நற்றிணை காதல்

நற்றிணை – சங்க கால காதல் வாழ்க்கை

4271 0

நற்றிணை பாடல் 10

“அண்ணாந் தேந்திய”

– நற்றிணை-10

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை)

திணை : பாலை

கூற்று : உடன்போக்கும் தோழி கையடுத்தது.

அதாவது தலைவியின் விருப்பப்படி அவளைத் தலைவனிடம் கைபிடித்துக் கொடுத்த தோழி ‘உன் சொல்லை நம்பி உன்னுடன் வரும் இவளை முதுமை எய்திய பிறகும் கைவிடாது பாதுகாப்பாயாக’ என்று சொல்லி இரவில் வழியனுப்பியது. (உடன்போக்கு: மணந்து கொள்வதற்காக யாருமறியாமல் தலைவன் தலைவியை அழைத்துச் சென்று விடல்: கையடுத்தல்: கைபிடித்துக் கொடுத்தல்)

தோழி தலைவனை நோக்கிச் சொல்கிறாள். ‘தலைவ! இனிய, கடுப்பு மிகுந்த கள்ளையும் அணிமணிகள் பூண்ட பெரிய தேர்களையும் உடைய சோழ மன்னர்கள் கொங்கரை வென்று அடக்குவதற்காக ஒரு மாவீரனைப் பணியமர்த்தினர். அவன் யானைகள் நிறைந்த பேஎர் எனும் ஊரின் தலைவனான பழையன் ஆவான். அவனது தனிச்சிறப்பு அவனிடமிருந்த குறிதப்பாத வேற்படை. அந்த வேல்போல என்றும் தவறாதது உன் வாக்குறுதி எனத் தலைவி நம்பி ஏற்றுக் கொண்டிருக்கிறாள். இப்போது நான் உன்னிடம் ஒப்படைக்கும் இத்தலைவியின் அண்ணாந்து உயர்ந்த மார்புகள் தளர்ந்தாலும், பொன்மேனியில் நீலமணிபோலப் படர்ந்து கிடக்கும் நீண்ட அழகிய கூந்தல் நரைத்தாலும் இவளைப் பிரியாமல் பாதுகாப்பாயாக !‘

அண்ணாந்து ஏந்திய வனமுலை தளரினும்….
நன்னெடுங் கூந்தல் நரையொடு முடிப்பினும்

என்ற அடிகளில் தோழி வெளிப்படுத்தும் உணர்வு உண்மைக் காதலின் உயர்வைப் புலப்படுத்துகிறது. வரலாற்றுத் தலைவனான பழையனின் குறிதப்பாத வேலை உவமையாக்கியதன் மூலம் தலைவன் தலைவிக்குத் தந்த வாக்குறுதியின் தீவிரத் தன்மை புலப்படுத்தப்படுகிறது.

நற்றிணை பாடல் 13

“எழாஅயாகலின்”

– நற்றிணை – 13).

திணை : குறிஞ்சி
கூற்று : இயற்கைப் புணர்ச்சியின் பின் தலைவியின் வேறுபாடு கண்ட தோழி, தலைவி மறைத்துப் பேசுவது கண்டு சொல்லியது. அதாவது தலைவனுடன் தலைவிக்கு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்திருக்கிறது. தலைவியின் கண்சிவப்பு முதலிய உடல் வேறுபாடுகள் கண்டு இதை ஊகித்த தோழி தலைவியிடம் காரணம் கேட்கிறாள்; தலைவி உண்மையை மறைத்துப் பேசுகிறாள்.

எனினும் அவளது களவு ஒழுக்கத்தைத் தான் அறிந்து கொண்டிருப்பதைத் தோழி மறைமுகமாக உணர்த்துகிறாள். (இயற்கைப் புணர்ச்சி : தலைவனும் தலைவியும் முதன்முதலாகத் தாமே கண்டு புணர்தல்)

தோழி தலைவியை நோக்கிப் பேசுகிறாள்: ‘தினைப்புனம் காப்போர், புனத்தைத் தின்றழிக்க வந்த பன்றி முதலிய விலங்குகளை எய்துகொன்று, அவற்றினின்றும் பறித்தெடுத்த அம்புபோலச் சிவந்த குளிர்ந்த கண்களையும் அழகிய தோள்களையும் உடைய தலைவியே ! ஓங்கிய மலையில் மயில்களின் கூடுகள் உள்ளன; அவற்றின் மீது வேங்கைப் பூக்கள் உதிர்வது கொல்லன் உலையில் பொறிகள் சிதறுவது போல் உள்ளது. தினைக்கதிர்களைக் கிளிகள் கவர்ந்து போவதை அம்மயில்கள் அறியும். கிளிகளோ தம் செயலை யாரும் அறியவில்லை என நினைத்துக் கொள்கின்றன. சரி. அக்கிளிகளை ஓட்டுவதற்காக இவ்விடத்தைவிட்டு நீ எழுந்து வராவிட்டாலும், அயலாரிருக்கும் இவ்விடத்தில் உன் அழகு கெடுமாறு அழாமலாவது இரு’.

கிளிகளின் களவை மயில்கள் அறிந்திருப்பது கிளிகளுக்குத் தெரியாது என்னும் வருணனை தலைவியின் களவைத் தோழி அறிந்திருப்பது தலைவிக்குத் தெரியாது என்னும் குறிப்புப் பொருளை உணர்த்துகிறது. விலங்கின் மீது பாய்ந்து மீண்டும் பறித்தெடுக்கப்பட்ட சிவந்த அம்பு, ஒரு தலைவன் மீது பாய்ந்து மீண்ட தலைவியின் சிவந்த கண்ணுக்கு உள்ளுறை. ‘அழாதே’ என்பது அயலார் புரிந்து கொண்டு அலர்தூற்றக் கூடும் என்ற எச்சரிக்கை ஆகும்.

நற்றிணை பாடல் 17

“புணரிற் புணராது பொருளே”

– நற்றிணை – 16

சிறைக்குடி யாந்தையார்

சிறைக்குடி எனும் ஊரைச் சார்ந்தவர் ஆந்தையார் எனும் இப்புலவர். இவர் பாடல்கள் தலைவன்-தலைவியருக்கிடையேயுள்ள, பிரியவே முடியாத குன்றாத காதல் பெருக்கைத் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. ஒரு பூவிதழ் இடையே வந்தாலும் பல ஆண்டுகள் பிரிந்திருந்தாற் போலத் துடிக்கும் மகன்றிற் பறவைகளின் உணர்ச்சியைத் தலைவன் – தலைவியிடையே கண்டு பாடியவர் இப்புலவர்.

திணை : பாலை

கூற்று : பொருள் கடைக்கூட்டிய நெஞ்சினை நெருங்கித் தலைவன் செலவழுங்கியது.

அதாவது, தலைவியைப் பிரிந்து சென்று பொருளீட்டத் தூண்டும் நெஞ்சை நோக்கிப் ‘பொருளைவிடத் தலைவியின் இன்பமே சிறப்பானது’ என்று கூறிப் பயணத்தை நிறுத்திவிடுதல். (பொருள் கடைக்கூட்டல் = பொருளைத் தேடுமாறு தூண்டல்; செலவு அழுங்குதல் = பயணத்தை தள்ளிவைத்தல்)

தலைவன் பேசுகிறான்: ‘என் நெஞ்சே ! தலைவியோடு சேர்ந்து மகிழ்ந்திருந்தால் பொருள் கிட்டாது என்பது உண்மையே ! ஆனால் பொருளுக்காக அவளைப் பிரிந்து சென்றால், அவளது புணர்ச்சி என்றுமே கிட்டாமல் போய்விடும்.

புணரிற் புணராது பொருளே பொருள்வயிற்
பிரியிற் புணராது புணர்வே

ஆகவே இவ்விரண்டையும் சீர்தூக்கிப்பார். நல்லது எதுவோ அதனைத் தேர்ந்தெடு. பொய்கை நீரில் மீன்செல்லும் பாதை இருந்த இடம் தெரியாது உடனே மறைவது போலப் பொருள் உடனே மறைந்து போகும். இந்த உலகையே மரக்காலாகக் கொண்டு ஏழு மரக்கால் அளவுக்குப் பெரும் நிதியைப் பெறுவதானாலும் அதனை நான் விரும்பேன். தலைவியின் செவ்வரி பரந்த குளிர்ந்த கண்கள் என்னை விரும்பி இனிமையாகப் பார்க்கும் பார்வையால் நான் பிணைக்கப்பட்டேன். பொருள் எப்படியோ போகட்டும்!’

பிரிந்தால் தலைவி இறந்து போவாள் என்பதைக் குறிக்கவே தலைவன் “பிரியின் புணராது புணர்வே” என்று சொல்கிறான். அவள் கண்களின் ஈர்ப்பு எவ்வளவு பெருநிதியையும் துச்சமாகக் கருதச் செய்யும் என்பதைச் ”சேயரி மழைக்கண் அமர்ந்தினிது நோக்கமொடு செகுத்தனன்” என அவன் கூறுவதால் உணரலாம்.

Related Post

அகத்திணை - 2

சங்க கால காதல் மற்றும் களவு – அகத்திணை

Posted by - ஏப்ரல் 19, 2019 3
களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாரு தம் காதலை மறைத்து பழகுதல் மற்றும் உறவுகொள்லுதல் ஆகும். பெரும்பாலும் அகத்திணையில் களவு பற்றியே அதிகம்...
அதியமான் கோட்டம்

அதியமான் நெடுமான் அஞ்சி

Posted by - ஜூன் 28, 2019 0
ஆயுதங்கள்எல்லாம் பகைவர்களின் ரத்தம் தோய்ந்து அவர்களின் கிழிந்த சதைகள் ஒட்டி நிறம் மாறி கூர் மங்கிகொல்லனிடத்தில் சரிசெய்ய வைக்கப்பட்டுள்ளன...
அகத்திணை - 5

கீழடி அருங்காட்சியகத்துக்கு நிதி: பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி அருங்காட்சியகத்துக்கு நிதி: பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம் கீழடி கீழடியில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க தமிழக பட்ஜெட்டில் 12.21 கோடி ரூபாய்…

கீழடி: இங்கேயும் ஒரு சமவெளி நாகரிகம்

Posted by - ஆகஸ்ட் 7, 2020 0
  கீழடி: இங்கேயும் ஒரு சமவெளி நாகரிகம் வைகை நதிக் கரையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வளமார்ந்த நகர நாகரிகம் இருந்ததற்கான தொல்பொருள் சான்றுகள் கீழடி அகழ்வாய்வுகளில்…

இலெமூரியா: தமிழரின் கடைசிக் கண்டம், தொலைந்த கண்டம்

Posted by - ஏப்ரல் 19, 2020 0
இலெமூரியா தமிழரின் கடைசிக் கண்டம் இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று…

Leave a comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன