27. அங்கம் வெட்டின படலம்

267 0

திருவிளையாடற்
புராணம்

27. அங்கம் வெட்டின படலம்

27. அங்கம் வெட்டின படலம்

இதுவும் குலோத்துங்க சோழன் காலத்து நிகழ்ச்சியாகும். பரதேசி ஒருவன் மதுரைக்கு வந்து சுதேசி போலப் பழகித் தேசிகனாக இருந்து இளைஞர்களுக்கு வாள் பயிற்சி கற்றுத் தந்து வாழ்க்கை நடத்தி வந்தான். அவன் நாளும் இறைவன் தாளை வணங்கி வழிபட்டு வரும் நற்பழக்கம் உடையவனாக இருந்தான். அவன் மானவருள் ஒருவன் சித்தன் என்பான் வாள் பயிற்சியில் தேர்ச்சி பெற்றுத் தன்னிகரற்று விளங்கினான். ஆசிரியருக்குப் போட்டியாகப் பயிற்சிக் கூடம் அமைத்து மாணவர்களை ஈர்த்தான். ஆசிரியனைவிட மாணவனே மிக்க வருவாய் பெற்று வந்தான். எனினும் ஆசிரியனை ஒன்றும் இல்லாதவனாகச் செய்ய வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டான்.

இது அவன் செய்த தவறு; அடுத்தது அவன் மனைவியை அடைய ஆசைப்பட்டான்; ஆசிரியர் இல்லாத போது வீட்டுக் கதவைத் தட்டி வெளியே வரவழைத்து அவள் கையைப்பிடித்து இழுத்துத் தகாத உறவு கொள்ள விழைந்தான். அவள் அவனை வெளியே தள்ளித் தாளிட்டுக்கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டாள்.

கற்பிற் சிறந்த அப்பொற்பினாள் சித்தன் செய்யும் சிறுமைகளைக் கணவனிடம் எடுத்துக் கூறாது மனத்தில் அடக்கிக் கொண்டாள்; சொன்னால் கணவனும் அவனும் மோதிக்கொள்ள வேண்டிவரும். இல்லாவிட்டாலும் மனம் புழுங்கி வேதனை அடைய வேண்டி வரும். தன் குறையை ஆண்டவன் திருக்கோயிலுக்குச் சென்று அவனிடம் வெளிப்படுத்தினாள்.

சித்தனைச் சிவன் ஆசிரியர் வேடத்தில் சந்தித்து ‘இந்த ஊர் மக்கள் காண வாட்போர் நடத்தி நம் கலைத் திறனைக் காட்டிக் கை தட்டலைப் பெறுவோம். நகர்ப் புறத்துப் பொது மேடைக்கு நாளைக்கு வா” என்று இடமும் நாளும் குறித்து அழைத்தார். காளைப் பருவம் உடைய அவன் முதியவன் என்றும் பாராது போர் நிகழ்ச்சிக்குக் கருத்துத் தெரிவித்தான்.

ஊரவர் திரண்டனர்; வாளை ஏந்தி முதியவரும் சித்தனும் சுழற்றி ஒருவரை ஒருவர் தாக்க முற்பட்டனர். முதியவர் தானே என்று அவன் அவரை எளிமையாகக் கருதினான். இருபது நாழிகை வாளைச் சுழற்றியும் அடி பெயர்த்தும் கலைத் திறனைக் காட்டினர். சூடு பிறந்தது. அங்குள்ளவர் அனைவரும் கேட்குமாறு முதியவராகிய சிவபெருமான், ‘உன் குருவின் பத்தினியை நினைத்த நெஞ்சு எது? பார்த்த கண்கள் எவை? தொட்ட கை எது? கூசாமல் பேசிய நா எது? என்று கேட்டு அவற்றைத் தனித் தனியே வடுப்படுத்தி அவன் தலையை உடம்பிலிருந்து வேறுபடுத்தினார். தலை உருண்டிட அவன் பிணமானான். அவர் தலைமறைவு ஆகிவிட்டார்.

மாணவர்கள் ஆசிரியரைத் தேடினார்கள்; களத்தில் இல்லை; இல்லத்தில் இருப்பார் என்று அங்குச் சென்று தேடினார்கள். உண்மையான அம்முதியவர் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட்டுவிட்டு மெதுவாக வீடு நோக்கி நடந்தார், மாணவர்கள் அவர் மனைவியிடம் சித்தனை வெட்டி வீழ்த்திய சித்திரத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். அவளால் அதை நம்பவே முடிய வில்லை. கணவர் வந்ததும் உண்மைதானா என்று கேட்டு வினவினாள்.

“யான் ஒரு பாவமும் அறியேன்; கோயிலுக்குச் சென்று இருந்தேன்” என்றார்.

சுற்றியிருந்த மாணவரும் பொதுமக்களும் அவர் அவன் செய்த தீமையைச் சொல்லிச் சொல்லி ஊறு விளை வித்ததாகச் சொன்னார்கள். வந்தவர் இறைவனே என்பது அறிந்து நிறை உள்ளத்தோடு திருக்கோயில் சென்று அனைவரும் வழிபட்டனர். நாட்டு அரசன் குலோத்துங்கனும் இதுகேட்டு வியப்பு அடைந்து அவனும் கோயிலை அடைந்து வழிபட்டான். அவன் ஆட்சியில் இறைவன் மற்றவர்கள் குறைகளைத் தீர்த்து வைத்து உதவுவது கண்டு உவகை அடைந்தான் ஆணை என்பது அரசனது மட்டும் அன்று; அதையும் கடந்து இறைவனது ஆணை தான் உலகத்தில் தீமைகளை ஒழித்து நன்மைகளை நிலைநாட்டச் செய்கின்றன என்பது உணர்த்தப்பட்டது.


27. அங்கம் வெட்டின படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் மங்கையர்க்கரசியாகிய பாண்டியர் மகள் வேண்டிய உணவு சமைத்து ஈண்டிய முனிவர்களுக்கும் வேதியருக்கும்…

22. யானை எய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 22. யானை எய்த படலம் 22. யானை எய்த படலம் சோம சுந்தரருக்கு அமைத்த இந்திர விமானத்துக்கு அருகே வடக்கே அழகிய ஒரு கோயில்…

57. வலை வீசின படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 57. வலை வீசின படலம் 57. வலை வீசின படலம் உத்தர ஆலவாயில் மீனாட்சி அம்மையோடு தனித்து இருந்த போது சுந்தரர் வேதப் பொருளை…

9 . எழுகடல் அழைத்த படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 9 . எழுகடல் அழைத்த படலம் 9 . எழுகடல் அழைத்த படலம் நாட்டுக்கு அரசனாக உலகை ஆட்டுவிக்கும் இறைவன் இருந்து ஆட்சி செய்து…

5 . திருமணப்படலம் உலகம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 5 . திருமணப்படலம் உலகம் 5 . திருமணப்படலம் உலகம் ஈன்ற தாயாகிய உமையம்மை இளங்குழவியாகித் தடாதகைப் பிராட்டி என்ற பெயரோடு அரசு பட்டம்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன