நற்றிணை காதல்

நற்றிணை – சங்க கால காதல் வாழ்க்கை

5138 0

நற்றிணை காதல் வாழ்க்கை

தலைவன் தன்னைப் பிரியவே மாட்டான் என உறுதியாக நம்புகிற தலைவியின் உள்ளத்தில் தடுமாற்றம் இல்லை. அதேபோல் தலைவியைப் பிரியமாட்டேன் எனத் தன் நெஞ்சுக்குச் சொல்லும் தலைவனும் மனத்தெளிவுடன் இருக்கிறான். ஆனால் பிரிந்து போயிருக்கிற தலைவனும், தலைவன் வருகைக்குரிய காலம் தவறிவிட்டதால் வருந்தும் தலைவியும் வேறுதோற்றம் காட்டுகின்றனர்.

மற்றொருபுறம், சேர்ந்திருப்பது மட்டுமே முக்கியமில்லை; ஊரார் அலர் தூற்றாதவாறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் கவலை தலைவியையும் தோழியையும் தவிக்க வைக்கிறது.

தலைவன் தோழியின் உதவியுடன் தலைவியை மணந்து கொள்வதற்காகப் பிறர் அறியாமல் அழைத்துச் செல்லும்போது அச்சம் கலந்த இன்பம் அவர்களிடம் நிறைகிறது. தோழி தலைவியைத் தலைவனிடம் ஒப்படைத்து உருக்கமாகப் பேசும்போது ஒரு காதல் வாழ்வின் எதிர்கால மலர்ச்சியே நம் கண்முன்விரிகிறது. இப்பாடப்பகுதிப் பாடல்கள் இவ்வாறு காதலின் வெவ்வேறு உணர்வு நிலைகளைப் படம் பிடிக்கின்றன. இப்பாடல்களின் உள்ளடக்கம், உத்திகள், உருவமைப்பு ஆகியவற்றைத் தனித்தனித் தலைப்புகளில் நீங்கள் காணலாம்.

நற்றிணை பாடல் காட்சிகள்

இங்கு நற்றிணை – பாடப்பகுதி முதல் 10 பாடல்களின் உள்ளடக்கங்களைக் காணலாம். இணைதலும் பிரிதலும் கொண்டு அகவாழ்வின் நுட்பங்களைக் கவிஞர்கள் எடுத்துக் காட்டுவதைக் காணலாம்.

நின்ற சொல்லர் .. எனத் தொடங்கும் கபிலர் பாடல்

நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்
என்றும் என் தோள் பிரிபு அறியலரே
தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச்
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போலத்
தம் இன்று அமையா நம் நயந்தருளி
நறு நுதல் பசத்தல் அஞ்சிச்
சிறுமை உறுபவோ செய்பு அறியலரே

– (நற்றிணை – 1).

கபிலர்

குறிஞ்சித்திணையை மிகச் சிறப்பாகப் பாடிய கபிலர் குறிஞ்சிக் கபிலர் என்றே அழைக்கப்பட்டவர். புலவர்கள் போற்றும் புலவராக, பாரியின் ஆருயிர் நண்பராக, சங்கப் புலவர்களுள் மிகுதியான பாடல்களை வடித்தவராகக் கபிலரை அறிகிறோம். சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கிவள் உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே (சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவதுபோல, இவள் உயிர் மிகச் சிறியது; ஆனால் இவள் காதலோ மிகப் பெரியதாய் உள்ளது என்பது இதன் பொருள்) என்பது போன்ற அருமையான உவமைகளும், குறிஞ்சி நில வருணனைகளும், நுட்ப உணர்வு வெளிப்பாடுகளும் கபிலர் கவிதையைத் தனித்து எடுத்துக் காட்டுவன.

கபிலரின் சங்கப்பாடல்கள் 234 ஆகும். அவை நற்றிணையில் 20, குறுந்தொகையில் 29, கலித்தொகையில் 29, ஐங்குறுநூற்றில் 100, பதிற்றுப்பத்தில் 10, அகநானூற்றில் 16, புறநானூற்றில் 30 மற்றும் பத்துப்பாட்டில் குறிஞ்சிப்பாட்டு எனும் நூல்.

திணை : குறிஞ்சி

கூற்று : பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.

தலைவன் பிரியக் கருதியதை அறிந்த தோழி தலைவியிடம் அதனைத் தெரிவிக்கிறாள். தலைவனது அன்பையும் மனப்போக்கையும் நன்கறிந்திருக்கும் தலைவி, அவன் பிரியமாட்டான் என உறுதியாகக் கூறுகிறாள்.

தலைவி தோழியை நோக்கிக் கூறுகிறாள்: ‘தோழி! என் தலைவர் நிலைத்து நிற்கும் வாய்மைச் சொல்லுடையவர்; பழகப்பழக நீடிக்கும் இனிமையுடையவர்; ஒரு நாளும் என் தோள்களைப் பிரிந்தறியாதவர். அவரைப் போன்ற மேலானவர்களுடைய நட்பு தாமரைத் தாதையும் சந்தனத் தாதையும் ஊதி எடுத்துச் சந்தன மரத்தில் அமைத்த தேன் இறால் போன்ற மேன்மையுடையது. நீரில்லா உலகம் வாழ முடியாததுபோல, ‘அவரில்லாமல் நான் வாழமாட்டேன்’ என்பதை அவர் அறிவார். பிரிவினால் ஏற்படும் என் நெற்றிப் பசலைக்கே அஞ்சுபவர் என்னைப் பிரிதலாகிய சிறுமைச் செயல் செய்வாரா? சொல்!’

பாடலில் தெரியும் சுவை உவகைச் சுவை. (உவகை = மகிழ்ச்சி) தலைவியின் உவகை, தலைவன் மீது அவள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றியது. தலைவனது சொல்லும் செயலும் உணர்வும் மேலானவை என்பதை அவள் சொற்கள் உணர்த்துகின்றன. இலட்சியக் காதல் எப்படியிருக்கும் என்பதை இத்தலைவியிடம் தெரிந்து கொள்கிறோம் அல்லவா!

கபிலர், உயர்ந்த மானிடப் பண்புகள் சிலவற்றை இப்பாடலில் சுட்டிக் காட்டுகிறார்:

  1. சொன்ன சொல்லை மீறுவது கூடாது
  2. உண்மையான அன்புறவு நீடித்து இனியதாக இருப்பது.

நற்றிணை பாடல்  2

அழுந்துபட வீழ்ந்த .. .  எனத் தொடங்கும் பெரும்பதுமனார் பாடல்

அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய நெய்த்தோர் வாய
வல்லியப் பெருந் தலைக் குருளை மாலை
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்
காலொடு பட்ட மாரி
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே

– (நற்றிணை – 2).

பெரும்பதுமனார்

மீளிப் பெரும்பதுமனார் என்றும் இவர் வழங்கப்படுகிறார். பாலைத்திணையைச் சிறப்பாகப் பாடியவர். திருமணத்துக்கு முன்னர், தலைவியின் சிலம்பைக் கழற்றி நீக்கும் சிலம்புகழி நோன்பு என்னும் வழக்கம் இருந்ததை இவர் பாடலால் உணர்கிறோம்.

திணை : பாலை
கூற்று : உடன்போக்கில் செல்லும் தலைவனையும் தலைவியையும் இடைச்சுரத்தில் கண்டோர் தமக்குள் சொல்லிக் கொண்டது.
(உடன்போக்கு : தோழியின் தூண்டுதலால் தலைவியை மணந்து கொள்வதற்காகத் தலைவன் அவளைப் பிறர் அறியாமல் அழைத்துச் செல்லுதல். சுரம் : பாலைவழி)

கண்டோர் கூறுவது : ‘பெரிய குன்றம்; தழைத்த ஈச்ச மரங்கள் நிறைந்த காடு; காற்றுச் சுழன்றடிக்கிறது. புலிக்குட்டிகள் வழிச் செல்வோரின் தலைகளை மோதிச் சிதறிச் சிவந்த தலையும் குருதி படிந்த வாயுமாகக் காட்சி தருகின்றன. மாலைப் பொழுதில் அவை தாம் பதுங்கியுள்ள மரலின் தூறுகளைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. வழிநெடுக இண்டங்கொடிகளும் ஈங்கையும் பரவிக் கிடக்கின்றன. இத்தகைய கொடிய பாலை வழியில், இரவில், இந்த இளம்பெண்ணை முன்னே நடக்கவிட்டுப் பின்செல்லும் இந்தத் தலைவனின் உள்ளம் கொடியது; வேகக்காற்றுடன் மழைபெய்யும் போது பாறைகளைப் புரட்டி விடுகின்ற இடியைவிட மிகக் கொடியது இவன் உள்ளம்.’

இளையோன் உள்ளம்
காலொடு பட்டமாரி
மால்வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே

எனும் கண்டோர் கூற்றில் வெளிப்படையாகத் தெரிவது உயிரைப் பொருட்படுத்தாத ஒரு காதல் பிணைப்பு.

(கால் = காற்று; உரும் = இடி; மரல் = கற்றாழை; ஈங்கை = ஒருவகைக்கொடி)

 

நற்றிணை PDF

Natrinai Free Download PDF | eBook

Related Post

ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
ஆதிச்சநல்லூர் அகழாய்வு   ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும் தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ்…

மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கீழடி தொல்பொருட்களைப் பார்க்க வரும் மாணவ, மாணவிகள்

Posted by - ஏப்ரல் 14, 2020 0
  மதுரை உலகத் தமிழ் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கீழடி தொல்பொருட்களைப் பார்க்க வரும் மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலாவாக மதுரை திருமலை நாயக்கர் மகாலை பார்க்க வந்த…
- 3

அகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுப்பு

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  அகரம் அகழாய்வில் நீள வடிவ பச்சை நிறப் பாசிகள் கண்டெடுப்பு உள்படம்: அகரத்தில் நடந்த அகழாய்வில் கிடைத்த நீள வடிவ பச்சை நிற பாசி திருப்புவனம்…
- 6

கீழடி அருங்காட்சியகத்துக்கு மார்ச் மாதத்தில் அடிக்கல்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி அருங்காட்சியகத்துக்கு மார்ச் மாதத்தில் அடிக்கல்: அமைச்சர் பாண்டியராஜன் தகவல் அமைச்சர் பாண்டியராஜன்: கோப்புப்படம் கீழடி அருங்காட்சியகத்திற்கு மார்ச் மாதத்தில் அடிக்கல் நாட்டப்படும் என, தமிழ்…

தமிழகத் தொல்லாய்வுத் துறை கீழடி ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும்: பழ.நெடுமாறன்

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  தமிழகத் தொல்லாய்வுத் துறை கீழடி ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும்: பழ.நெடுமாறன் தமிழகத் தொல்லாய்வுத் துறை கீழடி ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டும் என்று தமிழர்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன