திருவிளையாடற்
புராணம்
32. வளையல் விற்ற படலம்
தேவதாரு என்னும் வனத்தில் இருந்த ரிஷிகளின் பத்தினியர் அப்பு அழுக்கற்றவர்கள் என்று திமிர் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். வாய்ப்பு நேரும் போது அவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைக் காட்ட இறைவன் அவர்கள் முன்னால் பிச்சை எடுக்கும் வாலிப வடிவுடன் ஆடைகள் இன்றி வெறும் கோவணத்துடன் உடம்பெல்லாம் விபூதி பூசிக்கொண்டு வாயில் புன் முறுவலும் காலில் கிண்கிணியும் செருப்பும் அணிந்து கையில் பிச்சைப்பாத்திரம் ஏந்தி, அடிக்க உடுக்கையும் கொண்டு பாடிக் கொண்டே தெருவழியே சென்றார். சிலம்பொலியும் உடுக்கை ஒலியும் கேட்டுச் சோறு ஏந்திய கையோடு பிச்சைக்காரனை நாடி இச்சை மீதுார நச்சினார்கள்.
அவர் பேரழகைக் கண்டு நாணம் கைவிட்டுக் கூந்தலும் ஆடையும் நெகிழப் பசலை மீதூர வளையல்கள் கழலத் தம் வசம் இழந்து அவரை அடைய ஏங்கித் தவித்தனர். மோகம் கொண்ட அவர்கள் தம் கணவர் காண அவமானப்பட்டுப் போனார்கள். பிச்சை எடுக்க வந்த பெருமான் அவர்களைத் தூண்டி விட்டு அவர் வீட்டு எல்லையைத் தாண்டி மறைந்துவிட்டார்.
ரிஷிகள் தம் மனைவியர் இப்படி மன நிலை மாறி நிற்பதற்குக் காரணம் என்ன என்று எண்ணிப்பார்த்தனர். பிச்சைக்காரன் பின்னால் இவர்கள் இச்சை கொண்டு போனார்களே என்று அவர்களைக் கடிந்து கொண்டனர். நிச்சயம் அவன் சிவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். “நீர் ரிஷிபத்தினிகளாக இருக்கத் தக்கவர்கள் அல்லர். சோமசுந்தரனை விரும்பிச் சிவன் பின்னால் போனிர்கள். அவன் மாணிக்கம் விற்ற போது வைசியனாக வந்தான்; நீங்களும் மதுரை செட்டித் தெருவில் சென்று பிறப்பீர்” என்று சாபம் இட்டனர். விமோசனம் யாது?’ என்று கேட்டனர். “அவன் வளையல் விற்க வருவான். அவன் உங்கள்கையைப் பிடிப்பான்; நீங்கள் சாப விடுதலை பெறுவீர்” என்று கூறப்பட்டார்கள்.
அதன்படி மதுரையில் செட்டித் தெருவில் வணிகக் குடிகளில் இவர்கள் பிறந்தார்கள். பெதும்பைப் பருவம் நீங்கி மங்கைப்பருவம் அடைந்த இவர்கள் தெருவில் வளையல் விற்கும் வாலிபனின் குரல் கேட்டு வாயிற் கடைகளைக் கடந்து அவனை விளித்தார்கள். வளையல் விற்பவனின் பேரழகைக் கண்டு தம் மனம் பேதலித்தனர். அவனை அடைந்து இன்பம் அடைவது பிறவிப் பயன் என்று நினைத்தனர்.
“நீ யார்?” என்றார்கள்.
“வளைக்கும் வியாபாரி” என்றான்.
“இளைக்கும் எங்கள் கை அளவிற்கு ஏற்ப வளையல் உண்டோ?” என்று வினவினர்.
“உண்டு” என்றான்.
கைகளை நீட்டினர்; அவன் அவர்கள் கையைப் பிடித்து வளையல்களை மாட்டினான்.
கைபிடித்துக் கணவனாக அவன் மாறினான்.
அவன் சிவன் என்பதை அவர்கள் அறிந்திலர்; பிச்சை ஏற்க வந்த பிச்சாடனர்தான் வளையல் விற்க வந்த வாலிபன் என்பதும் அறியார்.
முற்பிறவியில் அவனை அடைய முடியாமல் ஏங்கித் தவிர்த்தவர்கள் இப்பிறவியில் கூடி இன்பம் பெற்றனர். அவன் அவர்களை விட்டு மறைந்ததும் வந்தவன் வைசியன் அல்லன்; மதுரைக் கடவுள் என்று அறிந்தனர். பிறவிப் பயன் பெற்றோம் என்று மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் நன்மைந்தர்களைப் பெற்று மன நிறைவோடு வாழ்ந்தனர். அப்பிள்ளைகளும் வலிமையும் ஆற்றலும் அறிவும் சீலமும் பெற்றுப் பெருமை சேர்த்தார்கள்.
ரிஷிகள் ஆணவம் அடங்கினர். அவர் பத்தினிமார்கள் இறைவனைக் கூடும் பேறு பெற்றனர். அதற்காக ஒரு பிறவி எடுத்து அவனுக்காகவே காத்திருந்து நன்மை அடைந்தனர்.