தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் (darasuram) என்னும் ஊரில் உள்ளது, இக்கோவில் இரண்டாம் ராசராசனால் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இம்மன்னர் பெயரால் இக்கோவில் இராஜராஜேச்சுரம் எனவும் அழைக்கப்பட்டது.
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலின் சில பகுதிகள் எழுந்தன.
இந்த தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் , கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயில், பெருவுடையார் கோயில் ஆகிய மூன்றும் சேர்த்து அழியாத சோழர் பெருங்கோயில்கள் எனப்படுகின்றன. தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.
தாராசுரம் தல வரலாறு
ஐராவதம் என்பது ஒரு யாணையின் பெயர், இது இந்திரனின் வாகனமாகும், துருவாச முனிவருடைய சாபத்தால் இதன் உருவம் வள்ளை நிறத்தினின்று மாறி கருமை நிறம் அடைந்தது.
இதனால் வருத்தமுற்ற ஐராவதம் யானை இத்தலத்திற்கு வந்து இங்கு எழுந்தருளிய சிவபெருமானை வணங்கி சாபத்திலிருந்து விடுதலை பெற்றது என்பது இத்தலத்தின் தல புராணம். இதனால் தான் இங்குள்ள இறைவனின் பெயர் ஐராவதேசுவரர் எனப்படுகின்றது.
சோழர்களின் கட்டிடக் கலைக்கு இந்த கோயில் ஒரு சிறந்த உதாரணமாகும். இக்கோவிலின் முன்பு மண்டபம் ரத போன்ற அமைப்பில் உள்ளது. இம்மண்டபத்தில் உள்ள தூண்களின் சிற்பங்களை காண இரு கண்கள் போதாது . இங்குள்ள இறைவனை இந்திரனின் ஐராவதமும், எமதர்ம ராஜாவும் வழிபட்டு உள்ளதாக புராணம் கூறுகிறது. இங்கு உள்ள திருக்குளத்திர்க்கு எமதீர்த்தம் என பெயர்.
உலகப் பாரம்பரிய சின்னம்
1987-ல், பெருவுடையார் கோயில் (தஞ்சைப் பெரிய கோயில்) , யுனெஸ்கோ அமைப்பால் உலகப்பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், 2004-ல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோயிலும் மற்றும் ஐராவதேஸ்வரர் கோயிலும் உலகப்பாரம்பரியச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன. தமிழ் நாடு தொல்லியல் துறை இக்கோயிலின் அமைப்புக்களை ஆராய்ந்து இக்கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைப் படியெடுத்து சோழ மன்னர்களைப் பற்றிய பல தகவல்களை பதிப்பித்துள்ளது,
தாராசுரம் கோயில் சிறப்புகள்
இக்கோயில் அர்த்த மண்டபம், முகமண்டபம், இராஜகம்பீர மண்டபம், கருவறை மண்டபம் எனும் நான்கு மண்டபங்களைக் கொண்டது.

ஐராவதேஸ்வரர் கோயிலில் திருவள்ளுவர் சிலையும் காணப்படுவது மிகவும் சிறப்பாகும்.
சேக்கிழார் இயற்றிய பெரியபுராணத்தில் சிறப்பிக்கப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்களைச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது.
அநபாயச்சோழன் என்று அழைக்கப்படும் இரண்டாம் குலோத்துங்கச் சோழன் சேக்கிழாரைக் கொண்டு அறுபத்துமூன்று நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை இயற்றினார்.
அவரது மைந்தனான இரண்டாம் இராஜராஜ சோழன் அவர்களைச் சிற்பங்களாக இக்கோயிலில் செதுக்கிவைத்துள்ளார்.
அடிப்பகுதி, தூண்கள் மற்றும் விதானங்களில் மூன்று பகுதிகளாகச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றில் நடனக்காட்சிகள், போர்க்காட்சிகள், மதநிகழ்வுகள், முனிவர்கள், விலங்குகள், மேலும் கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கருவறை மண்டபத்தின் வெளிபுறச் சுவர்களில், கீழிருந்து மேற்புறம் வரை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. அவற்றின் நடுப்பகுதியிலேயே இவ்வறுபத்துமூன்று நாயன்மார்களின் சிற்பத்தொகுதிகள் காணப்படுகின்றன.
இடரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட அழகிய கலைக்கூடம் இக்கோயில். இக்கோயிலைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் உள்ளன. தூண்களில் அமைக்கப்பட்டுள்ள சிற்பங்களும், சுவர்களில் அமைக்கப்பட்டுள்ள வடிவங்களும், நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் என பல அரிய சிற்பக் கலைப் படைப்புக்களை இக்கோயில் கொண்டுள்ளது.
ஐராவதேஸ்வரர் கோயில் கட்டிடக்கலை
ஐராவதேசுவரர் கோயில் திராவிட பாணியில் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவிலமைந்த இக்கோயில் கரக்கோயில் என்ற வகையைச் சேர்ந்தது என்பதற்கான சான்றுகள் தமிழ் இலக்கியப் படைப்புகளில் காணப்படுகின்றன.
தஞ்சாவூர் பெரிய கோயில் மற்றும் கங்கைகொண்ட சோழீசுவரம் கோயில் இரண்டையும் விடச் சிறியதாக இருப்பினும் இக்கோயில் நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்ததாய் உள்ளது. கோயிலின் முதன்மை நுழைவாயில் கிழக்குப்புறத்தே அமைந்துள்ளது. கோயில் விமானம் 24 மீ (80 அடி) உயரங்கொண்டது. இக்கோயிலின் கருவறையைச் சுற்றி உட்சுற்றுப்பாதையும் ஒருகோட்டச்சு மண்டபங்களும் அமைக்கப்படவில்லை.
சோழர் காலத்து யானைச் சிற்பங்கள்
சோழர்கள் வலிமை வாய்ந்த குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை, கப்பற்படைகளைக் கொண்டிருந்தனர். யானைகள் போர்களில் முக்கிய பங்கு வகித்தன.
1178 இல் தமிழகத்திற்கு வருகை புரிந்த சீனப்பயணி சாவ் ஜூ கா (chau Ju-kua) சோழர்கள் 60.000 யானைகளைக் கொண்ட யானைப்படையைக் கொண்டிருந்ததாகவும், யானைமீதிருந்து வீரர்கள் அம்பெய்திப் போர் செய்ததாகவும், சிறப்புடன் போரிட்ட யானைகளுக்குச் சிறப்புப்பெயர் சூட்டபட்டதாகவும் குறிப்பிடுகிறார்.

இந்த ஐராவதீஸ்வரர் ஆலயம், ஐராவதம் என்ற இந்திரனின் யானையின் பெயரை அடிப்படையாகக் கொண்டுள்ளது. யானை என்பது பிரம்மாண்டத்தின் அடையாளம்; பக்தியின் சின்னம்; எதிரிகளை மிரட்சிக்கு உள்ளாக்கக்கூடிய பெரிய உருவம்; ஆகையால் இவ்வாலயத்திலுள்ள சிற்ப வேலைப்பாடுகளுள் யானைச் சிற்பங்கள் சிறப்புடன் ஆங்காங்கே அமையப் பெற்றுள்ளன.
இங்கு, யானைச் சிற்பங்கள் தேரை இழுத்தபடி வேகமாய் செல்வதைப்போல் அமைக்கப்பட்டுள்ளது. மற்றொரு யானைச் சிற்பம் சீற்றத்துடன் வாலை தூக்கிக் கொண்டு போர்க்களத்தில் ஓடுவதைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த யானை சிற்பங்கள் சோழர்காலத்தின் செல்வச் செழிப்பினையும், போர்க்களத்தில் யானைகள் புரிந்த வீரச் செயல்களை நம் கண்முன்னே காட்டுவனவாக அமைந்துள்ளது.
[content-egg module=Amazon template=custom/compact next=1]
மேலும், ராஜகம்பீரன் மண்டபத்தின் கிழக்கு நுழைவு வாயிலுக்கருகில் ஒரு பெண்மணி ஒரு யானையைத் துரத்துவதுபோல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது.,
பிரம்மாண்டத்தின் உருவாய், பக்தியின் சின்னமாய், வீரத்தின் விளைநிலமாய் பல நூற்றாண்டுகளாய் விளங்கிய யானையின் இன்றைய நிலை நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
உயர் நிலையில் விளங்கிய யானை இன்று தெருக்களிலும், ஆலயங்களிலும், பிச்சை எடுக்கின்றன. சர்க்கஸ் கூடாரத்தில் கேளிக்கைகள் செய்கின்றன.
தாராசுரம் கோயில் இசைப்படிகல்

நந்தியின் அருகே அமையப் பெற்று இருக்கும் பலி பீடத்தின் படிகள், இசை ஒலி எழுப்பும் நாதப்படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு கனங்களிலிருக்கும் இந்த தூண்கள் தட்டும்போது “சரிகமபதநி” என்ற சப்த ஸ்வரங்களும் ஒலிக்கின்றன.
ராஜகம்பீரன் திருமண்டபம்
முன் மண்டபம் ராஜகம்பீரன் திருமண்டபம் என்று கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளது.

ராஜகம்பீரம் என்று அழைக்கப்படும் மகா மண்டபம் ஐராவதம் எனப்படும் யானைகளாலும் குதிரைகளாலும் இழுத்துச் செல்லப்படுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபத்திற்கு ஏறிச் செல்லும் படியில் யானைகள் ஒரு பக்கத்திலும் குதிரைகள் மற்றொரு பக்கத்திலும் தேரை இழுத்துச் செல்வது போல் உள்ள சிற்பத்தின் சக்கரம் இன்றுவரை இந்திய கலையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
இதில் உள்ள சக்கரம் உள்ளிட்ட பல சிற்பங்கள் அந்நியர் படையெடுப்பால் சிதைக்கப்பட்டு தொல்லியல் துறையால் பிற்காலத்தில் திரும்ப சேர்க்கப்பட்டது.
குதிரைகள், யானைகள் பூட்டப்பட்ட ரதத்தின் அமைப்பில் இருக்கும் இம்மண்டபம், நுணுக்கமான பல சிற்பங்களுடன் கூடிய தூண்களால் நிறைந்தது. தூண்களில் நர்த்தன கணபதியின் உள்ளங்கை அகல சிற்பம் உள்ளது.
நாட்டியத்தின் முத்திரைகள் காட்டும் பெண்களின் சிற்பங்களும், வாத்தியக்காரர்களின் குழுக்களும், புராணக் கதைகளும் சில சென்டிமீட்டர் அளவிலேயே மிகவும் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளன.
தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் சிற்பங்கள்
கோயிலின் மகாமண்டபத்தின் தூண்கள் ஒவ்வொன்றிலும் நான்கு புறங்களிலும் பல புராணக் கதைகள் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
மகாமண்டபத்தின் நுழைவாயிலில் காணப்படும் கண்ணப்ப நாயனார் மெல்லிய செருப்பு அணிந்திருக்கிறார்.
இராமாயண காட்சி
இராமாயண காட்சி வாலியும், சுக்ரீவனும் போர் புரிய, மறைந்து இருந்து சுக்ரீவன் மீது அம்பு எய்தும் ராமர்

கருவறையில் இலிங்கத்தின் இருபுறமும் துவாரபாலகர்கள் காணப்படுகின்றனர். இது பிற சிவன் கோயில்களில் காணப்படாதது.
சூர்ய லிங்கங்கள் (பதினொன்று), அபூர்வமான விலைமதிக்கமுடியாத சாலிக்கிராம லிங்கம் பிரகாரத்தில் காணப்படுகிறது. பிறகோயில்களில் இல்லாத, அதிசயமான சிற்பங்களும் இங்கு உண்டு.
கையில் வீணையில்லாத சரஸ்வதி, பாம்புகளுக்கு அரசனான நாகராஜன், அன்னபூரணி என சாதரணமாகக் கோயில்களில் காணப்படாத சிற்பங்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
அர்த்தநாரீசுவரர்
கோயிலின் வெளிச் சுவர்களில் மூன்றுமுகங்கள், எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் ( சிவனும் பார்வதியும் ஒன்றுகலந்தது), மேல்கரங்களில் சிவனுக்குரிய மானும், கோடாலியும்…

கீழ்கரங்களில் அழகான புல்லாங்குழல் ஏந்திய சிவனும், குழலூதும் கண்ணனும் இணைந்த சிவன், காலை மடக்கி ஓய்வாக உட்கார்ந்திருக்கும் சிவன் எனப் பல சிற்பங்களும் உண்டு. குழலூதும் சிவன் இங்கு மட்டுமே காணப்படும் அரிய சிற்பம் என்று சரித்திர ஆய்வாளரான குடவாயில் சுப்ரமணியம் கண்டறிந்துள்ளார்.
மண்டபத்தின் மேல் பிரகாரத்தில் நாயன்மார்கள், 108 சிவனடியார்களின் உருவங்கள் உள்ளன.
சிலை சொல்லும் கதை | தாராசுரம் கோயில்
“தாராசுரம்” – தமிழனின் கலை, கலாச்சாரம், பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனயோ சின்னங்களில் இதுவும் ஒன்று.
இக்கோவிலின் சிறப்பம்சமே, கருமண்டபத்தின் வெளிப்புறச் சுவரின் அடிப்பாகத்தில் 63 நாயன்மார்களின் கதைகளை 95 கற்களில், செதுக்கி வைத்திருப்பதுதான்.
ராஜகம்பீர மண்டபம்! இம்மண்டபத்தில் கிட்டத்தட்ட 120 தூண்கள் உள்ளன. இத்தூண்கள் 12 அடி உயரம் இருக்கலாம். இத்தூண்களில், பல கடவுள்களின் வடிவங்கள், முனிவர்கள், வழிபடும் மக்கள், கடவுளின் கதைகள், மக்களின் வாழ்க்கைமுறை, கலாச்சாரம், மலர்கள், விலங்குகள், யாழிகள் என பலவற்றை நாம் காணமுடிகிறது.
[content-egg module=Amazon template=custom/compact next=1]
மன்மதனை சிவன் எரித்த கதை

கயிலாயத்திலே சிவன் தவத்தில் அமர்ந்து விடுகிறார். இதனால் உலகில் உயிர்கள் பிறக்கவில்லை – உலகம் இயங்காமல் போகிறது. எனவே முனிவர்கள் சிவனின் தவத்தைக் கலைக்க முயல்கிறார்கள். சிவனும் சக்தியும் இணைந்து இருந்தால்தான் உலகம் இயங்கும் என்பதால், சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனை ஏவுகிறார்கள். மன்மதனும் சிவன் மேல் மலர்அம்பு தொடுக்கிறான்.
சிவபெருமான் கண்களைத் திறந்தவுடன் இத்தனை ஆண்டுகால தவத்தின் வலிமையால் கண்களில் உண்டான தீப்பொறி மன்மதனை எரித்துவிடுகிறது. மன்மதன்அம்புவிட்ட இடம்தான் திருக்கொறுக்கை என்றும் அவன் எரிந்து விழுந்த இடம் விபூதிக்குட்டை என்றும் திருக்கொறுக்கை தலவரலாறு நமக்குத் தெரிவிக்கிறது. திருக்கொறுக்கையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இந்த விபூதிக்குட்டை என்ற ஊர் அமைந்துள்ளது. இன்றும் இந்த ஊரில் எந்தக் குட்டையில் இருந்து மண்ணை அள்ளிப்பார்த்தாலும் அது விபூதி போன்றே இருப்பதாகக் கூறுகிறார்கள்.
ராஜ கம்பீர மண்டபத்திற்குக் கிழக்குப் பக்கம் உள்ள படிக்கட்டில் ஏறினால், 2-வது வரிசையில் 3-வது தூணில் மன்மதனை சிவன் எரித்த கதை சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் சிவன் தவமிருப்பது போன்ற காட்சி, மறுபுறம் மன்மதன் அம்பு எய்தும் காட்சி, இன்னொருபுறம் மதனும் ரதியும் சிவனை வணங்கும் காட்சி சித்தரிக்கப்பட்டுள்ளது.
கம்பீர மண்டபத்தில் ஏறினால் 2-வது வரிசையில் 2-வது தூணில் ஈசன் திரிபுரம் எரித்த கதையைச் சிறப்பாகச் செதிக்கியுள்ளார்கள். அடுத்ததாக, மூன்றாவது வரிசையில் மூன்றாவது தூணில் முருகன்-வள்ளி திருமணம், முருகன்-தெய்வானை திருமணக் காட்சிகள் உள்ளன.

வள்ளி திருமணக் காட்சியைச் சற்றே உற்று நோக்கினால், வள்ளியை முருகனுக்குத் தாரைவார்ப்பது போல சிற்பங்களை வடிவமைத்துள்ளனர். ஆனால் தெய்வானை திருமணக் காட்சியில் முருகன் தெய்வானைக்குத் தாலிகட்டுவது போலச் சிற்பங்களை அமைத்துள்ளனர்.
வள்ளித் திருமணம், தெய்வயானை திருமணம் போன்றவற்றை நக்கீரர் எழுதிய திருமுருகாற்றுப்படையும், கச்சியப்ப சிவாச்சாரியாரின் கந்தபுராணமும் பிரதிபலிக்கின்றன. இன்றும் நம்முடைய திருமணத்தில், தாரை வார்ப்பும், தாலி கட்டும் சடங்கும் இருப்பதை நம்மால் ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்கமுடியவில்லை.
கடைசியாக, கோவிலைச் சுற்றி வரும்போது, துர்க்கை சன்னதிக்கு இடப்பக்கத்தில் படிக்கட்டிற்குப் பக்கத்தில் சுந்தரர் சிவனை வேண்ட, ஆறு வழிவிடும் காட்சி ஒன்றை அற்புதமாகச் செதிக்கியுள்ளனர்.
சுந்தரரும், சேரமான் பெருமாளும் திருக்கண்டியூரில் சிவனை வழிபட்டுவிட்டு திருவையாறு சிவனை வழிபடச் செல்லும்போது நடுவில் காவேரி ஆறு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அப்போது சுந்தரர் “பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான்” எனத் தொடங்கும் தேவாரப் பாடலைப் பாட, காவேரி ஆறு விலகி வழிவிட்டதாகச் சுந்தரர் வரலாறு நமக்கு காட்டுகிறது.
சோழர்கள் நமது சமயம், பண்பாடு, கலாச்சாரம் அனைத்தையும் வருங்காலச் சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் நோக்கத்திலேயே இதனைக் கட்டியிருப்பார்கள் என்பதை அறிய முடிகிறது.
ஐராவதேஸ்வரர் கோயில் சாளரங்கள்
பிரகாரங்களின் மற்றொரு அழகான அம்சம் அங்கு அமைக்கப்பட்டுள்ள காற்றோட்டமிக்க மண்டபங்களாகும். இம்மண்டபங்களில் சதுர, செவ்வக, நீள்சதுர, வட்ட, பூக்கள் வடிவிலான குறுக்கும் நெடுக்கிலும் காற்று நுழையும்படி அமைக்கப்பட்ட ஒரே கல்லால் அமைக்கப்பட்ட கிரானைட் சாளரங்கள் அமைந்துள்ளன.
தாராசுரம் கோயில் அம்மன் சன்னிதி

ஐராவதேஸ்வரர் கோயிலின் வலப்புறத்தில் வெளியே தெய்வநாயகி அம்மனுக்குத் தனியாக கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சன்னதியின் சுவர்களில் பல பூக்களின் வடிவங்களை பார்க்கலாம்.
சோழர் காலத்தில் பெண்களின் நிலை
சோழர்காலத்தில் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை அறிந்து கொள்வது மிகவும் சுவராஸ்யமானதாகும். பெண்கள் சமூகத்தில் நேரடியான பங்களிப்பை ஆற்றினர். சமூகத்தின் அடித்தட்டுப் பெண்கள் முதல் அரச பெண்கள் வரை சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் கலாச்சார பங்களிப்பை ஆற்றினர்.
ஐராவதீஸ்வரர் கோயிலில் பெண்களின் சமூகநிலையைக் காட்டும் தாய்மார்கள், மனைவியர், இசைக்கருவிகளை இசைக்கும் பெண்கள், நடன மாதர்கள், பெண்துறவியர், அரசகுலப் பெண்கள், போரிடும் வீரப்பெண்கள், குழந்தை பிறப்பு, சமையல் செய்தல் போன்ற பெண்களின் சிற்பங்கள் இராஜகம்பீர மண்டபத்தின் மேற்பகுதியில் உள்ளன.
நாட்டியத்தில் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆடல் மகளிர் நடனமுத்திரைகளுடன் நடனமாடும் சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் நுண்ணிய வேலைபாடுகள் அமைந்த அணிகலன்களையும் உயர்ந்த ஆடைகளையும் அணிந்த பெண்களின் சிற்பங்களும் உள்ளன.
இச்சிற்பங்களின் வழியாகச் சோழர்காலத்தில் பெண்கள் சமூகத்தில் முக்கிய பங்காற்றியதை அறியமுடிகிறது.
தாராசுரம் வீரபத்திரர் திருக்கோயில்
அம்மன் கோயிலுக்குப் பின்புறம் பட்டீஸ்வரம் சாலையில் வீரபத்திரருக்குக் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. வீரபத்திரர் சிவனின் ஜடாமுடியிலிருந்து அவதரித்ததாக கதைகள் கூறுகின்றன. இந்த தாராசுரம் வீரபத்திரர் திருக்கோயில்
ஒட்டக்கூத்தர் பள்ளிப்படை

இக்கோயிலின் கோபுரம் முழுதும் செங்கல்லால் அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் முதன்முதலாக வெறும் செங்கல்லால் அமைக்கப்பட்ட முத்ல் பெரிய கோபுரம் இது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
திருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் இங்குதான் தமிழ்க்காவியமான “தக்கயாகப் பரணி” என்னும் நூலைப் பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை (ஒரு வகையில் சமாதி) காணப்படுகின்றது, இதன் மேல் லிங்கம் காணப்படுகிறது.
பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டக்கூத்தரின் சமாதிக்கு 16 சூலை 2017 அன்று குடமுழுக்கு நடைபெற்றது சுற்றுச்சுவர் எதுவுமின்றி கோயில் திறந்த வெளியில் இருக்கிறது.
இராசராசேச்சரம் நூல்
இத்திருக்கோயில் குறித்து “தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் (இராசராசேச்சரம்)” என்ற நூலை முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் எழுதியுள்ளார்.
[content-egg module=Amazon template=custom/simple_grid]