ஆசை 60 நாள், மோகம் 30 நாள் – உளவியல் ஆலோசனை

ஆசை 60 நாள் மோகம் 30 நாள்

இங்கு அடிக்கடி திருமண உறவு பற்றி சொல்லப்படும் வாக்கியம் “ஆசை அறுபது நாள் , மோகம் முப்பது நாள்” ( ஆசை 60 நாள் மோகம் 30 ),  இதற்கு என்ன அர்த்தம் ? 60+30=90 நாட்கள் , அதாவது , 3 மாதத்திற்கு தான் புது மண தம்பதியர் இல்லற உறவில் இன்பம் அடைகிறார்களா ? அதற்கு பிறகு , இன்பம் குறைந்து போகிறதா ?

இன்றைய நவீன யுகத்தில் , பல திருமணங்கள் முதல் மூன்று மாதங்களுக்கு பின் , கசப்பை சந்திக்கின்றன . சிலர் விவாகரத்து கோருகின்றனர் . மேலும் சிலர் , குடும்பத்திற்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்று கருதி , ஒரே கூரைக்குள் ரூம் மேட்ஸ் – ஆக வாழ்கின்றனர்.

அப்படி என்ன பிரச்சனைகள் 3 மாதங்களுக்கு பின் புதுமண தம்பதியர்களுக்குள் எழுகிறது ? முன்பெல்லாம் இல்லாத அளவுக்கு மண முறிவுகள் ஏன் அதிகரித்து வருகின்றன ?

உளவியல் படி , இல்லற உறவு என்பது மூன்று பரிமாணங்களை கொண்டது .

  1. பாலுறவு
  2. மனப்பூர்வமான உணர்வுகளில் ஒத்திசைவு
  3. மற்ற குடும்பத்தினருடன் ஒத்துழைப்பு

இந்த மூன்று பரிமாணங்களில் ஏதாவது ஒன்றில் இன்பம் குறைந்தால் அது மற்ற பரிமாணங்களையும் பாதிக்கும் .

இரண்டாவது , மூன்றாவது பரிமாணங்களோடு ஒப்பிட்டு பார்க்கும் போது , முதல் பரிமாணமான பாலுறவில் முதல் 3 மாதங்களுக்கு பின் அதிக உளவியல் பிரச்சனைகள் இருப்பதாகவும் , அவற்றை சரி செய்து கொள்ள முறையான ஆலோசனைகள் கிடைப்பது இல்லை என்றும்  உளவியல் ஆலோசனை பெற வரும் பலர் கூறுகிறார்கள் .

ஆசை 60 நாள் மோகம் 30 நாள் !  ஆராய்வோமா ?

இது போன்ற பிரச்சனைகளுக்கு மிக முக்கிய காரணம் ஆபாச படங்கள் பார்ப்பது, இதன் காரணமாக ஒருவர் மீது மிக சீக்கிரமே சலிப்பு ஏற்பட்டு புதிதாக மற்றொருவர் மீது ஆசை ஏற்படுகின்றது.            

 இது நுகர்வு கலாச்சார யுகம் . நாம் விரும்பினாலும் , விரும்பாவிட்டாலும் , நாம் அனைவரும் நுகர்வு கலாச்சாரத்தின் அடிமைகள் என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை .

நுகர்வு கலாச்சாரத்திற்கும் , தம்பதியர் பாலுறவுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ? சம்பந்தம் இருக்கிறது .

ஒரு பொருளுக்காக நெடு நாள் ஆசைப்பட்டு கடைசியில் ஒரு நாள் கிடைக்கிறது என்றால் அதை பயன்படுத்திய கொஞ்ச காலத்திலேயே அலுத்து போய் , அடுத்த பொருளுக்கு ஆசைப்பட வைக்கிறது இந்த நுகர்வு கலாச்சாரம்.

திருமண வயது இப்போதெல்லாம் ஆண்களுக்கு 30 என்றும் , பெண்களுக்கு 25 என்றும் ஆகிவிட்ட சூழ்நிலையில், நெடுநாள் தேக்கி வைத்திருந்த பாலுறவு ஆசையை தீர்த்துக்கொள்ள விரும்பி , திருமணம் செய்து பின்னர் கொஞ்ச காலத்திலேயே அது அலுத்து போய் , வாழ்க்கையின் அடுத்த கட்ட மகிழ்ச்சியை நாடி மனம் சென்று விடுகிறது . இதுவே நுகர்வு கலாச்சாரத்தின் விளைவு . பலருக்கு இந்த கொஞ்ச காலம் என்பது மூன்று மாதங்களாகவே இருக்கிறது .

வேலை செய்யும் இடத்திலும் திருமணமான மூன்று மாதங்கள் வரை , புதிதாய் திருமணம் ஆனவர் என்று கருதி விடுமுறை எடுத்தாலும் , மாலையில் சீக்கிரமே வீட்டுக்கு சென்றாலும் , கண்டு கொள்ளாமல் இருப்பார்கள் .

ஆனால் மூன்று மாதங்களுக்கு பிறகு , திருமணத்திற்கு முன் எந்த அளவுக்கு வேலை பார்த்து வந்தார்களோ , அதே போல் வேலை பார்க்க வேண்டும் என்றாலாவது பரவாயில்லை . ‘ திருமணம் ஆகிவிட்டது ; பொறுப்பாக இருக்க வேண்டும்’ எனவே முன்பு வேலை பார்த்ததை விட அதிக பொறுப்புடன் பிரமோஷனுக்காக வேலை பார்க்க வேண்டும் என்று இந்த சமுதாயம் பிரஷர் கொடுக்கும் .

இந்த பிரஷரில் , தரப்பட்ட எல்லா வேலைகளையும் முடித்து விட்டு , வீட்டுக்கு தாமதமாய் களைப்பாய் வந்து சேர்ந்தால் , எப்படி பாலுறவு கொள்ள முடியும் ?

Aasai 60 Naal Mogam 30 Naal

திருமணம் ஆன பலரிடமும் திருமணமான சில மாதங்களுக்கு கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு , பின்னர் கேட்கப்படும் ஒரு முக்கிய கேள்வி , “ திருமணம் ஆகிவிட்டது , அப்புறம் எப்போது குழந்தை ?

குழந்தை உருவாகி இருந்தால் , எப்படியும் 3 மாதங்களுக்கு உள்ளாக தெரிந்து விடும் . 3 மாதங்களில் குழந்தை உருவாகாவிடில் குழந்தை உருவாக வேண்டும் என்ற முனைப்பில் , பாலுறவு என்பதனை தினமும் செய்யும் ஒரு தினசரி வேலை போல் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது . எனவே பாலுறவில் கிடைக்க வேண்டிய இன்பம் போய்விடுகிறது .

குழந்தை உருவாகாவிட்டால் தான் பிரச்சனை என்றால் , குழந்தை உருவாகிவிட்டாலும் அதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது . மனைவி கருத்தரித்து இருக்கும் போது , மனைவியோடு பாலுறவு கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது . குழந்தை கருத்தரிப்பதும் , இவ்வாறான சந்தேகம் எழுவதும் பொதுவாக முதல் மூன்று மாதங்களிலேயே நடைபெறுகிறது .

குழந்தை கருவில் இருக்கும் போதும் , குழந்தை பிறந்த பிறகும் , பெண்களின் உடலில் பல மாற்றங்கள் நிகழ்வதால் , அவர்களின் உடற்கட்டு மாறி விடுகிறது . இல்லற உறவின் ஆரம்ப காலங்களில் இருந்து போல் உடல் அழகை பராமரிக்க முடியாமல் , பல திருமணமான பெண்கள் தனது உடற்கட்டை இழந்து விடுகின்றனர்.

இத்தனை நாட்கள் ஆராதித்து வந்த அழகு குன்றி விடுவதால் , ஆண்களும் திருமணமான புதிதில் மனைவிக்கு தந்த நெருக்கத்தை குறைத்து கொள்கின்றனர் .

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது , 3 மாதங்களுக்கு பின் , பிறகு இல்லற வாழ்வில் மகிழ்ச்சி குறையும் என்ற வாக்கு நடைமுறையில் சரிதானோ என்று தோன்றுகிறது .

இவ்வாறு புது மண தம்பதிகள் முதல் மூன்று மாதங்களில் பாலுறவு என்னும் ஒரு பரிமாணத்தில் மட்டும் , பல விதமான பிரச்சனைகளை எதிர் கொள்வதால் , இல்லற வாழ்வில் ஒரு தொய்வு ஏற்படுகிறது . கணவருக்கும் , மனைவிக்கும் இடையில் ஒரு இடைவெளி ஏற்பட தொடங்குகிறது . சிலருக்கு இந்த இடைவெளி நாளுக்கு நாள் அதிகமாகி , மன கசப்புகளையும் முடிவில் மண முறிவு என்று தீர்மானிக்கும் அளவுக்கு சென்று விடுகிறது .

இந்த தொய்வை சரி செய்து , இடைவெளியை குறைத்து , 3 மாதங்களை தாண்டியும் நிலையான இன்பம் பெற , என்னென்ன உளவியல் ஆலோசனைகள் இருக்கின்றன என்று இப்போது பார்க்கலாம் .

உளவியல் ஆலோசனைகள்

நாம் நுகர்வு கலாச்சாரத்தின் அடிமைகள் என்பதால் , நம்மை அறியாமல் திருமண வாழ்வும் , பாலுறவும் கொஞ்ச நாட்களுக்கு உள்ளாகவே அலுத்து போய் விடும் வாய்ப்பு அதிகம் என்ற உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் .

தொய்வு ஏற்படும் போதெல்லாம் , அதற்கு முக்கியத்துவம் அளித்து , தொய்வை போக்க புதிய யுக்திகளை நாட வேண்டும் . தொடர்ந்து எழும் சிறு சிறு இடைவெளிகளே பின்னர் மண முறிவு என்னும் முடிவை எடுக்க வைக்கும் .

பெற்றோர் , உடன் பிறந்தோர் போன்ற இரத்த பந்த உறவுகளில் இடைவெளி ஏற்பட்டாலும் , வெகு நாட்களுக்கு பின்னால் கூட அந்த இடைவெளிகளை போக்கி சுமூகமாக்கி கொள்ள முடியும் . ஆனால் திருமண உறவுகள் அப்படி அல்ல .

தொடர்ந்து தரப்படும் அன்பும் , அரவணைப்பும் , பாதுகாப்பு உணர்வுமே நம்மை உறவில் நம்பிக்கையுடன் நிலைத்து நிற்க செய்யும் . எனவே அவ்வபோது ஏற்படும் கருத்து வேறுபாடுகளை முடிந்த வரை உடனுக்குடன் களைந்து சரி செய்து கொள்வதுதான் உத்தமம் .

வேலையில் தரப்படும் பிரஷரும் , அதனால் விளையும் டென்ஷனும் நம்மை பாதிக்காமல் இருக்க , உடற்பயிற்சிகள் , விளையாட்டு , உங்களுக்கு பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துதல் போன்றவற்றை தொடர்ந்து செய்து வர வேண்டியது அவசியம் .

பாலுறவு என்பது இனப்பெருக்கத்திற்காக மட்டுமல்ல

எவ்வளவு வேலைகள் இருந்தாலும் , உங்களுக்கும் , உங்கள் அன்புக்கு உரியவர்களுக்கும் நேரம் ஒதுக்கி , அதனை மகிழ்ச்சியுடன் கழிப்பது மிக முக்கியம் . ஏனெனில் வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கே ! நான் சொல்வது சரி தானே ?

பாலுறவு என்பது இனப்பெருக்கத்திற்காக மட்டுமல்ல . அன்பை பகிர்ந்து கொள்ள , மகிழ்ச்சியுடன் பொழுது போக்க , நெருக்கமும் , நம்பிக்கை உணர்வும் அதிகரிக்க என்று அதற்கு பல பயன்பாடுகள் உண்டு .

எனவே குழந்தை உருவாக வேண்டும் என்பது பாலுறவு கொள்வதற்கான தேவைகளில் ஒன்றே ஒன்றுதான் . எனவே மகிழ்ச்சியாக பாலுறவு கொள்ளுங்கள் , அதன் துணைப் பொருளாக (byproduct), கருத்தரித்தலும் நடக்கும் .

மனைவியின் வயிற்றில் கரு உருவான உடன் , பாலுறவு கொள்ள கூடாது என்று சொல்வது அறிவியல் உண்மை இல்லை . பாலுறவு கொள்வதில் முன் விளையாட்டு என்று சொல்லப்படும் சமாச்சாரங்களை எப்போதுமே செய்து வரலாம் .

கரு உருவான உடனும் , குழந்தை பிறந்ததற்கு பின்னும் பெண்களுக்கு உடலில் நிகழும் மாற்றங்கள் இயல்பானவை . சில நேரங்களில் இதனால் பாலுறவில் நாட்டமில்லாமல் போகலாம் . அதனை ஆண்கள் புரிந்து கொண்டு , தேவையான அன்பையும் அரவணைப்பையும் அளிக்க வேண்டும்.

உடற்பயிற்சி செய்வது அவசியம்

பெண்களும் இந்த மாற்றங்களால் பாதிக்கப்படாமல் இருக்க , உடற்பயிற்சி செய்வது அவசியம் .

அப்போது தான் தங்களின் சுயமதீப்பீட்டை தொடர்ந்து உயர்வாக வைத்துக்கொள்ள முடியும் . தம்பதியர் இருவரின் உயர்வான சுயமதிப்பீடும் (Self Esteem) இல்லற இன்பத்தை நிர்ணயிக்கும் ஒரு காரணி என்பது உளவில் உண்மை .

மேலும் , இது போன்ற பிரச்சனைகளை தானாகவே தீர்க்க முடியாமல் போனால் , உரிய தகுதி பெற்ற மருத்துவரை அல்லது பாலுறவுக்கென உளவியல் ஆலோசனை அளிப்பவர்களையோ நாடுவது குழப்பங்களை தீர்த்து கொள்ளவும் , மகிழ்ச்சியான இல்லற உறவுக்கும் வழி வகுக்கும் .

பல நேரங்களில் , உளவியல் ஆலோசனை என்பது பிரச்சனைகளுடன் பொருத்திப்பார்க்கப்படுவது மிகவும் துரதிஷ்டவசமானது . உளவியல் ஆலோசனையை மகிழ்ச்சியுடனும் , வாழ்க்கை முன்னேற்றத்துடனும் பொருத்திப்பாருங்களேன் ! அப்படி செய்தீர்களேயானால் ,  இல்லற வாழ்வு சிறக்கவும் உதவும் !!

How To Spice Up Your Marital Sex Life

பொன்மொழிகள் படிக்க 

இந்த பதிவு பற்றிய தங்கள் கருத்துக்களை தெறிவிக்கவும்

உங்கள் கருத்தை இடுக...

வாழ்க தமிழ்… வளர்க தமிழினம்…

error: Content is protected !!
Logo
Register New Account
Reset Password
%d bloggers like this: