62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

447 0

திருவிளையாடற்
புராணம்


62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம்

அரிமர்த்தன பாண்டியனுக்குப் பின் அவன் சந்ததியர் ஆட்சிக்கு வந்தனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவன் கூன் பாண்டியன் என்பவன் ஆவான். அவன் சோழ மன்னனின் மகள் மங்கையர்க் கரசியரை மணந்து வாழ்ந்து வந்தான். சோழ நாட்டில் இருந்து அரசியோடு குலச்சிறை என்ற அமைச்சர் உடன் வந்தார்.
அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பர். பாண்டியர்கள் தொடர்ந்து இதுவரை சைவ சமயத்தையே தழுவி வந்தனர். இவன் ஒருவன் மட்டும் விதி விலக்கானான்; சமண மதத்தில் அவன் ஈடுபாடு காட்டினான்.

மங்கையர்க்கரசியார் அறிவும் ஆற்றலும் மிக்கவர்; சைவ சமய ஈடுபாடும் சோமசுந்தரரின் வழிபாடும் கொண்டவராக விளங்கினார். குலச்சிறையாரும் சைவ சமய வளர்ச்சியில் அக்கரை காட்டினார்.

அரசன் சமண சமயத்தைத் தழுவியதால் நாட்டு மக்களும் மதம் மாறுவர் என்ற அச்சம் அரசியாருக்கு ஏற்பட்டது. அரசனைத் திருத்தி வழிப்படுத்த அவள் முனைந்தாள் வெற்றி பெறவில்லை சோமசுந்தரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டுத் தம் கணவனைச் சமயம் மாறும்படி உதவ வேண்டினாள். அப்பொழுது அங்கே சீர்காழியிலிருந்து வந்த பிராமணர் ஒருவர் சோம சுந்தரரைத் தரிசிக்க வந்திருந்தார். அப்புதியவரிடம் பேச்சுக் கொடுத்து அவர் ஊர் செய்திச் சிறப்புகள் குறித்து மங்கையர்க்கரசியார் விசாரித்தார்.

“சீர்காழி” என்றான் அவன்.

“அங்குச் சிறப்புச் செய்தி உளதோ?” என்றாள்.

“சீர்காழியில் சிவபாத இருதயர் என்னும் அந்தணருக்கு ஞான சம்பந்தர் என்னும் அருட் செல்வர் மகனாகத் தோன்றியுள்ளார். மூன்றாம் வயதிலேயே உமை தந்த பாலை உண்டு ஞானம் பெற்றார். தேவார இன்னிசைப் பாடல்களைத் தலந்தோறும் சென்று வழிபட்டு வருகின்றார். அவர் வயதில் இளைஞர்; அறிவில் முதிர்ந்தவர்; சமணரோடு வாதிட்டு வென்று வருகிறார்; அவர் புகழ் சோழ நாடு எங்கும் பேசப்படுகிறது; திருநாவுக்கரசரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர்; முத்துச் சிவிகையில் அவர் பல தலங்களுக்குச் சென்று பாடல் பல பாடி வருகிறார். இது சிறப்புச் செய்தி” என்று அறிவித்தான்.

குருடனுக்குப் பார்வை கிடைத்தது போன்ற மகிழ்ச்சி அவ் அம்மையாருக்கு உதித்தது. அருட் செல்வராகிய ஞான சம்பந்தர் வந்தால் தம் கணவர் சமயம் மாறுவார் என்ற நம்பிக்கை பிறந்தது. ஞான சம்பந்தர் வேதாரணி யத்தில் இருப்பதாகக் கேள்விப்பட்டார். அந்தப் பிராமண னிடம் ஓர் ஒலை எழுதித் தந்து அவரிடம் சேர்ப்பித்து இங்கு வருமாறு செய்தி அனுப்பினார்.

குலச்சிறையாரும் மங்கையர்க்கரசியாரும் சேர்ந்து எழுதிய ஓலையைப் படித்துச் சிவப்பணி காத்துக் கிடக்கிறது என்பது அறிந்த ஞான சம்பந்தரும் புறப்பட முனைந்தார்.

வயதில் மூத்தவரும் சமணரின் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டவரும் ஆகிய திருநாவுக்கரசர், ஞானசம் பந்தர் அங்குச் செல்வது உயிருக்கு ஆபத்து என்றும். சமணர் கொலைக்கும் அஞ்சாதவர் என்றும், நாளும் கோளும் சரியில்லை என்றும் அறிவித்தார்.

இறைவனிடம் நம்பிக்கையும் மன உறுதியும் உடையவரை நாள் என் செய்யும் கோள் என் செய்யும் என்று கூறினார். இறைவன் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கை முழுவதும் இருந்ததால் உயிருக்கு அஞ்சுவது தேவை இல்லை என்றும் போவதே தக்கது என்றும் கூறிப் புறப்பட்டார்.
திருஞானசம்பந்தர் பல தலங்களுக்கும் சென்று வழிபட்டு இறைவனைப் பாடி ஒரு திருக்கூட்டத்தோடு மதுரை வந்து சேர்ந்தார். அங்கே வாசீசர் என்ற முனிவர் அவரை வரவேற்றுத் தம்முடைய திருமடத்தில் தங்குமாறு வேண்டிக்கொண்டார். அதற்கு அவரும் இசைந்து ஓர் இரவு அங்குத் தங்கித் திருவமுது செய்தார்.

ஞானசம்பந்தரின் வருகையை அறிந்த சமணர்கள் அவரை அங்கேயே ஒழித்து விடுவது என்ற முடிவு செய்தனர். அவர் இருந்த மடத்துக்குத் தீவைத்தனர். அத் தீ அவரைப்பற்றவில்லை. அந்தச் சமணர்கள் மூட்டிய தீ பாண்டியனைப் பற்றுக என்று ஏவிவிட்டார். அது வெப்ப நோயாக அவனைப் பற்றி எரிந்தது.

அரசனுக்கு வெப்ப நோய் வந்தது குறித்து மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் மிகவும் வருந்தினர்; மருந்துகள் பலவும் தந்து அரசனைக் குணப்படுத்த முயன்றனர். மருத்துவம் அவரைக் குணப்படுத்தவில்லை; மதிமிக்க மாந்தரீகம் அவரைத் தொட்டுத் துயர் நீக்க முயன்றது. சமணர்கள் தொடத் தொட வெப்பம் மிகுந்ததேயன்றிக் குறைந்தபாடு இல்லை. சமணத் திறம், அதன் நிபுணத்துவம் அவற்றில் அரசனுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது.

அந்த நிலையில் மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அரசனை அணுகி “நோய்தீர வழி உள்ளது; ஞான சம்பந்தரை அழைத்து வந்தால் அவர் திருநீறு தந்தாலே நோய் பறந்தோடும்” என்று கூறினார்.

மயிற் பீலி கொண்டு சமணர் வயிற்றில் இடப் பக்கத்தைத் தடவினர்; அது நெருப்பு வைத்துக் கொளுத்து வது போல இருந்தது; குளிர்வதற்கு மாறாக நோய் தளிர்த்தது. அவர்கள் தோல்வியை ஒப்புக் கொண்டனர். அடுத்தது வலப்பக்கம், திரு நீறு இட்டதும் தொட்டபகுதி யெல்லாம் குளிர்ந்து நோய் தீர்ந்தது. இடப்பக்கமும் அவரையே தீர்க்க வேண்டி அரசன் வேண்டினான்.

வெப்பு நோய் நீங்கி ஞானசம்பந்தர் செப்பும் சைவத்தின் மேன்மையை ஒப்புக் கொண்டான். வெப்பு நோயோடு அவனுக்கு முன் இருந்த வளைவு ஆகிய கூனும் தீர்ந்து நிமிர்ந்து நின்றான். எழில்படைத்த மேனியைப் பெற்றான். கூன் பாண்டியன் என்ற பெயர் மறைந்து அழகன் என்ற பொருளுடைய சவுந்தர பாண்டியன் என்ற பெயர் வழங்கத் தொடங்கியது. சைவத்தைத் தழுவிக் கொண்டு முழுச் சைவனாக மாறினான்.


62. பாண்டியன் சுரம் தீர்த்த படலம் – திருவிளையாடற்
புராணம்

Related Post

29. மாயப் பசுவை வதைத்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் 29. மாயப் பசுவை வதைத்த படலம் யானையை ஏவியும் பயன் இல்லை; நாகத்தினை அனுப்பியும் பயனில்லை; அவர்கள்…

57. வலை வீசின படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 57. வலை வீசின படலம் 57. வலை வீசின படலம் உத்தர ஆலவாயில் மீனாட்சி அம்மையோடு தனித்து இருந்த போது சுந்தரர் வேதப் பொருளை…

58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் 58. திருவாதவூரடிகளுக்கு உபதேசித்த படலம் ஊனைச் சுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தவர் மாணிக்க வாசகர்.…

56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம்  56. இடைக்காடன் பிணக்குத் தீர்த்த படலம் சண்பகப் பாண்டியனுக்குப் பின் அவன் சந்ததியில் குலசேகர பாண்டியன்…

28. நாகம் எய்த படலம்

Posted by - ஏப்ரல் 17, 2020 0
திருவிளையாடற் புராணம் 28. நாகம் எய்த படலம் 28. நாகம் எய்த படலம் குலோத்துங்கனுக்குப்பின் அவன் மகன் அனந்த குண பாண்டியன் ஆட்சிக்கு வந்தான். அவனும் முன்னையோரைப்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன