2. மன்னன் யூரிஸ்தியஸின் கட்டளை

ஹெர்க்குலிஸ் கதைகள்

 

2. மன்னன் யூரிஸ்தியஸின் கட்டளை
ஹெர்க்குலிஸூக்கு வயது பதினேழாயிற்று. அவன் கிரானுடைய பள்ளியை விட்டு வெளியேறித் தனியாக வாழத் தொடங்கினான். மக்களைத் தொந்தரவு செய்து வந்த விலங்குகளை வதைப்பதும் வலியோர் மெலிந்தவரை வருத்தாமல் காப்பதும் அவனுக்குத் தொழில்களாயின. இவற்றால் மக்களிடையே அவனுடைய புகழ் வளர்ந்து வந்தது.

ஆனால், அந்தச் சமயத்தில் அவன் வேறு ஒருவனுக்கு அடிமை போலிருந்து சில ஆண்டுகள் பணியாற்ற நேர்ந்தது. அவன், பூமியில் தோன்றியதிலிருந்தே தேவர்களின் அரசியான ஹீரா தேவி அவனுக்கு எதிரியாக இருந்து வந்தாள் என்பது முன்னரே கூறப்பட்டுள்ளது. அவளைச் சமாதானப்படுத்துவதற்காகச் சீயஸ் கடவுள் ஒரு நிபந்தனை விதித்திருந்தார். அதாவது, ஹெர்க்குலிஸ் தக்க வயது வந்ததும், மைசின் நகரத்து மன்னனான யூரிஸ்தியஸிடம் கட்டுப்பட்டுச் சிறிது காலம் அவன் ஏவிய பத்துப் பணிகளைச் செய்து முடிக்க வேண்டுமென்றும், அதற்குப் பின்னால் அவன் ஒலிம்பிய மலைக்கு வந்து ஒரு தேவனாக வசிக்க வேண்டுமென்றும் அவர் கூறியிருந்தார். அவர் குறித்திருந்த காலம் வந்துவிட்டது. யூரிஸ்தியஸ் ஹெர்க்குலியசின் சிற்றன்னையின் மைந்தன். அவனுக்கு ஹெர்க்குலிஸிடம் அச்சமும் பொறாமையும் அதிகம். ஆகவே, காலம் விட்டது என்பதை அறிந்து, அவன் ஹெர்க்குவிஸுக்குத் தூதர்களை அனுப்பிக் தன்னிடம் வந்து பணிபுரிய வேண்டுமென்று அவனை அழைத்தான். முதலில் ஹெர்க்குலிஸ் மறுத்துவிட்ட போதிலும், பிறகு, சீயஸ் கடவுளின் கட்டளை என்பதால், அவன் மைசீன் நகருக்குச் சென்று யூரிஸ்தியஸைக் கண்டான்.

ஆறடிக்குமேல் உயரமாயும், உலகிலேயே மிகப் பெரியவனாயும் ஒரு வீரன், ஒரு தோளிலே வில்லும், வலக்கரத்திலே ஒரு கதையும் தாங்கி, வீதி வழியாக அரண்மனையை நோக்கி வந்துகொண்டிருந்தான் என்பதைக் காவலர் முன்னதாகவே மன்னனுக்குத் தெரிவித்திருந்தனர். ‘கதை’ என்ற சொல்லிலிருந்து வருகின்றவன் ஹெர்க்குலிஸ்தான் என்று அவன் தெரிந்து, தன்னைச் சுற்றிலும் பலசாலிகளான பல வீரர்களை நிற்க வைத்துக் கொண்டு. அவன் தன் கொலுமண்டபத்தில் விற்றிருந்தான்.

ஹெர்க்குலிஸ் மண்டபத்துள் வந்ததும் , அரியனையில் அமர்த்திருந்த யூரிஸ்திஸ் பாதி அச்சத்தோடும், பாதி வெறுப்போடும் அவனை ஏறிட்டுப் பார்த்தான். அந்த வீரர் திலகத்தின் அகன்ற மார்பும், திரண்ட தோள்களும், நெடிய உருவமும், வீரத் திருவிழிப் பார்வையும் அவனுடைய உள்ளத்தை உருக்கிவிட்டன. இவன் மானிடனா, மானிட மடங்கலா? என்று அவன் அஞ்சி நடுக்கமுற்றான். ஹெர்க்குலிஸும் அவனை ஒரு முறை பார்த்தான். இருவரும் முகமனாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. ஹெர்க்குலிஸ், வரவேற்புரைக்காகக் காத்திராமல், தான்
வந்த விஷயத்தை எடுத்துச் சொல்லத் தொடங்கினான்.

‘மானிடர் அனைவருக்கும். தேவர்களுக்கும் முதன்மையானவர் சீயஸ். அவரை எதிர்த்து நிற்க நான் விரும்பவில்லை. ஆகவே, அவர் கட்டளைப்படி எனக்கு அளிக்கப்பெறும் எந்தப் பணியையும் ஏற்று நிறைவேற்றுவதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன்!’ என்று அவன் கூறினான்.

அதைக் கேட்ட மன்னன், சிறிது தைரியமடைந்து பேசத் தொடங்கினான்: ‘சகோதர! சீயஸ் கடவுளின் ஆணையை நாம் அனைவரும் நிறைவேற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். அதனால்தான் நானும் நீ செய்ய வேண்டிய பணியைப் பற்றிக் கட்டளையிட வேண்டியிருக்கிறது. உனக்குப் பெயரும் புகழும் கிடைக்கும்படியான பணியே விதிக்க நான் விரும்புகிறேன். ஆர்கோலிஸ் நாட்டில் நிமீ என்ற வனத்தில் ஒரு சிங்கம் ஒளிந்து திரிந்துகொண்டிருக்கின்றது. அதனால் குடியானவர்களுக்கும் மற்ற மக்களுக்கும் எந்த நேரமும் திகில் ஏற்பட்டிருக்கிறது. ஆயர்களையும் ஆடுகளையும் அது அடித்துத் தின்றுவிடுகின்றது. அந்தச் சிங்கத்தை,நீ போய்க் கொன்று விட்டு வர வேண்டும்!’

சிங்கத்தை வேட்டையாடச் செல்லும் ஹெர்க்குலிஸ் அதற்கே பலியாகிவிடுவான் என்று யூரிஸ்தியஸ் கருதினான். இது ஹெர்க்குலிஸுக்கு அவன் இட்ட முதல் பணி. இத்தகைய கடுமையான பன்னிரண்டு பணிகளை அவனுக்காக ஹெர்க்குலிஸ் செய்ய வேண்டியிருந்தது. அவற்றை வரிசையாகக் கவனிப்போம்.

மன்னனின் கட்டளையை ஏற்றுக்கொண்டு, ஹெர்குலிஸ் சரேலென்று மண்டபத்தை விட்டு
வெளியேறி, நகரத்தின் கோட்டை வாயிலையும் கடந்து சென்றான்.

2. மன்னன் யூரிஸ்தியஸின் கட்டளை – ஹெர்க்குலிஸ் கதைகள்

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

   உங்கள் கருத்தை இடுக...

   வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

   error: Content is protected !!
   தமிழ் DNA
   Logo
   Register New Account
   Reset Password
   %d bloggers like this: