குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த

குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த – உளவியல்

1231 0

குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த

என்னிடம் பல பெற்றோர்கள் , தங்கள் குழந்தைகளை உளவியல் ஆலோசனை பெற அழைத்து வருகிறார்கள் . ஆலோசனை கூடத்திற்கு வந்தவுடன் அவர்கள் சொல்லும் , ஸ்டாண்டட் வாக்கியம் இது தான் , “ குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டுறங்க, கான்சன்ட்ரேஷனே (Concentration) இல்லை , ஏதாவது செய்யுங்கள்”

குழந்தைகளிடையேயும் , அவர்களின் பெற்றோர்களிடமும் உரையாடியதிலிருந்து , அழைத்து வரப்படும் பெரும்பாலான குழந்தைகள் , படிப்பதையே ஒரு சுமையாக கருதுகிறார்கள் , ஏதோ பெற்றோர்களின் , சமுதாய கட்டாயத்தாலும் படிக்க வேண்டுமே என்று படித்து வருகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன் .

எந்த அளவுக்கு படிக்க உங்களுக்கு பிடிக்கிறது என்பதை மிகச்சரியாக நான் புரிந்து கொள்ள நூற்றுக்கு எவ்வளவு என்று ஒரு எண்ணில் சொல்லுங்கள் என்றால் , அவர்களின் விடை 20 க்கும் 50 க்கும் இடையேயே இருக்கிறது .

புரிந்து படிப்பீர்களா என்று கேட்டால் , அதுவும் இல்லை . தொடக்கத்திலிருந்தே மனப்பாடம் செய்தே ஓட்டி விட்ட குழந்தைகள் , மேற்படிப்புகளில் எவ்வளவு தான் மனப்பாடம் செய்வார்கள் ? அதிலும் சராசரி மாணவர்களுக்கு , 9 ஆம் வகுப்பிற்கு பிறகு மனப்பாடம் செய்து படிப்பதென்பது முடியவே முடியாத காரியம் .

ஆக படிப்பு என்பது குழந்தைகளுக்கு அவ்வளவு இனிமையானதாக இல்லை . படிப்பை பற்றிய பயம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது . படிக்க முடியாமல் போவதற்கு கல்வியில் ஆர்வம் இல்லாததும் , பயமுமே அடிப்படை காரணங்களாகும் .

ஓர் உளவியலாளனாக பெற்றோர்களுக்கும் , குழந்தைகளுக்கு நான் கொடுக்கும் ஆலோசனையின் சாராம்சம் இது தான் “பிடித்து படியுங்கள் , புரிந்து படியுங்கள்” .

ஏன் படிப்பு பிடிக்க வேண்டும் ?

  • படிப்பு என்பது வாழ்க்கையின் முதல் 20 வருடங்களில் , வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படையை சொல்லித்தருவது
  • கல்வி நம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த கிடைக்கும் அரிய பொக்கிஷம்.
  • நம் வாழ்க்கையை நாம் நினைத்தபடி வாழ , நம் குறிக்கோள்களை நாமே அடைய வழிகாட்டும் கருவி .
  • கற்பதை நிறுத்தினால் , வாழ்க்கையின் சுவாரஸ்யம் குறைந்து விடும் .

இவற்றையெல்லாம் மிக முக்கியமானது என்னவெனில் ஒவ்வொரு பாடத்திற்கும் பின் ஏதோ ஒரு , வாழ்க்கை முழுவதற்கும் பயன்படும் திறனும் , மதிப்பீடும் நிச்சயமாக இருக்கும் . ( நன்றி : ஈஸி வித்யா )

குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த

How to Concentrate on Studies

எடுத்துக்காட்டாக , ஏன் நாம் ஜியோமெட்ரி எனப்படும் வடிவியல் படிக்கிறோம் ? நாம் வாழும் எல்லா கட்டிடங்களிலும் , நாம் பயன்படுத்தும் எல்லா கருவிகளிலும் ஜியோமெட்ரி பயன்படுத்தப்பட்டுள்ளது . சிவில் அல்லது மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களாக பள்ளி மாணவர்கள் பிற்காலத்தில் வரலாம் என்ற கருத்துருவை அடிப்படையாக கொண்டு , சிறு வயது முதலே ஜியோமெட்ரி எனும் திறன் சொல்லித்தரப்படுகிறது .

ப்ரிஸி ரைட்டிங் எனப்படும் சுருக்கி எழுதுதல் என்ற ஒரு விஷயத்தை ஆங்கில பாடத்தில் நாம் அனைவரும் பள்ளிகளில் படித்திருப்போம் . ரஃப் டிராப்ஃட் , ஃபேர் டிராப்ஃட் என்றெல்லாம் போட்டு எழுதிவிட்டு அத்துடன் மறந்திருக்கலாம் . ப்ரிஸி ரைட்டிங் – க்கு பின்னால் , வாழ்க்கைக்கான ஒரு பெரிய மதீப்பீடு உள்ளது .

“பேச வேண்டிய, எழுத வேண்டிய விஷயத்தை இரத்தின சுருக்கமாக அதே நேரத்தில் எதிரில் இருப்பவருக்கு புரியும் வகையில் சுருக்கி கொடுப்பதே நல்லது. அதிலும் நேரம் இல்லாது போனால், இதனை நிச்சயமாக செய்ய வேண்டும்”

இந்த மதீப்பீட்டை நாம் எவ்வளவு பேர் புரிந்து கொண்டிருக்கிறோம் , நம் ஆசிரியர்கள் இதனை சொல்லித்தருகிறார்களா ?

மேற்குறிப்பிட்டவை போன்று ஒரு திறனோ , மதிப்பீடோ நாம் படிக்கும் எல்லாவற்றிற்கும் பின்னால் நிச்சயம் இருக்கும் . அவற்றை சரியாக கண்டுபிடித்து புரிந்து கொண்டால் , கல்வி கசக்குமா என்ன ?

எப்படி புரிந்து படிப்பது ?

குழந்தைகள் எந்த மீடியத்தில் படித்தாலும் , அவர்கள் படிக்கும் ஒவ்வொரு வாக்கியத்தில் இருக்கும் எல்லா சொற்களுக்கும் என்ன அர்த்தம் என்று தெரிந்திருக்க வேண்டும் , அதன் மூலம் வாக்கியத்தின் அர்த்தத்தையும் புரிந்து கொண்டிருக்க வேண்டும் .

இதற்கு அடிப்படை சொல்லகராதியை பயன்படுத்துவது தான் . பலரின் வீட்டில் , சொல்லகராதி இருப்பதே இல்லை . குழந்தைகள் தூக்கி படிக்கும் அளவிற்கு அவர்களுக்கு பிடித்த , புரியும் வகையில் இருக்கும் சொல்லகராதிகளை வாங்கி , ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் பார்த்து புரிந்து கொள்ள சொல்லிக்கொடுங்கள் .

ஆரம்பத்தில் , அதிகமாக சொல்லகராதியை புரட்ட வேண்டிய அவசியம் இருக்கும் , அதையெல்லாம் பொருட்படுத்தாமல் , சொல்லகராதியை ஒர் உற்ற நண்பனாக பாவித்து அதனை எப்போதும் பயன்படுத்தி வந்தால் புரிதல் வந்து விடும் .

நம் கல்வி முறை பத்தாம் வகுப்பு வரை எல்லோரும் எல்லாவற்றையும் படித்து , எந்த படிப்பை மேற்படிப்பாக தேர்ந்தெடுப்பது என ஒரு விஸ்தாரமான பார்வையை அளிக்க வல்லது . பத்தாம் வகுப்பு வரை எல்லா பாடங்களையும் படிக்க வேண்டியது எல்லோருக்கும் இருக்கும் கட்டாயம் .

வெளி நாட்டினரை போல் , நடை , உடை , உணவு , வாழ்க்கை முறையில் மாறி விட்ட அல்லது மாற துடிக்கின்ற நாம் ஏன் இன்னும் குமாஸ்தாக்களை உருவாக்கும் , சொந்தமாக சிந்திக்க வைக்காத மெக்காலே கல்வி முறையின் அடிப்படையை கெட்டியாக பிடித்திருக்கிறோம் ?

கல்வி வியாபாரிகள் மெக்காலே கல்வி முறையை பின்பற்றுவதால் பலன் அடைகிறார்கள் , சமச்சீர் கல்வி போன்ற கல்வி சீர்திருத்தங்களை எதிர்க்கிறார்கள் . சென்னை பிராட்வே பள்ளியில் நடந்த ஆசிரியர் கொலை , தேர்வு காலத்தின் போது நிகழந்த பொறியியல் மாணவர்களின் தொடர் தற்கொலைகள் , பத்தாம் , பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளின் போது நிகழும் எண்ணிலடங்கா தற்கொலைகள் என்பது போன்று நடக்கும் பல்வேறு நிகழ்வுகளிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம் ? நிகழ்வு நடந்தவுடன் விழித்துக்கொள்ளும் மீடியாக்களும் , அரசும் உருப்படியாக என்ன செய்திருக்கிறது ?

இத்தனை நாள் கல்வியாளர்கள் கொடுத்த அழுத்தத்தாலும் , நீதிமன்றங்களின் தலையீடாலும் , ஒரு வழியாக சமச்சீர் கல்வி அமுலுக்கு வந்துள்ளது . உண்மையில் சமச்சீர் கல்வி வந்துவிட்டதா என்று நீங்கள் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு சென்று பார்த்தீர்களானால் , ஏற்கனவே படிக்கும் பாடப் புத்தங்களோடு , சமச்சீர் புத்தகங்களும் சேர்க்கப்பட்டு , மாணவர்களின் புத்தகப் பையில் சராசரியாக 2 கிலோ சுமையே ஏறியுள்ளது .

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் , திருட்டை ஒழிக்க முடியாது

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் , திருட்டை ஒழிக்க முடியாது தான் . கல்வி வியாபாரிகள் சமச்சீர் கல்வி எதற்காக என்பதனை அவர்களாக புரிந்துகொள்ளாதவரை நாம் என்ன செய்ய முடியும் ?

இது போன்ற அமைப்பு சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுவது யாரென்று பார்த்தால் , தான் செய்ய முடியாதவைகளை தன் குழந்தைகளை செய்ய வைக்க துடிக்கும் பெற்றோர்களும் , கல்வி நிறுவனங்களுக்கும் , சமுதாயத்தின் எதிர்பார்ப்புகளுக்கும் இடையில் சிக்கி தவிக்கும் மாணவர்களுமே !

Related Post

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன