு எனக்கு ஊக்கம் கொடுத்தார். பாலசந்திரனின் மனைவியான ரமணி. ‘ரமணிச்சந்திரன்’ ஆனதும் அவரது செயலே.
ரமணிச்சந்திரன் பிறந்தது, 1938-ம் ஆண்டு, ஜூலை மாதம் 10-ம் தேதி.
அனால், ஒரு கட்டத்தில், நம் கதைகள் உண்மையிலேயே தரமுள்ளவையா, அன்றி, இந்த உறவு முறைக்காகப் பிரசுரம் ஆகின்றனவா என்று, என் மனம் சற்றுக் கலங்கியது உண்டு.
அப்போது, வேறு பெயர், முகவரியில், ஒரு போட்டிக்குக் கதை எழுதி அனுப்ப, அதற்குப் பரிசுக் கிடைக்கவே, பரிசுடன் சேர்ந்து, மன அமைதியும் கிடைத்தது.
பொதுவாக, நான் பார்த்த, கேட்ட நிகழ்ச்சிகளை வைத்துக் கதை புரிய எனக்குத் தயக்கமாக இருக்கும். நான் பார்த்த கோணம் சரியில்லாமல் போகலாம். என்னிடம் சொன்னவர்கள் அவர்களது அபிப்பிராயத்தைப் புகுத்திகச் சொல்லியிருக்கலாம். இது போன்ற நிகழ்ச்சிகளைக்கொண்டு எழுதுவது, எப்படிச் சரியாகும் என்ற யோசனையில், அப்படி எழுதாமலே விட்டுவிடுவேன்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்
அனால், “உங்கள் இந்தக் கதையில் போல, என் வாழ்வில் நடந்திருக்கிறது” என்று முன்பின் அறியாத அன்னியர்கள் சொல்லியிருக்கிறார்கள். கேட்கும்போது, ஆச்சரியமாக இருக்கும்.
அதே போல, என் கதையில் கண்டது போல, உறுதியோடு உழைத்து முன்னேறப் போவதாகச் சொல்ல்லும்போது, சந்தோஷமாக இருக்கும்.
உங்கள் கதாநாயகிகளைப் போல வாழ முயற்சிப்பதாக சிலர் சொல்லும்போது பயமாக இருக்கும். தவறான எண்ணங்களைத் தூண்டி விட்டுவிடக் கூடாது அல்லவா?
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் என்று, என்னைக் கவர்ந்த இடங்கள், காட்சிகளைப் பெரிதும் கதைகளில் கொண்டு வருவேன். முக்கியமாகக் கடல். அதன் அலைகள், நிலவின் ஒளியில் பல்லாயிரம் வெள்ளி முகடுகளோடு அதன் அழகு. பொன் மணல் பரப்பு…
கடலும் அழகிழந்து போயிற்று
கடற்கரையில் வீடு இருந்ததால், நான் ரசித்தவை எல்லாம் கதைகளில் வந்திருக்கின்றன. ஆனால், சுனாமி வந்த பிறகு, என்னவோ, கடலில் நான் பழைய அழகைக் காணவில்லை, காணமுடிவதில்லை. சென்னையில் சுனாமி வருவதற்கு சுமார் பத்தே நிமிஷங்களுக்கு முன்பாக, கடற்கரைச் சாலை வழியே சென்றிருக்கிறேன், என் வழக்கம் போலவே, கடலைத் திரும்பிப் பார்த்து ரசித்த படியே. முக்கால் மணி நேரம் கழித்துத திரும்பி வந்தால், அந்த வழியே வருவதற்கு போலிஸ் விடவில்லை.
ராணி மேரிக் கல்லூரிவரை, கடல் நீர். அரைக்கால் சட்டை போட்டுக்கொண்டு கிரிக்கெட் ஆடிய சிறுவர்கள், பாண்டை மடித்த்துவிட்டுக்கொண்டு, கடல் நீரில் கால் நனைத்து நின்ற இளைஞர்கள் எல்லோரும் என்ன ஆகியிருப்பார்கள்? அதை மறக்க முடியாததாலேயே, இன்று கடலும் அழகிழந்து போயிற்று.
கல்ல்லூரிக் காலத்தில் சுற்றுலா சென்றபோது பார்த்த இடம், கொச்சி அருகில் உள்ள ஒரு மாளிகை. சுற்றிலும் கடல். படகு மூலமாகத்தான் அங்கு போயாக வேண்டும். படகை விட்டு இறங்கினால், சில நூறு அடிகள் தூரத்துக்கு, வெகு சுத்தமான பொன் மணல் பரப்பு. அதன் பின் பசேல் என்று செடி கொடிகள். இடையே, வெகு கம்பீரமான ஒரு மாளிகை. அந்த மாளிகையின் அழகு, இன்றும் என் மனக்கண் முன் நிற்கிறது. ‘எனக்காகவே நீ’ கதையில் வரும் மாளிகை, அதுவே. மேற்குக் கடற்கரயில் வரும் ஒதமும், அலைகளும், கடலின் அழகும்…. சிறு வயதில் கடல் அருகிலேயே வளர்ந்ததும் இந்தக் கதையில் வடிவமைக்கப் பட்டிருக்கின்றன.
என்ன என்ன ஆசைகளோ
ஊட்டியும், கொடைக்கானாலும்,, குன்னூரும், அங்குள்ள எஸ்டேட்டுகளும்: சின்ன வயதில் தந்தையோடு, குற்றாலம், கன்யாகுமரி என்று ஒரு தரம் சென்றோம். அப்போது ஒரு மாளிகையின் ஒரு பகுதியில் தங்கினோம். சிதிலமாகிக் கொண்டிருந்த மாளிகை. அதுவே ‘காத்திருக்கிறேன் ராஜகுமாரவில்’ வருவது.
தாத்தா வீட்டு மாந்தோப்பும், அதில் இருந்த இனிப்பு மாங்காய் மரங்களும், அருகில் இருந்த ஒன்று விட்ட மாமா வீட்டில் இருந்த பலவகை மாமரங்களும், மறக்க முடியாதவையே. பல கதைகளில், எந்த மாந்தோப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. கானமழை நீ எனக்கு, சுகம் தரும் சொந்தங்களே…. இன்னும் பல.
மலேஷியாவுக்கு ஒரு தரம் போய் வந்தேன். அழகான மலைநாடு. எப்படியும் மூன்று நாட்களுக்கு மேல் மழை பெய்யாமல் இருக்காது என்றார்கள். மழையின் பரிசாக எங்கும் பசுமையும், மரம்,
செடி, கொடி… காட்டுச் செடிகளில் கூடக் கழுவிவிட்ட மாதிரி, ஒரு பளபளப்பு. அங்கே போய்வந்து எழுதிய கதை ஒன்று உண்டு. ‘என்ன என்ன ஆசைகளோ’ என்பது கதையின் பெயர்.
லாவண்யா
அதே போல மும்பை பம்பாயாக இருந்தபோது, முதல் முதலாக அடுக்கு மாடி வீடுகளை அங்கே பார்த்துவிட்டு எழுதிய கதை லாவண்யா. இது போல என் கதைகளின் களங்களை, என் மனதைக் கவர்ந்த இடங்களைக் கொண்டு அமைக்கிறேன். அதை எழுதியபோது என் மகளே சின்னப் பெண். அவள் வளர்ந்து, மணமாகி, அவளுடைய பெண்ணுக்கு ‘லாவண்யா’ என்று பெயர் வைத்திருக்கிறாள். அந்தப் பெயர் அவளுக்கு மிகவும் பிடித்தமானதாம்.
நிஜ வாழ்வுச் சம்பவங்களை முடிந்த அளவு நான் தவிர்த்தாலும், என் கதாபாத்திரங்கள் எல்லாமே, நாம் அன்றாடம் கண்டு பழகுகிறவர்களே. அங்கங்கே செல்லும்போது கண்ணில் படும்போதே, சற்றுக் கவனித்தால், பலர் குணத்தையும் காட்டி விடுவார்கள்.
கதாநாயகன், நாயகி
திருமணத்திற்குப் போனோம் என்றால், உண்மையான அன்புள்ளவர்கள், பெண் மாப்பிள்ளை, வீடியோவுக்கும், போட்டோவுக்கும் நன்றாக இருக்க வேண்டும் என்று, வேர்வை துடைத்துவிடுவார்கள். நெற்றியில் கண்டபடி பூசப்படும் திருநீரு குங்குமத்த்தைச் சீர் செய்வார்கள். தத்தம் ஜரிகை துணிமணிகளையும், நகைகளையும் காட்டி, போஸ் கொடுக்க மாட்டார்கள். உதவுகிரமாதிரி வீடியோவுக்குக் காட்சி கொடுப்போரும் உண்டு. இன்னும், ஒரிருவரைப் பின்னே தள்ளுவதும், தலையே நீட்டி, கேமராவுக்கு முன்னே, தோற்றம் அளிப்பதும், கவனித்தால், கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்… குணநலன்களை (அப்படி ஒன்று இருந்தால்) விளக்குவதாகவும் இருக்கும். இன்னும், வீடியோவின் பிளாஷ் லைட் தங்கள் பக்கம் வரும்போது, சிலர் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொள்வதைப் பார்க்கையில் சிரிப்பு வரும். கூடவே, நம் கதைக்கு வில்லியும் கிடைப்பாள். வில்லன்களும்தான்.
கதாநாயகன், நாயகியைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஒரு திருமண வீட்டுக்குப் போய் வந்தால், அடுத்தடுத்த கதைகளுக்கான ஐந்தாறு வகை மனிதர்களை இனம் கண்டு வரலாம்.
சித்திரமும் கைப்பழக்கம்
முன்னெல்லாம் ஒரு குறிப்பிட்ட பேனாவைக் கொண்டுதான் எழுதுவேன். தங்கமும், வெள்ளியும் கலந்த நிறத்தில் இருக்கும். மை நிறப்பி, நிறப்பி, எழுதுவேன்.
ஆனால், சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னதாக, ஒரு நாள் கதை முடித்துக் கொடுப்பதாக ஒத்துக்கொண்டிருந்ததால், நிறையப் பக்கங்களை வேகமாக எழுத நேர்ந்தது. கொடுத்த வாக்கைக் காப்பாற்றிவிட்டேன். ஆனால், வலது கை நாடு விரலில், தசை நாணில், மீன் சக்தி போய்விட்டது. வ்விரலை அசைக்கவே முடியாதபடி வலி. பேனா பிடித்து எங்கே எழுதுவது?
அப்போதுதான் கம்ப்யூடரில் இரு விரல்களால் தட்டி எழுதத் தொடங்கினேன். இப்போதும் அப்படித்தான. முறையான பயிற்சி இல்லை என்றாலும், வேகம் வந்து விட்டது. ‘சித்திரமும் கைப்பழக்கம்’ தானே?
ரமணிச்சந்திரன் – மிகப் பெரிய விருது
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளில் எழுதத் தொடங்கினேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இந்த நீண்ட நெடு காலக் கட்டத்தில், என்னைச் சுற்றிலும் உள்ள உலகம்தான், என்னமாக மாறிவிட்டது.
போன் பண்ணக்கூடிய இடம் தேடி அலைந்தது மாறி, இப்போது எல்லாரது கையிலும் ஒரு செல்போன். செல்போன், அடுக்குமாடி வீடு, உடை மாற்றங்கள், விஞ்ஞான மாற்றங்கள், மன நிலை மாறு பாடுகள்… எல்லாம் மனதில் கொண்டுதான் கதைகளை அமைக்கிறேன்.
ரஷ்யாவில் பிச்சைக்காரனைப் பற்றி சொன்னால், இளம் தலை முறையினருக்குப் புரியாது என்று சொல்வார்கள். யாசகம் அங்கே ஒழிக்கப்பட்டு, சில தலை முறைகள் ஆகி விட்டதால்.
அப்படி யாருக்கும் புரியாதது எதுவும் என் கதைகளில் இருக்கக் கூடாது என்பது என் ஆசை. நடை, உடை, பாவனை, எண்ணப்போக்கு, அனைத்தையுமே அப்படி யோசித்துதான் எழுதுறேன். எந்த அளவு வெற்றி கிட்டியிருக்கிறது என்பதை, வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும்.
எழுத்துக்கான விருதுகள் சில பல கிடைத்திருக்கின்றன. ஆனால், வாசகர்களான உங்கள் ஆதரவுதான் மிகப் பெரிய விருது அல்லவா? அந்த விருதுக்குத தகுதியுள்ளவளாக எப்போதும் இருக்கக் கடவுள் அருளவேண்டும்.
– அன்புடன், ரமணிச்சந்திரன்
Ramanichandran Novels 2020 Free download PDF
ரமணிச்சந்திரன் எழுதிய 100-கக்கும் அதிகமான புத்தகங்கள் பதிவிறக்க இந்த இணைப்பை பயன்படுத்துக.. ரமணிச்சந்திரன் நாவல்கள் PDF Free Download.
ரமணிச்சந்திரன் புத்தகங்கள் வாங்க
ரமணிசந்திரன் அவர்களின் புத்தகங்களை பணம் கொடுத்து வாங்கி எழுத்தாளருக்கு மிக பெரிய உதவியை செய்யுங்கள்.
enaku piducha elluthalar na life oru thadavayathu sathikkanu
உங்களை காண மிகவும் ஆவலாக உள்ளேன் அம்மா