திருவிளையாடற்
புராணம்
43. பலகையிட்ட படலம்
பாணபத்திரன் செல்வம் வந்தபோதும் அவன் சிவனை வணங்குவதில் குறைந்தது இல்லை; நடு இரவிலும் சென்று யாழிசை மீட்டு நாதனைப் பாடுவதில் சலிப்பு அடைந்ததில்லை. சிவனார் நள்ளிரவில் முத்துச் சிவிகையில் ஏறி யாழிசை கேட்டுக் கொண்டு திருப்பள்ளியறைக்கு எழுந்தருளினார். அங்கே நாதன் தாள் வாழ்த்திப் பாணபத்திரன் பாடிக் கொண்டே இருந்தான். அடாது மழை பெய்தாலும் விடாது பாடுவது அவன் வழக்கமாக இருந்தது. அவன் தீவிர ஈடுபாட்டையும், பாடும் இசைப் பாட்டையும் மக்களும் நாடும் அறியவேண்டும் என்பதற்கு ஒரு நாள் நள்ளிரவில் கொள்ளை மழை பெய்வித்தார். பள்ளத்தில் நீர் நின்றாலும் அதை உள்ளத்தில் கொள்ளாது நின்று நிலைத்துப் பாடிக் கொண்டேயிருந்தார்.
பகை ஒன்று இட்டு அவரை அதில்அமர்ந்து பாட வைத்தார்; இறைவன் தந்த பலகை அவனைப் பள்ளத்தில் இருந்து உயர்த்தியது. சேற்றில் கால் வைத்துப்பாடும் பாணபத்திரன் மேட்டில் பலகை மேல் நிற்க உலகு அறிந்து அவனைப் பாராட்டிப் போற்றியது.
அரசன் இது அறிந்து அவனை ஆத்தான இசைப் புலவன் ஆக்கிப் பரிசும் பொருளும் தந்து அவனைச் சிறப்பித்தார்.