நற்றிணை காதல்

நற்றிணை – சங்க கால காதல் வாழ்க்கை

4272 0

நற்றிணை பாடல் 7

சூருடை நனந்தலை”

– நற்றிணை – 7

நல்வெள்ளியார்

இவர் பெண்பாற் புலவர் ஆவார். இவரது ஊர் மதுரை. நற்றிணையில் 2, குறுந்தொகையில் 1, அகநானூற்றில் 1 என இவரது பாடல்கள் நான்கே எனினும் அழகான வருணனைகளாலும், மறைமுக உணர்ச்சிச் சித்திரிப்பினாலும் உயர்ந்த தரமுடையவை அவை.

திணை : பாலை
கூற்று :

அறத்தொடு நிற்றலின் பின் (காதல் வெளிப்படுத்தப்பட்ட பின்பு) தலைமகன் உடனே மணந்து கொள்ளாமல், பொருள் தேடப் பிரிந்து போயிருக்கிறான். அவன் வருவதாகச் சொன்ன கார்காலம் வந்து விட்டது. தலைவி வருந்துகிறாள். மழைக்காலம் வந்துவிட்டதை அறியும் தலைவன் வந்துவிடுவான் எனத் தோழி தேற்றுகிறாள்.
தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள் : ‘யானை மூங்கில் நெல்லைத் தின்றுவிட்டு மகிழ்ச்சியுடன் உறங்கும் மலைப்புறம்; சந்தன மரங்கள் நிறைந்த “வாடு பெருங்காடு” அது. அங்கே பெருமழை பொழிந்தால் அச்சந்தரும் ஆழமான சுனைகளில் நீர் நிறையும்; மலைப்பக்கங்களில் அருவிகள் ஆர்ப்பரிக்கும்; கற்களைப் புரட்டிக் கொண்டு வேகமாக ஓடிவரும் காட்டாற்று வெள்ளம் மூங்கில்களை மூழ்கடித்துக் காட்டில் மோதி ஆர்ப்பரிக்கும். இதோ, இப்போதே மழை பொழிய வானம் மின்னி முழங்கிக் கொண்டிருக்கிறது.’

தோழியின் பேச்சு வெறும் மழை வருணனையாக மட்டுமே நின்று விடுகிறது. வெறும் வருணனையை மட்டுமே நோக்கமாகக் கொண்டு கவிதை அமைவது சங்க இலக்கியத்தில் இல்லை. ஆகவே தோழியின் பேச்சில் மறைபொருள் இருக்க வேண்டும். பல காலம் நீரின்றி வறண்டு கிடந்த சுனைகளும் அருவிகளும் காடும் செழிக்குமாறு மழை கனத்துப் பெய்யும் என்ற வருணனையில் பல நாட்கள் தலைவனைப் பிரிந்து தவித்துக் கொண்டிருந்த தலைவி மகிழுமாறு தலைவன் வந்துவிடுவான் என்ற இறைச்சி (குறிப்பு)ப் பொருள் அமைந்திருக்கிறது. அதேபோல் கவலையற்றுத் துயிலும் யானையும் இனிக் கவலையற்றுத் துயில விருக்கிற தலைவியைக் குறிப்பாக உணர்த்துகிறது.

நற்றிணை பாடல் 9

“அழிவில முயலும்”

நற்றிணை – 9

பாலை பாடிய பெருங்கடுங்கோ

‘பாலை பாடிய’ என்னும் அடைமொழி, இப்புலவர் பாலைத் திணையைச் சிறப்பாகப் பாடியவர் என்பதை வெளிப்படையாகக் காட்டுகிறது. இவர் சேர அரச மரபைச் சேர்ந்தவர். அதனால் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ எனவும் அழைக்கப்படுபவர். செல்வம் தேடுதலின் சிறப்பு – முறையற்ற வழியில் வரும் செல்வம் – செல்வத்தின் இழிவு – கொடை என்று இவ்வாறு தம் பாடல்களில் பொருள் பற்றிப் பல இடங்களில் இவர் கூறியிருக்கும் கருத்துகள் இவரை ஏனைய புலவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவன. இவர் மன்னர் குடியிற் பிறந்து வளர்ந்தமையால் இவ்வகைக் கருத்தோட்டம் இவருக்கு அமைந்திருக்கக் கூடும். ‘தலைவியைப் பிரிந்து, பிரிந்த இடத்தில் மனம் பொருந்தியிருப்பேனாயின் இரவலர்கள் என்னைத் துறந்து போகும் நாட்கள் மிகுதியாகட்டும்’ என வஞ்சினம் கூறும் இவரது பாடலின் தலைவன் இவரது கருத்தையே எதிரொலிக்கிறான் என்பதை உணரலாம்.

திணை : பாலை

கூற்று :

உடன் போகின்ற தலைமகன் தலைமகளுக்கு உரைத்தது. அதாவது பயணத்தில் துன்பமான பகுதிகளைத் தாண்டிய பின்பு சோலைகளும் சிற்றூர்களும் நிறைந்துள்ள எஞ்சிய பகுதியில் தலைவி விளையாடி மகிழ்ந்து மெல்ல வரலாம் எனக் கூறித் தலைவன் அழைத்துப் போகிறான்.

தலைவன் தலைவியை நோக்கிக் கூறுகிறான்: ‘தலைவி ! தம்செயல் சிதைவில்லாமல் முடிய வேண்டும் என்பதற்காகத் தெய்வத்தை வழிபடுவோர், அத்தெய்வத்தைக் கண்ணெதிரே கண்டாற்போல, உனக்காக ஏங்கியிருந்த வருத்தமெலாம் தீர உன்னை அடைந்துவிட்டேன். இப்போது நாம் சென்று கொண்டிருக்கிற வழியில் மாமரத்தின் அரும்புகளைக் கோதி மகிழ்ந்து குயில்கள் கூவுகின்ற குளிர்ந்த சோலைகள் நிறைந்துள்ளன; அடுத்தடுத்த சிறு சிறு ஊர்களும் உள்ளன. இனி நீ வருத்தமின்றி மகிழ்ந்து செல்லலாம். புன்க மரத்தின் தளிரைச் சுணங்கு நிறைந்த மார்பில் அப்பிக் கொண்டு, நிழல் காணும்போதெல்லாம் நெடுநேரம் தங்கி, மணல் காணும்போதெல்லாம் சிற்றில் செய்து விளையாடி மகிழ்ச்சியாகச் செல்லலாம்.!’

இவர்களுக்கு இரண்டு மகிழ்ச்சிகள் இருப்பது தெரிகிறதல்லவா! காதலுக்கு இருந்த இடையூறுகளைத் தாண்டி உடன்போக்கில் வந்துவிட்ட மகிழ்ச்சி ஒன்று: வழிநடைப் பயணத்தின் கொடுமைகளைத் தாண்டிப் பாதுகாப்பான பகுதிக்கு வந்துவிட்ட மகிழ்ச்சி இரண்டாவது. இயற்கையின் அரவணைப்பு தலைவிக்கும் தலைவியின் அரவணைப்பு தனக்கும் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியைத் தலைவனின் வருணனைகளில் காண்கிறோம்.

Related Post

கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் இணைகிறது மதுரை காமராசர் பல்கலைக்கழகம்: துணைவேந்தர் கிருஷ்ணன் பேட்டி மதுரை பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் (இடது) மதுரை கீழடி…
தமிழர் நிலத்திணைகள்

தமிழர் நிலத்திணைகள் மற்றும் வாழ்க்கை முறை

Posted by - ஜனவரி 26, 2019 0
திணை என்பது ஒழுக்கம் (வாழ்க்கை முறை).  திணை என்பது  பால், திணை என்பது ஒரு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதிகளுக்கான வாழ்வியல் இதை நம் தமிழர்கள் 2 வகைகளாக…

கீழடி உட்பட 3 இடங்களை இணைத்து தொல்லியல் சுற்றுலா

Posted by - ஜூலை 10, 2020 0
கீழடி உட்பட 3 இடங்களை இணைத்து தொல்லியல் சுற்றுலா: – அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல் அருங்காட்சியகங்கள் அமைந்த பின்பு கீழடி உட்பட 3 இடங்களை இணைத்து தொல்லியல்…
- 5

கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் முதல் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி 6-ம் கட்ட அகழாய்வில் முதல் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட செங்கல் சுவர். திருப்புவனம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில்…
- 8

கீழடி அருங்காட்சியகத்துக்கு நிதி: பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி அருங்காட்சியகத்துக்கு நிதி: பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம் கீழடி கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக பட்ஜெட்டில் 12.21 கோடி ரூபாய்…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன