திருவிளையாடற்
புராணம்
11. உக்கிரகுமாரன் திரு அவதாரப்படலம்
காஞ்சனையும் மலையத் துவசனும் துறக்க வாழ்வு அடைந்ததால் நாடாளும் பொறுப்பை விட்டு விலக முடியவில்லை. சுந்தரேசுவரர் மக்களுக்கு உயிராக விளங்கித் தக்க முறைப்படி செங்கோல் நடத்திச் சீர் பெற ஆட்சி செய்து வந்தார்.
காஞ்சனையின் காதல் மகளாகத் தடாதகைப் பிராட்டி பிறந்ததால் கயிலை மன்னர் ஆகிய சிவனும் சுந்தரனாக வந்து அரசு ஏற்று நடத்த வேண்டியதாயிற்று. செம்மையான ஆட்சியை நிலைபெறச் செய்ய ஓர் வழி காட்டியாக விளங்கத் தொடர்ந்து பாண்டிய நாட்டை ஆண்டு வந்தார். ஆண்டுகள் பல கழிய எடுத்த கடமைக்கேற்ப ஒரு வாரிசினை ஏற்படுத்தி மகன் ஒருவனை விட்டுச் செல்ல வேண்டியதாயிற்று.
தடாதகையே தவச் செல்வியாக வேள்வியில் மூன்று வயது குழந்தையாக அவதரித்தவள் உலகம்ஈன்ற தாயாகிய பிராட்டி ஒரு மகவை மானுடரைப் போலப் பெற மாட்டாள் என்பது தெரிந்ததாகும். எனினும் கருப்பம் உள்ளது போலவும் கரு உயிர்த்துத் திங்கள் பத்துச் சுமந்தது போலவும் நடிக்க வேண்டியது ஆயிற்று.
முருகனே உக்கிர குமாரனாக அவதரித்தான், பிராட்டியார் தெய்வ அருளால் பிறந்த அக்குழந்தையை எடுத்து மோந்து, தழுவித் தன் தலைவனிடம் தந்தாள். பின் அதை வாங்கிக் கொண்டு தானே தாயாகிப் பால் ஈந்தாள். ஞான சம்பந்தனைப் போல அறிவு ஒளி பெற்று வளர்ந்தான். முருகன் திருஅவதாரம் செய்தமையால் வீரமும் அழகும் மிக்கவனாக விளங்கினான்.
உக்கிரத்தோடு அவன் செயல்கள் விளங்கியமையால் உக்கிரபாண்டியன் எனப்பெயர் பெற்றான். நான்காம் மாதத்தில் சந்திமிதிப்பது என்னும் சடங்கினை நடத்தினர். அவனுக்கு தெய்வத்தைக் காட்டி ஆலயத்தை அறிமுகம் செய்வது என்பது இந்தச் சடங்காகும். ஆறாம் மாதத்தில் அவனுக்கு மங்கலம் பயிற்றுவித்தனர். மூன்றாம் ஆண்டில் முடிஎடுத்து மொட்டை அடித்து ஐந்தாம் ஆண்டில் பூனூல் அணிவித்தனர். தொடர்ந்து வேதபாராயணம் கலைகளையும் கற்கத் தொடங்கினான். தேவ குருவாகிய பிரகஸ்பதியைக் கொண்டு வேதாகமங்களையும் போர்த் தொழில்களையும் கற்றான். ஒருமுறை கற்பித்தாலேயே அறிந்து கொள்ளும் ஆற்றல் அவனுக்கு இருந்தது. அறுபத்து நான்கு கலைகளையும் எட்டு வயதுக்குள் கற்று அறிந்தான். பாசுபத அம்பு எய்யும் விதம் மட்டும் சிவனிடத்தே கற்றுக்கொண்டான்.
ஆண்டு பதினாறு அடைந்ததும் ஆண்மைமிக்க வீரனாக அவன் தோற்றம் அளித்தான். வெல்வதற்கு அரியவரையும் வெல்லுதல், தேவரானும் செல்லுதற்கு அரிய தேயத்தும் சென்று திறை கொண்டு வருதல் சுமைமிக்க இப்பூமியாட்சியைத் தம் தோள்களில் தாங்கல், உலகெங்கும் புகழ் பெற வெற்றியும் ஆட்சியும் நடத்தல் என்று இவையாகிய இயல்புகள் அவனிடம் படிந்து வளர்ந்துள்ளமை கண்டு சுந்தரனார் மன நிறைவு கொண்டார். ஆட்சியைத் தந்து அரசனாக்குவதற்கு முன்பு அவனை மணமகனாக்கி இல்லறம் ஏற்கச் செய்ய வேண்டும் என்று கூறினார். முதலில் மணம் முடிக்கவிரும்பினார்.