திருவிளையாடற்
புராணம்
6. வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்
கொடி போன்ற தடாதகையை மணந்த பின் புவனம் தாங்கும் கண்ணுதல் மூர்த்தியின் திருமணத்திற்கு வந்த மண்ணியல் வேந்தர், வானோர், மாதவர் மற்றும் பிறரையும் “உண்ண வாருங்கள்” என்று அழைத்தனர்.
பொன் ஒளி வீசும் தாமரைக் குளத்தில் நீராடித் தத்தம் நெறியில் நியமம் செய்து முடித்தவர்களுள் பதஞ்சலி, வியாக்கிச் பாதர் என்னும் முனிவர் இருவரும் “திருச்சிற்றம்பலத்தில் சிவனாரின் திருநடனம் கண்டு உண்பது அடியேம் எம் நியமம்.” என்றனர். அவ்வாறு அவர்கள் கூற “அந்தக் கூத்தை இங்கு நாம் செய்வோம்; எங்கும் நிறைந்த பரம்பொருளுக்குச் சிதம்பரம் இதயத் தானம் ஆகும்; மதுரை துவாத சாந்தத் தானம் ஆகும்” என்று கூற “மன்னவ! ஏனைய அங்கம் யாவை?” எனப் பரமன் சொல்வான் ஆயினார்.
இப்பேரண்டம் பிரமனது சரீரம் ஆகும். இடுப்புக்கு மேல் உறுப்புகள் ஏழ் உலகமாகும்; கீழ் ஏழ் உலகங்கள் ஆகும். நடு இடமே பூலோகம் ஆகும்; இதில் தலங்கள் பெருமை மிக்கனவாகும். அவை திருவாரூர், திருவானைக்கா, அருணாசலம், சிதம்பரம், காளத்தி, காசி, கைலாசம், மதுரை என்பனவாகும்.
ஒவ்வொரு தலத்திலும் தனித்தனிப் பெயர்களோடு உறைகிறோம்.
திருவாரூரில் தியாகேசர் என்றும், திருவானைக்காவில் சம்புநாதர் என்றும், அருணாசலத்தில் அருணாசலேசுவரர் என்றும், சிதம்பரத்தில் சபாபதி என்றும், காளத்தியில் காளத்தீசுவரர் என்றும், கைலாசத்தில் ஸ்ரீகண்ட பரமேசுரர் என்றும் வழங்குவர். மதுரையில் சுந்தரேசர் என அழைக்கின்றனர். மதுரையே எல்லாத் தலங்களிலும் முற்பட்டதாகும். இங்கே உள்ள மூர்த்திகளுள் தாண்டவ மூர்த்தியே மேலானது ஆகும். இந்தக் கோலத்தில் எம் நடனத்தை உங்களுக்குக் காட்டுவோம் என்று விளக்கினார். சுந்தரேசரின் திருக்கூத்துத் தொடங்கியது.
இறைவன் திருவருளால் விமானத்திற்குக் கிழக்கே ஒரு வெள்ளியம்பலமும் மாணிக்க மேடையும் தோன்றின.
சிவகணங்கள் மொந்தை என்னும் சிறிய மத்தளம் கொண்டு. முழக்கம் செய்ய, நந்தி மா முழவு கொண்டு தாக்க, நாரணன் இடக்கை என்னும் முழவினை ஆர்க்க, தும்புரு, நாரதர் இருவரும் இசைந்துபாட, துந்துபிகள் ஒலிக்க, கலைமகள் சுதி கூட்ட, பிரமன் யாழிசைக்க, தேவர்கள் கற்பகப் பூ மழை சொரிய முயலகன் மீது வலப்பாதம் வைத்து மிதித்துக் கொண்டு இடது காலை மேலே தூக்கி மற்றும் நாட்டிய முறைப்படி குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயும் பனித்த சடையும் எடுத்த பொற் பாதமும் உடைய இறைவன் திருக்கூத்து ஆடினார்.
பதஞ்சலியும் வியாக்கிரபாத முனிவரும் மற்றும் குழுமி இருந்த முனிவர்களும் தேவர்களும் கந்தருவர் இருடிகள் முதலியோரும் இத்திருக்கூத்தைக் கண்டு பரமானந்தத்தில் முழுகினர். பராபர முதற் பொருளாகிய பரமனைத் துதித்துப் பாடினர். பதஞ்சலியும் வியாக்கிரரும் இறைவன் திருவடிகளில் விழுந்து வணங்கினர். அவர்களை எழுப்பி வேண்டுவது யாது என்று வினாவினார்.
இதே திருக்கூத்துக் கோலத்தில் நிலைத்து நின்று எங்களுக்குத் தரிசனம் தரவேண்டும் என்றும், அவ்வாறு தரிசிப்பவருக்குச் சித்தி நிலை கிட்ட வேண்டும் என்றும் வேண்டினர். இறைவன் அவ்வாறே ஆகுக என்று அருள் செய்தார்.
இத்தாமரைக் குளத்தில் முழுகி, நிறை பொருளாகிய தாண்டவ மூர்த்தியைத் தரிசிப்பவர்கள் அவர்கள் வேண்டும் வரங்களையும் பேறுகளையும் பெற்றுப் பயன் அடைந்து வருகின்றனர்.