41. விறகு விற்ற படலம்

509 0

திருவிளையாடற்
புராணம்

41. விறகு விற்ற படலம்

41. விறகு விற்ற படலம்

வரகுணன் ஆட்சிக்காலம்; ஏமநாதன் என்னும் இசைக் கலைஞன் வருகை தந்தான். அரசவையில் அரசன் செவி குளிர யாழிசை வாசித்தான்; அதிமதுர இசை கேட்டு அவனைப் பாராட்டிப் பரிசும் வரிசையும் தந்து அனுப்பினான்; அவனை அங்கே மதுரையில் தங்குவதற்கு வேண்டிய வசதிகளையும் அமைத்துத் தந்தான். சீடர்களும் சிறப்புப் பெற்றார்கள். அவர்களுக்கு உல்லாசமான வாழ்க்கை கிடைத்தது. அரசன் அவர்களுக்கு விருந்து வைத்து உபசரித்து மகிழ்ந்தான்.

அந்நியன் ஒருவன் என்றும் பாராது அவனை வரவேற்ற போதும் அவன் தன்னியல்பு கெட்டு நிலை கெட்டுச் செருக்கும் கொண்டான்; அரசன் தன்னை மதித்தது சம்பிரதாயம் பற்றி என்று கொள்ளாமல் தன்னைச் சரித்தர புருஷன் என்று நினைத்துக் கொண்டான்; அரசன் தன்னை மகிழ்வித்தது தனக்கு நிகராக இசை பாடுவார் இல்லாமையால் தான் என்று சிந்திக்கத் தொடங்கினான். மேலும் அதனைச் சிலரிடம் சொல்லித் திரிந்தான்.

இது மானப்பிரச்சனையாக உருவெடுத்தது. தன். நாட்டில் யாழிசையில் வல்ல பாணபத்திரனை அழைப்பித்து “நீ ஏமநாதனை யாழிசையில் வெல்ல முடியுமா?” என்று கேட்டான். “சோமநாதன் அருளும் தங்கள் ஆணையும் துணை செய்யின் அவனுக்கு இணையாகப் பாடி வெல்ல முடியும்” என்றான் பாணபத்திரன். மறுநாளே இசைப் போட்டிக்கு ஏற்பாடு ஆயிற்று.

வீடு சேரும் பாணபத்திரன் வீதிகளில் ஏமநாதனின் சீடர்கள் பாடுவதில் வல்லவராக அங்கங்கே பாடி மக்களைத் திரட்டுவதைப் பார்த்தான். அது கேட்டு உடல் வியர்த்தான். சீடர்களே இத்தகைய சீர்மை பெற்றிருக்கும் போது அவர்கள் குரு எத்தகையவனாக இருப்பானோ என்று அஞ்சினான். ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டோம் என் செய்வது என்று கவலை கொண்டான்; அரசன் ஆணையையும் மீற முடியாது. அஞ்சி ஓடவும் முடியாது. என்ன செய்வது, நாதன் தான் தனக்குத் துணைசெய்ய வேண்டுமென்று வழியில் கோயிலுக்குச் சென்று ஓலமிட்டுத் தன்னை இக்கட்டிலிருந்து விடுவிக்குமாறு வேண்டினான். வீடு சேர்ந்தான்.

திக்கெட்டும் புகழ் படைத்த ஏம நாதன் இசை பாடி அவன் வெற்றி பெறுவதற்கு முன் இறைவன் அதே அச்சத்தை அவனுக்குத் தோற்றுவிக்க ஓர் உபாயம் மேற்கொண்டார். வயது முதிர்ந்த மூத்த யாக்கையோடு தலையில் விறகு சுமந்து வீதிதோறும் சென்று அந்த ஏமநாதன் வீட்டுத் திண்ணையில் சுமையை இறக்கி வைத்து இளைப்பாறி இன்னிசை பாடினார்; தேனினும் இனிய கானம் ஏமநாதன் காதில் வந்து துளைத்தது. தமிழும் குழைத்துப் பாடியதால் அது அமிழ்தம் என இசைத்தது. வெட்டியாள் யாரோ பாடுகிறான் என்று எட்டிப் பார்த்தான்; அது விறகு வெட்டி என்பதை அறிந்தான்.

கந்தல் துணியும், அழுக்குத் தலையும், நரை திரை கண்ட யாக்கையும், அழுக்கும் வியர்வையும் படிந்த மேனியும் உடைய அவன் நாதம் மட்டும் கீத ஒலியாகக் கேட்கிறதே என்று வியந்தான்.

“யார்?” என்று அவன் பேர் கேட்டான்.

இதுவரை யாரும் என்னை முழுவதும் அறிய மாட்டார்கள்” என்றார்.

“ஊர் பேர் சொல்ல வேண்டாம், இசை எங்குக் கற்றாய்? அதுவாவது சொல்” என்றான்.
இசை கற்கும் பாண பத்திரனின் மாணாக்கரில் ஒருவன் யான்; அவரிடம் இசை கற்கச் செல்வதுஉண்டு. அவர் என்னைப் பார்த்து “நீ தசை எல்லாம் ஒடுங்க மூத்தாய்; இசைபாடுவதற்கு நீ இசைக்க மாட்டாய்; மூப்படைந்த நீ யாப்பமைந்த பாட்டைப் பாட இயலாது; காட்டில் விறகு தேடி எங்காவது பிழைத்துப் போ என்று என்னை அனுப்பி விட்டார். அவ்வப்பொழுது அவரிடம் கேட்டபாடல்கள் சில எனக்குப் பாடம் உண்டு; அதைப் பாடுவதும் எனக்குப் பெருமை சேர்க்கும். நான் கண்டபடி பாடுவதில்லை; நிமலனை நினைத்துத் தான் பாடுவது வழக்கம். நீலகண்டனைப் பாடுவது தான் எனக்கு வழக்கம்” என்றார்.

“நீ பாடிய பாடலைத் திரும்பப் பாட முடியுமா?” என்றார்.

“பக்க இசை இல்லை என்றாலும் தக்க குரலில் யான் பாட முடியும்” என்றார்.

“உன் பாட்டைக் கேட்டு நான் கிறுகிறுத்து விட்டேன். அதை மீண்டும் கேட்க விழைகிறேன்” என்றான்.

யாழும் அவன் உடன் கொண்டு வந்திருந்ததால் அதை மீட்டிக் குரலும் யாழும் இசையப் பாடினான்.

சுதி சேர்த்து உடல் அசைவு இன்றிக் குற்றங்கள் நீங்கிச் சித்திரப்பாவை போல் அசையாமல் சாதாரிப் பண்ணில் ஒரு பாடலைப் பாடினான்.

மலரவனும் மாலும் அறியாத மதுரை நாயகனின் மலர்ப்பதத்தைச் சிறப்பித்துப் பாடினான். இறைவன் பாடிய இசை உலகம் எங்கும் நிறைந்து ஒலித்தது. இசை ஒலி எழுந்தபோது மரம் செடி கொடிகள் அசையவில்லை கடலும் ஒலி அடங்கியது; நதிகளும் தன் ஓட்டம் தணிந்தது; விஞ்சையரும் தலை குனிந்தனர்; தேவர்கள் கேட்டு அவ்உலகமே இன்பத்தில் அமிழ்ந்தது; ஏமநாதன் புளகித்துப் போனார்; உரோமம் சிலிர்த்தது; நெஞ்சும் நினைவும் இசை வெள்ளத்தில் முழுகியது; அதிலிருந்து கரை ஏற முடியாமல் தவித்தான். திண்ணையில் தூங்கிய விறகுச் சுமையாளன் விண்ணையும் கவரக்கூடிய இசை பாடினார். பின் அந்த இடத்தைவிட்டு மறைந்து தன் திரு உருவைக் கலைத்தான்.

உள்ளே சென்ற ஏமநாதன் அந்தச் சாதாரிப் பண்ணைப் பற்றிச்சிந்திக்கத் தொடங்கினான். தமிழ் மண் இசையோடு பிறந்தது; அதன் பண் ஈடு இணையற்றது. இதனைப் பாடியவன் சந்தனம் கமழும் மார்பும் பட்டு பீதாம்பரம் உடுத்திய படாடோபமும் உடையவன் அல்லன்; வயதில் மூத்து வாழ்க்கையின் கரை ஓரத்தில் ஒதுக்கப்பட்டவன்; யாரும் அக்கரை காட்டாதவன்; ஒதுக்கப்பட்டவனே இவ்வளவு சீரும் சிறப்புமாகப் பாடுகிறான் என்றால் அவன் ஆசிரியர் எவ்வளவு புலமை வாய்ந்தவனாக இருக்கமுடியும் பாணபத்திரன் சிந்திய சோற்றைத்தின்று வளர்ந்தவனே பத்தடி பாய்கின்றான் என்றால் அவனை வளர்த்தவன் நூறு அடி பாயாதிருக்க மாட்டான். சிறுத்தையே சீறுகிறது என்றால் அதைப் பெற்று ஆளாக்கிய புலி எப்படிப் பாயும் என்று அஞ்சினான். ‘பாணபத்திரன்’ அந்தப் பெயரே பாணிசை பாடுகிறது. சிங்கத்தின் குகையில் யானை வலிய தலையிட்டுக் கொள்வது போலத்தான் இருக்கிறது வலிய நாமே இசைப் போட்டியில் மாட்டிக் கொள்வது. வந்தோமா கொடுத்ததைப் பெற்றுக் கொண்டோமா என்று இல்லாமல் வாய்க் கொழுப்பால் வம்பினை விலைக்குப் பேசி வாங்கி விட்டோம். நாளை இசைப் போட்டியில் கலந்து கொள்வதை விடத்தவறான செய்கை வேறு இருக்க முடியாது. இருள் அகலும் முன் நாம் அனைவரும் அகன்று போய் விடுவதுதான் அறிவுடைமை என்று தீவிரமாகச் சிந்தித்தான்.

தன் சீடர்களிடம் தான் கேட்ட இசையின் பெருமையை வாய்விட்டுப் பாராட்டிக் கூறினான். அவர்கள் துட்டைக் காணோம், துண்டைக் காணோம் என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறச் செயல் பட்டார்கள். மூட்டை முடிச்சுகளை எடுத்துக் கட்டிக் கொண்டு இரவோடு இரவாய் அரசனிடமோ ஆத்தான அதிகாரிகளிடமோ எதுவும் சொல்லிக் கொள்ளாமல் வடபுலம் நோக்கி வந்த வழியே கம்பி நீட்டினர்.

அன்றிரவு பாணபத்திரன் கனவில் இறைவன் வந்து நடந்ததைக் கூறி “இனி ஏமநாதன் இசை வாதுக்கே வரமாட்டான்” என்று அறிவுறுத்தினார். பாணபத்திரனுக்கு அடிமை என்று சொல்லி விறகு ஆளாய்ச் சென்றதை எடுத்துச் சொல்லினார். அவன் அஞ்சி ஊரைவிட்டே ஓடி விட்டதையும் கிளத்தினார்.

பாணபத்திரன் இறைவன் தனக்காக விறகு சுமக்க நேர்ந்ததே என்று வருந்தினார். தமிழ் நாட்டின் இசைப் பெருமையைக் காக்க இறைவன் செய்த ஆக்கத்தைக் கண்டு இறும்பூது எய்தினான். அவர் விறகு சுமந்ததை விடத் தான் தோல்வியைச் சுமந்து இருக்கலாமே என்று கூறி வருந்தினான். ஏமநாதன் சென்றான் என்பதைவிடச் சோமநாதன் விறகு சுமந்தான் என்பது கேட்கவே சோகமாக இருக்கிறதே என்று துக்கித்தான்.
மறுநாள் அரசன் ஆணைப்படி பத்திரன் அரச அவைக்கு வந்தான். ஏமநாதனுக்கு ஆள் அனுப்பப் பட்டது. அவன் முகவரியே இல்லாமல் இரவோடு இரவாக அஞ்சி ஒடிவிட்டதை அறிந்தான். பாணப்பத்திரன் கனவில் வந்த இறைவ்ன் காட்சியையும் அவர் சொல்லிய உரை களையும் விடாமல் சொல்லித் திருவருளின் துணையை விளக்கினான்.

பாண்டியனும் இறைவன் காலடிகள் நோகக் கடும் வெய்யிலில் விறகுகளைச் சுமக்க வைத்ததற்காக வருந்தினான். அவர் வாயால் நாத இசை எழுந்து ஏமநாதன் புறங்கண்டது அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பாணபத்திரனுக்குச் சிறப்புகள் செய்து பொன்னும் பொருளும் தந்து பாராட்டினான். அவனும் அவற்றைத் தக்க மாணாக்கர்களுக்குப் பகிர்ந்து அளித்துப் பரமன் அடி நினைத்து வாழ்ந்தான்.


41. விறகு விற்ற படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

43. பலகையிட்ட படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 43. பலகையிட்ட படலம் 43. பலகையிட்ட படலம் பாணபத்திரன் செல்வம் வந்தபோதும் அவன் சிவனை வணங்குவதில் குறைந்தது இல்லை; நடு இரவிலும் சென்று யாழிசை…

60 பரி நரியாகிய படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 60 பரி நரியாகிய படலம் 60 பரி நரியாகிய படலம் கட்டி வைத்த பரிகள் அன்று இரவு உரு மாறின; கொட்டி வைத்த கொள்ளும்…

7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம்  7. குண்டோதரனுக்கு அன்னமிட்ட படலம் மங்கையர்க்கரசியாகிய பாண்டியர் மகள் வேண்டிய உணவு சமைத்து ஈண்டிய முனிவர்களுக்கும் வேதியருக்கும்…

6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்

Posted by - ஏப்ரல் 18, 2020 0
திருவிளையாடற் புராணம் 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் 6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம் கொடி போன்ற தடாதகையை மணந்த பின் புவனம் தாங்கும் கண்ணுதல் மூர்த்தியின் திருமணத்திற்கு…

23. விருத்த குமார பாலரான படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 23. விருத்த குமார பாலரான படலம் 23. விருத்த குமார பாலரான படலம் விக்கிரமன் ஆட்சி செய்து வரும் நாளில் மதுரையில் விருபாக்கன் என்னும்…

உங்கள் கருத்தை இடுக...