திருவிளையாடற்
புராணம்
17. மாணிக்கம் விற்ற படலம்
வீர பாண்டியன் காமக்கிழத்தியர் சிலரோடு உறவு கொண்டான்; அவர்கள். வயிற்றில் பிறந்த புதல்வர்கள்
ஒழுங்காக வளர்க்கப்படவில்லை; அவர்கள் தீய ஒழுக்கங்களில் பழகி நற்பண்பிழந்து வெறுக்கத் தக்கவர் ஆயினர். கட்டிய மனைவிக்குப் புதல்வன் பிறக்காத குறை அவனை அரித்துக் கொண்டு வந்தது. வேள்விகளும் விரதங்களும் மேற்கொண்டு சோம சுந்தரக் கடவுளை வழிபட்டு தான் பயனாக இனிய மகன் ஒருவனைப் பெற்றான். அதன் ஐந்து வயது இருக்கும் போதே வீரபாண்டியன் புலி வேட்டைக்குச் சென்று தன் உயிர் துறந்தான். திக்கற்ற அக்குடும்பத்தில் கேட்பார் இன்மையின் மூத்த புதல்வர்கள் வீடு புகுந்து அரச முடியையும் ஆபரணங்களையும் ரத்தினங்களையும் முத்துக் குவியல்களையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போய்விட்டனர். வீரபாண்டியனுக்கு அந்திமக்கடன் அனைத்தையும் அவன் இளைய மகன் செய்து முடித்தான்.
பட்டத்துக்குரிய வயதுக்கு வந்ததும் அவனை அரசனாக்குவதற்கு அமைச்சர்களும் நகரமாந்தர்களும் முற்பட்டனர். அவனுக்கு மணிமுடி சூட்ட அணிகலன்கள் வைத்திருந்த பேரறையைத் திறந்து பார்த்தனர். அங்கிருந்த விலையுயர்ந்த பொருள்களும் மாணிக்கக் கற்களும் இரத்தின முடியும் கொள்ளை கொண்டு போய்விட்டதை அறிந்தார்கள். மறுபடியும் அவற்றை அவர்கள் எங்குப் போய்ச் சேகரிப்பது பாண்டிய மன்னர்கள் தொன்று தொட்டு ஈட்டிய செல்வம் அனைத்தும் பறிபோய்விட்டன. என் செய்வது? பொன் செய்யும் வழி அறிந்திலர்; மன்னன் செய்த மடமை இது.
பாண்டியன் மகன் சோமசுந்தரரிடம் முறையிடப் பரிவாரத்தோடு சென்றான்; அரண்மனையை விட்டு அடியெடுத்து வெளியே கால் வைத்ததும் மாணிக்க வணிகர் ஒருவர் கோணிப்பை நிறைய மாணிக்கமும் நவரத்தினமும் கொண்டு வந்து அவன்முன் காட்டினார்.
முடி செய்ய இவற்றைக் கொண்டு முடியும் என்று விவரித்தார். கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது என்பது பழமொழி. தெய்வமே உண்மையில் அவர்களைத் தேடி வந்ததை அவர்கள் அறிந்திலர்.
“அரசன் முடி செய்வதற்கு உம்மிடம் இரத்தினக்கல் உளவோ” என்று கேட்டனர்.
“உண்டு; அவற்றை வாங்க உம்மிடம் கோடி பொன் உளவோ” என்று கேட்டார்.
“பொன் உண்டு மணி இல்லை” என்றார்கள். சேர்ந்து அமைதல் அரிதுதான்.
அவ்வணிகர் கரிய நிறத் துண்டை விரித்து வைரமும் முத்தும் மணியும் மற்றும் உள்ள ஒளிமிக்க நவரத்தினமும் காட்டி வேண்டுவன எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
கிரீடத்திற்கு வேண்டிய கற்களைப் பொறுக்கிக் கொண்டனர்.
சோமசுந்தரக் கடவுளிடம் இவற்றைக் காட்டி இதை அணியும் அரச மகன் ஆயுளும் ஆட்சியும் பெற்று மாட்சி பெறுக” என்று கூறி வாழ்த்திக் கொடுத்தார். அவற்றிற்கு உரிய பொன்னை எடுத்துக் கொடுக்க முயன்ற போது மின்னல் வேகத்தில் அவ்வாணிபர் மறைந்து உமையொரு பாகனாகக் காட்சி அளித்துத்திருக்கோவிலில் மறைந்தார்.
வாணிகனாக வந்தசோமசுந்தரர் அவனுக்கு அபிடேக பாண்டியன் எனப் பெயரிடுமாறு கூறிச் சென்றார். அவ்வாறே அவனுக்கு அத்திருப்பெயரைச் சூட்டி அவனி ஆளும் வேந்தனாக ஆக்கினர்.
அவனும் சோமசுந்தரர் அருட்டிறம் போற்றி அனுதினமும் வழிபட்டுத் தூய நற்கருமங்கள் செய்து சான்றோனாகத் திகழ்ந்தான். பொறுப்பு மிக்க அரசனாக இருந்து ஆட்சி செய்து நீதியையும் ஒழுங்கையும் நிலை நாட்டினான். நவ மணிகளையும் நல்நிதிகளையும் கொள்ளை அடித்துச் சென்ற கள்ள மனம் படைத்த மூத்த சகோதரர்கள் இருக்குமிடம் தேடிப்பிடித்து வந்து அவர்கள் கையகம் வைத்திருந்த நகைகளையும் நிதிகளையும் கொண்டு வந்து சேர்த்தனர். பொருளிழந்த நிலையில் அருள்மிகுந்த இறைவன் மாணிக்கம் விற்று அவனை மாண்புடைய அரசனாக்கிய திறம் நினைத்து நெஞ்சில் அவரை நிறுத்தி வழிபட்டு ஆட்சி நடத்தினான்.